Saturday, May 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 467

போருக்கு அழைப்பு விடுக்கும் கண்ணனின் சங்கொலி கேட்டு ஜராசந்தன் கத்தினான்.

ஹே! பதரே! சிறு குழந்தைகளுடன் நான் போர் புரிவதில்லை. என் மாப்பிள்ளையைக் கொன்ற மடையன் நீ. உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன். விலகி ஓடிப்போய் ஒளிந்துகொள். ஹே! பலராமா! நீ வா போருக்கு. என் கரங்களால் அடிபட்டு வானுலகம் செல்ல வா. அல்லது திறமையிருந்தால் என்னைக் கொல்.

பலராமன் கண்ணனைப் பார்க்க,‌ அவன் பதிலிறுத்தான்.

வீரர்கள் தற்பெருமை பேசுவதில்லை. மருமகன் இறந்ததால் துக்கத்திலிருக்கும் உன் பேச்சை அலட்சியம் செய்கிறோம். போர் துவங்கட்டும். என்றான்.

ஜராஸந்தனின் படை கண்ணன் மற்றும் பலராமனைச் சுற்றி வளைத்தது. சூரியனை மேகம் மறைப்பது போலவும், அக்னியை சாம்பல் மறைப்பது போலவும் இருந்தது.

கண்ணனின் தேர்க்கொடி கருடனைக் கொண்டது. பலராமனின் தேர்க்கொடியில் பனைமரம் பொறிக்கப்பட்டிருக்கும். 

கோட்டை வாயிலை அடைத்துவிட்டதால் நகர மக்கள் கோட்டையின் மீதும், மாடங்கள், கோபுரங்களின் மீதும் ஏறி போரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கண்ணனையும் பலராமனையும் காணாமல் வருத்தமுற்றனர்.

எதிரியின் படைகளால் மூடப்பட்டிருப்பதால் மக்களின் மனம் வாடுவது கண்டு கண்ணன் சார்ங்கத்தை எடுத்தான். அதன் நாணை ஏற்றி டங்காரம் செய்தான். கணீரென்ற அதன் ஒலி கேட்டு படை வீரர்களுக்கு சித்தப்ரமை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

பின்னர் அதை மண்டலம் போல் வளைத்து தீவட்டியின் வட்டம்போல அம்புமழை பொழிந்தான் கண்ணன். சுழன்று சுழன்று அடித்ததில் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையும் ஒன்றுமில்லாமல் ஆயிற்று.

ஆயிரக்கணக்கான யானைகளும், குதிரைகளும் மத்தகம் பிளக்கப்பட்டும், கழுத்தறுபட்டும் விழுந்தன. தேர்கள் சின்னாபின்னமாயின. வீரர்களின் உடல்களின் பாகங்கள் மலைபோல் குவிந்திருந்தது.

குருதியாற்றில் கைகளும், கால்களும் தலைகளுமாக மிதந்தன. போர்க்களத்தைக் காணொலிபோல் விவரிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ஜராசந்தனின் சேனை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

உண்மையில் உலகையே காத்து அழிக்கும் பகவானுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இருப்பினும் மனிதனாக வந்திருப்பதால் அவனது போர்த்திறத்தையும், வீரத்தையும் பறைசாற்ற போர்க்களக்காட்சியை விரிவாக  எடுத்துரைக்கிறார் வியாஸர்.

அனைத்து சேனைகளையும் இழந்து ஆயுதங்களும் இன்றி தனி ஒருவனாகத் தலை குனிந்து நிற்கும் ஜராசந்தனை சிங்கத்தைப்போல் பிடித்தான் பலராமன். வருணபாசத்தால் அவனைக் கட்டத் துவங்கினான்.

பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டுமெனில் இன்னும் நிறைய துஷ்டர்கள் போர் செய்ய  வரவேண்டும்‌. எனவே இவனை உயிருடன் விடலாம் என்றான் கண்ணன்.

ஜராசந்தனை விடுவித்து விரட்டிவிட்டனர். அவன் மிகுந்த அவமானத்தால் வெட்கமடைந்து தவம் செய்யக் கிளம்பினான். அவனை சிசுபாலன் தடுத்தான். 

யதுவம்சத்தினரின் வெற்றி அவர்களது வினைப்பயனே அன்றி வேறில்லை. அவர்களுக்கு வீரமெல்லாம் கிடையாது. மாடு மேய்ப்பவர்கள். எனவே, மனம் தளரவேண்டாம். சில காலம் கழித்து மீண்டும் போர் தொடுத்து வெல்லலாம் என்று அமைதிப்படுத்தி மகதத்தில் கொண்டு விட்டான்.

கண்ணனும் பலராமனும் போரை முடித்து கோட்டைக்குள் நுழைந்ததும், நகர மக்கள் பயம் நீங்கி மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர். சங்குகள், துந்துபிகள், பேரிகள் ஆகியவற்றை முழக்கிக்கொண்டும் பல்வேறு வாத்யங்களை இசைத்துக்கொண்டும் நடனமாடியும் பூக்கள் தூவியும் வரவேற்றனர்.

நகரவீதிகளை நீர் தெளித்துக் கோலமிட்டு, தீபமேற்றி தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர்.

எதிரி வீரர்கள் அணிந்திருந்த எண்ணற்ற ஆபரணங்களையும், மற்ற செல்வங்களையும் கொண்டு வந்து மன்னரான உக்ரசேனரின் காலடிகளில் சமர்ப்பித்தான் கண்ணன்.

இவ்வாறு இருபத்து மூன்று அக்ஷௌஹிணிப் படைகளைத் திரட்டிக்கொண்டு பதினேழு முறை போர் செய்ய வந்தான் ஜராசந்தான். ஒவ்வொரு முறையும் படைகள் அனைத்தையும் இழந்து தனி ஒருவனாக உயிர்ப்பிச்சை பெற்று தன் நகரம் திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment