Saturday, September 1, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 86 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 30

ப்ரக்ருதியின் செயல் தத்வங்களான இருபத்து நான்கினையும் விளக்கினார் கபிலர்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்‌ பஞ்ச மஹாபூதங்கள்.
கந்தம்(மணம்), பொறி-புலன்கள்‌ பத்து
காது, தோல், கண், மூக்கு, நாக்கு ஆகிய ஐந்தும் அறிவுப்புலன்கள் (ஞானேந்திரியங்கள்).

பேச்சு (வாக்கு), கை, கால், பிறப்புறுப்பு, கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு இவை ஐந்தும் செயற்புலன்கள்.
மனம் (உணர்தல்), புத்தி (தெரிந்து அறிதல்), அஹங்காரம் (தானெனும் எண்ணம்), சித்தம் (பகுத்தறிவு) இவை நான்கும் அந்தர்முகமான இந்திரியங்கள் (அந்தக்கரணங்கள்).

அவற்றின்‌ செயல்கள் ஸங்கல்பம் (எண்ணுதல்), நிச்சயம் (தீர்மானம்), அபிமானம், சிந்தை ஆகியவை.
இவ்வாறு ஸகுண ப்ரும்மத்தின் சரீர அமைப்பு இருபத்து நான்கு தத்வங்கள்‌ கொண்டது. இருபத்தைந்தாவது தத்வம் காலம் ஆகும்.

காலம் தனியாக இல்லாமல் புருஷனான பகவானின் ஸம்ஹார சக்தியாகக் கருதப்படுகிறது.
மாயையின் செயலுருவான உடலையே ஆன்மா என்று எண்ணி அகங்காரம்‌ கொண்டு 'செயல்புரிபவன் நானே' என்றெண்ணும் ஜீவனுக்கு காலத்தைக் கண்டு பயம் உண்டாகிறது.

பகவான் ஒருவரே. தன் மாயா சக்தியால் அனைத்து ஜீவராசிகளின் ஜீவனாகவும், வெளியில் காலத்தைக் கணக்கிடும் காலனாகவும் விளங்குகிறார். அவர் எந்த மாறுதலையும் அடைவதில்லை.

அவரே இருபத்தைந்தாவது தத்வமாகவும் கூறப்படுகிறார்.

ஜீவன்களின் கர்மவினைகளிகளின் பயன் முக்குணங்களின் கலப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறது.

முதலில்,
பகவான் தன் சித்சக்தியை ஜீவராசிகளின் தோற்றத்திற்கு இடமான ப்ரக்ருதியில் விடுத்தான். அதிலிருந்து ஒளிமயமான மஹத் தத்வம் தோன்றியது.

மறைதல், மாறுதல் முதலியவை அற்றதும் இந்த ப்ரபஞ்சத்தின் முளையானதுமான மஹத் தத்வம் தன்னுள் அடங்கிய ப்ரபஞ்சத்தை வெளிப்படுத்த தனது ஸ்வரூபத்தை மறைத்து நிற்கும் இருளைத் தன் ஒளியினால் அகற்றியது.

மஹத் தத்வம் ஸத்வ மயமானது. தூய்மையானது. பகவானை அறியும் சாதனமாவது. ராக த்வேஷமற்றது. பகவானின் நான்கு வியூகங்களில் ஒன்றான வாசுதேவனாக அறியப்படுகிறது.
சித்தம்‌ என்றழைக்கப்படுவதே மஹத் தத்வம் ஆகும்.

சித்தத்தின் அதிஷ்டான தேவதை க்ஷேத்ரக்ஞன். உபாசனை தெய்வம் வாசுதேவன்.

அஹங்காரத்தின் அதிஷ்டான தேவதை ருத்ரன். உபாசனா தேவதை ஸங்கர்ஷணன்.

புத்தியின் அதிஷ்டான தேவதை ப்ரும்மா. உபாசனா தேவதை ப்ரத்யும்னன்.

மனத்தின் அதிஷ்டான தேவதை சந்திரன். உபாசனா தெய்வம் அனிருத்தன்.

தண்ணீர் மண்ணின் சம்பந்தமின்றி இருக்கும்போது, அதாவது நதி, குளம், ஏரி என்று உருவம் ஏற்காதபோது அதன் தன்மைகளான அலை, நுரை, சத்தம் ஆகியவற்றை விட்டு அமைதியாய் தூய்மையாய் இருக்கிறது.

அதுபோல் சித்தத்தின் இயல்பு தூய்மை மற்றும்‌ அமைதி ஆகும்.‌
மஹத் தத்வத்தின் அசைவினாலேயே முக்குணங்களும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும், பொறி -புலன்களும், மனமும் தோன்றின.

இந்த அஹங்கார தத்வமே ஸங்கர்ஷணன் ஆகும்.
ஒவ்வொரு தத்துவத்தின் தன்மையையும், அவற்றின் உற்பத்தியையும் மிக விரிவாக விளக்கினார் கபிலர்.

கதைகளை மட்டும் படித்துக்கொண்டுபோனால் சுவாரசியம்‌ மிகும் தான். ஆனால், 18000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீ மத் பாகவதத்தின் மிகச் சிறு பகுதியே பகவானின் உண்மை ஸ்வரூபத்தின் இந்த தத்வங்கள்.

இவற்றை ஒருமுறையாவது படிக்கும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம் என்றே எழுதப்படுகிறது. இருப்பினும்‌ இதுவும்‌ மிகவும் சுருங்கச் சொல்லப்பட்டதேயாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment