Monday, May 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 455

உத்தவர் நந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவரை ஆசுவாசப்படுத்தினார்.

உங்களால் இம்மனித குலமே பெருமையடைந்தது. அனைவரும் புகழ்ந்தேத்தும் இறைவன் ஸ்ரீமன் நாராயணனிடம் புத்திரபாசத்தை வைத்துள்ளீர்களே.

கண்ணனும் பலராமனும் படைப்பின் காரணமாவார்கள். அவர்களே மூல புருஷர்கள். அனைத்தையும் படைத்து அவற்றின் உட்புகுந்து பரிணமிக்கச் செய்பவர்கள்.

உயிர்நீங்கும் தறுவாயில் மனத் தூய்மையுடன் கணநேரம் கண்ணனை நினைப்பவர்களின் கர்ம வாசனைகள் அனைத்தும் அழியும். அப்போதே அவர்கள் ஆத்மாவை உணர்ந்து முக்திநிலையை அடைகிறார்கள்.

நீங்களும் யசோதா அம்மாவும் மூலப்பொருளிடத்தில் வாத்ஸல்யத்துடன் விளங்குகிறீர்கள். இதை விட அருஞ்செயல் ஏதேனும் உளதா?

கண்ணன் வெகு விரைவில் இங்கு வருவான். நீங்கள் வருந்தவேண்டாம்.

கண்ணனுக்கு எதுவுமே தன்னுடையது என்ற எண்ணம் இல்லை. அவருக்குப் பிரியமானது, பிரியமற்றது, மேலானவர், கீழானவர், நல்லவர், கெட்டவர் என்ற பேதங்கள் இல்லை.

அவருக்குத் தாய், தந்தை, உற்றார், உறவுனர், உடல், பிறவி எதுவுமே இல்லை.

அவருக்கென்று தனித்துச் செய்யவேண்டியதும் ஒன்றுமில்லை.

சான்றோர்களைக் காக்க ஸத்வ குணத்தை எடுத்துக்கொண்டு லீலை செய்கிறார்.  தேவராகவும், மனிதராகவும் மட்டுமின்றி பன்றி, மீன் போன்ற விலங்குகளாகவும் கூட பிறவியெடுத்து தர்மத்தை நிலைநிறுத்துகிறார்.

குணங்களுக்கப்பாற்பட்ட அவர் செய்ய வேண்டிய செயலுக்கேற்ப ஸத்வ, ரஜஸ், தமஸ் முதலிய குணங்களைக் கைக்கொள்கிறார்.

நாம் வேகமாகச் சுழலும்போது உலகமே வேகமாகச் சுழல்வதாக உணர்கிறோம். அதுபோல் நான் எனது என்னும் மாயக் கண்ணாடிகளை மாட்டிக்கொண்டு ஆத்மாவானது அனைத்தும் தன் செயல் என்று எண்ணுகிறது.

கண்ணன் உங்கள் இருவரின் புதல்வர் மட்டுமல்ல. உலகின் தலைவர் ஆவார்.

நீங்கள் காண்பது, செய்யும் செயல், அனைத்தும் கண்ணனன்றி வேறில்லை.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பொழுது புலரத் துவங்கியது.

கோகுலத்துப் பெண்டிர் எழுந்து வாசலில் தீபங்களை ஏற்றிவைத்தனர். இனிமையான குரலில் பாடிக்கொண்டே தயிர்கடைதல், மாடு்கறத்தல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கினர்.

இவ்வொலிகளுடன் அவர்களது வளையொலிகளும் காசும் பிறப்பும் உராய்ந்து எழுப்பும் ஒலிகளும் சேர்ந்து தாளகதியுடன் கூடிய பக்க வாத்தியங்கள் போல் இருந்தன.

இந்த மங்கல ஒலியால் நாற்றிசைகளில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகுகின்றன. திருமகளுக்கு மிகவும் பிடித்த இசை இதுவே.

அதிகாலையில் தயிர் கடையும் ஒலி கேட்கும் வீட்டில் அவள் நித்ய வாசம் செய்கிறாள்.

வாசலில் வந்து பார்த்த கோபிகள், நந்தகோபர் வீட்டில் தங்கரதம் நிற்பதைக் கண்டனர்.

அன்றைக்கு அக்ரூரர் வந்த அதே ரதம். கண்ணன்தான் வந்திருக்கிறானோ.. என்ற எண்ணமே இனித்தது. அவன் வரமாட்டான் என்பதையும் அறிந்திருந்தனர். அக்ரூரர் வந்தாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. ரதம் வந்த செய்தி காற்றாய்ப் பரவியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment