Saturday, September 15, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 98 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 42

கபிலர் தொடர்ந்து ஜீவனின் நிலைமையை விளக்குகிறார்.


கருப்பைக்குள் ஞானத்தோடு இருக்கும்‌ ஜீவன் வெளியில் வந்ததும் அனைத்தையும் மறந்து விடுகிறது.

குழந்தையின் எண்ணத்தையறிந்து வளர்க்கத் தெரியாதவர்களால் வளர்க்கப்படும் அக்குழந்தை அது பசியால் அழும்போது வயிற்றுவலி என்று நினைத்து வேப்பெண்ணெய்யையும், வயிற்றுவலியால்‌அழும்போது பசியென்று பாலையும்‌கொடுக்கிறார்கள்.

எதையும் சொல்லத் தெரியாமல், பரிதாபமாகக் கஷ்டப்படுகிறது.

வியர்வையால் உண்டாகும் புழு பூச்சிகள் கடிக்கும்போது சொறிந்துகொள்ளவோ, எழுந்து உட்காரவோ சக்தியற்று விளங்குகிறது
இவ்வாறு ஐந்து வயது வரை குழந்தைப் பருவமும், சிறுபிள்ளைப்பருவமும் (பௌகண்டம் ஐந்து முதல் பதினாறு வயது வரை)
கழிகிறது. பின் யௌவனமான காளைப்பருவத்தில் விதம்விதமான விருப்பங்களால் அலைக்கழிக்கப்படுகிறான்.

அவை கிட்டாமல் கோபமடைகிறான். சாதிக்க முடியாமல் போனால் துக்கமடைகிறான்.

வயது ஆக ஆக, கர்வமும் கோபமும் வளர்கிறது. இவனைப் போன்று சுகபோகங்களைத் தேடிய லை பவர் களுடன் பகைமை கொள்கிறான். அது அவன் அழிவிற்கே காரணமாகிறது.

அறியாமையால் புத்தி மாறாட்டம்‌கொண்டு பஞ்ச பூதங்களுடைய இவ்வுடலைத்தான் என்று எண்ணுகிறான்.

இவ்வுடல் கிழட்டுத்தனம், நோய் போன்ற பல துன்பங்களுக்கு ஆளாகிறது. அது அறியாமை மற்றும் கர்மத்தினால் கட்டப்பட்டுள்ளது.
ஜீவாத்மா அவ்வுடலைப் பற்றிக்கொண்டு நிற்கிறது.

அதைக் காப்பாற்றப் பல கர்மங்களைச் செய்கிறது. கர்மங்களின் பயனாக உடல் கிடைக்கிறது. அதைக் காக்க மீண்டும் கர்மங்கள். இப்படிக் கர்மங்களாலேயே கட்டப்பட்டு திரும்ப திரும்ப பிறவித்தளையில் உழல்கிறது.
வயிற்றுக்காகவும் இன்பசுகத்திற்காகவும் பாடுபடும் ஜீவன் பாவாத்மாக்களோடு நட்புகொண்டு பாவச் செயல்களில் ஈடுபடுவானாகில் நரகத்தையே அடைகிறான்.

தீயோர் இணக்கத்தால்
உண்மையுணர்தல், அகமும் புறமும் தூய்மையாக்கும் சௌசம், தயை, நாவடக்கம், பரமபுருஷார்த்தத்தில் செல்லும்‌ மனம், தனதான்யமாகிற செல்வம், தவறான செயல்களைக் கண்டு வெட்கம், புகழ், பொறுமை, புலனடக்கம், மேன்மை பற்றிய சிந்தனை அனைத்தும் பாழ்படும்.
ஆகவே, தீய செயல்கள் புரிவோர், உடலே ஆன்மா என்ற பற்றுடையோர், பெண்கள் பின் அலைவோர், மனநிறைவற்ற அஸத்துக்கள் ஆகியோருடன் ஒருபோதும்‌ நட்பு கொள்ளக்கூடாது.

மற்ற சேர்க்கையால் ஏற்படும் தீமையைவிட பெண்வழிச் சேர்க்கையால் ஏற்படும் தீமை மிக அதிகம்.

ப்ரும்மா முதல் அவரால் படைக்கப்பட்ட ரிஷிகள், தேவர்கள் அனைவரும் பெண்ணுருவான மாயையால் பாதிக்கப்படுபவர்கள்தாம்.

மேலும்‌ பெண்ணாசையின் தீமைகளை விளக்கினார் கபிலர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment