Saturday, May 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 460

உத்தவர் சில மாதங்களுக்கு வ்ருந்தாவனத்திலேயே தங்கினார்.
அவருக்கு அந்த வ்ரஜ பூமியை விட்டு கண்ணனிடம் திரும்பிச் செல்லக்கூட மனம் வரவில்லை.

ஒவ்வொரு நாளும் கண்ணனின் தோழர்களும், நந்தரும் உத்தவரை அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாகக்‌ காட்டினார்கள். அங்கு நிகழ்ந்த லீலையை விவரமாகச் சொல்லி அபிநயித்தும் காண்பித்தனர்.

இந்த மாட்டு வண்டியைப் பாருங்கள். இதனுள் ஒரு அசுரன் ஒளிந்திருந்தான். கண்ணன் தன் பிஞ்சுக்கால்களால் விட்ட உதையால் வண்டி நொறுங்கியது. அசுரனும் மாண்டான்.

அதோ அந்த முறிந்த மரங்கள் தெரிகின்றதா? உரலை இழுத்துக்கொண்டு அவற்றின் நடுவில் போனான் கண்ணன். மரங்கள்‌முறிந்து அவற்றிலிருந்து இரண்டு தேவ குமாரர்கள் சென்றனர். இதோ அன்று யசோதாம்மா கண்ணனைக் கட்டிவைத்த அதே உரல்தான் இது. 

இந்தத் தூணைப் பாருங்கள். வெண்ணெய்யை முழுங்கிவிட்டு இந்தத் தூணில் கையைத் தடவிவிடுவான். அவன் வெண்ணெய்யைத் தடவித் தடவி வழவழவென்று ஆகிவிட்டது.

இதோ இந்த மாடு. இது கண்ணன் பிறந்த அன்றே பிறந்தது. இங்குள்ள அத்தனை பசுக்களுக்கும் பெயர் வைத்தவன் கண்ணனே.

இந்தக் கன்றைப் பாருங்கள். இது எப்போதும் கண்ணனுடனேயே இருக்கும்.

இந்த யமுனையில்தான் தினமும் நாங்கள் ஜலக்ரீடை செய்வோம். 
இது காளிய மடு. இந்த மடுவின் நீர் காளியனால் விஷமாகியிருந்தது. நாங்களெல்லாரும் இதைப் பருகி உயிரை விட்டுவிட்டோம். கண்ணன் தன் அமுதப் பார்வையால் எங்களை எழுப்பினான். காளியனை அடக்குவதற்காக, அந்தப் பாம்பின் வழுக்கும் தலைமீதேறி ஒரு நடனம் செய்தான் பாருங்கள். அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியே போனான் கடலுக்கு. 

இந்த கூட்டைப் பாருங்கள். இது அகாசுரனின் உடல். எலும்புக்கூடாகிவிட்டது. நாங்கள் இதிலேறி கண்ணனுடன் விளையாடுவோம். 

இந்த மலையைத் தான் கண்ணன் ஏழு நாள்கள் தாங்கினான். இதன் சுனை நீர் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாறைகளைப் பாருங்கள். இந்த வண்ணப்பொடிகளைக் கொண்டு கண்ணனுக்கு அலங்காரம் செய்தால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த இடத்தில்தான் கேசியை வதம் செய்தான். இந்த ஆலமரத்தின் அடியில்தான் தினமும் அமர்ந்து குழலூதுவான். 

இவ்விடத்தில்தான் மண்ணை அள்ளி உண்டான். 

ஒவ்வொரு இடமாகக் காட்ட காட்ட, உத்தவர் நெகிழ்ந்துபோனார். முக்கியமாக அங்கு தங்கியதில் அவர் கவனித்த விஷயம், இருபத்து நான்கு மணி நேரங்களும்‌ கண்ணனைத் தவிர வேறு பேச்சே இல்லை. அவனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை.

எல்லா நேரங்களிலும் கோகுலத்தின் வீடுகளிலிருந்து கண்ணனின் புகழும் லீலைகளைச் சொல்லும் பாடல்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

திரும்ப மதுரா செல்வதற்கு மனமே இல்லையென்றாலும் கண்ணன் மதுராவில் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பான் என்ற எண்ணம் வந்ததால் கிளம்ப முடிவெடுத்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment