Friday, September 7, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 92 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 36

த்யான யோகம் - 2

த்யான யோகத்தின் எட்டு படிகளை விளக்கிக்கொண்டிருக்கும் கபில பகவான் இப்போது த்யானம் செய்ய வேண்டிய ரூபத்தை வர்ணிக்கிறார்.
மலர்ந்த செந்தாமரை போன்ற முகம்
தாமரையிதழ் போல் பிரிந்து செவ்வரியோடிய நீண்ட பெரிய விழிகள்.

நீலோத்பல (கருநெய்தல்) மலர் போன்ற கருநீலத் திருமேனி
கைகளில் சங்கம், சக்ரம், கதை, அரையில் மலர்ந்த தாமரை மலரின் மகரந்தம் போல் பொன்னிறப் பட்டாடை
திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு.

கழுத்தில் அழகிய கௌஸ்துப ஹாரம்
மார்பில் கொழுத்த வண்டுகள் கூட்டமாய் மொய்க்கும் வனமாலை
விலை உயர்ந்த மாலைகள்

கைகளில் கைவளைகள்

தலையில் நவரத்ன கிரீடம்
தோள்களில் தோள்வளைகள்
அரையில் தங்க அரைஞாண் கயிறு
திருவடிகளில் சிலம்புத்தண்டைகள்
பக்தர்களின்‌ஹ்ருதய கமலமே அவரது ஆசனம்

ஆயிரமாயிரம் கண்கள் கொண்டு பார்த்துக்கொண்டே இருந்தாலும் தெவிட்டாத சாந்தமான அழகான திருமேனி

இப்படிப்பட்ட பூரண அழகுடைய பகவானை மனம் ஒருநிலைப்படும்வரை த்யானிக்கவேண்டும்.

பகவானின் லீலைகள் அனைத்தும் மனத்தைக் கவர்ந்திழுக்கக் கூடியவை.
ஆகவே நின்ற திருக்கோலம், உலாவரும் கோலம், அமர்ந்த திருக்கோலம், சயனத் திருக்கோலம், இதயாகாச குகையில் இருக்கும்‌ திருக்கோலம், இன்னும்‌ அவரவர் மனத்திற்கேற்ப பற்பல கோலங்களிலும் த்யானிக்கலாம்.

பின்னர் படிப்படியாக பகவானின் ஏதாவதொரு அங்கத்தில் மனத்தை நிறுத்தவேண்டும்.

பகவானின் திருவடி த் தாமரை களை முதலில் த்யானம் செய்யவேண்டும்.

அத்திருவடிகள் த்வஜம், அங்குசம், வஜ்ரம், தாமரை முதலிய ரேகைகள்‌ கொண்டது. சற்றே எடுப்பான சிவந்த நகங்களின்‌ காந்தி, நிலவு போல் அடியார் மனத்திற்குக் குளுமை தந்து சாந்தி தர வல்லது.

திரிவிக்ரம அவதாரத்தின் போது ஸத்யலோகம் வரை நீண்ட இத்திருவடிகளை ப்ரும்மா கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அந்த நீரான கங்கையாயிற்று.

அந்த கங்கையைத் தலையில் தரித்தார் சிவன்.

இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பொடிப்பொடியாக்கியதுபோல், இத்திருவடிகள் பக்தர்களின் மலைபோன்றபாவக்குவியலைப் பொடிப்பொடியாக்குகின்றது. அத்தகைய திருவடிகளை வெகுநேரம் தியானம் செய்யவேண்டும்.

அதன்பின் அவரது கரங்களால் அடிக்கடி வருடப்படும் முழந்தாள்களை தியானம் செய்தல் வேண்டும்.
மிகவும் வலுவான பகவானின் தொடைகள் கருடனால் சுமக்கப்படுவது. அவற்றை மனத்தில் நிறுத்தவேண்டும்.

பின் பகவானது தொப்புள் கொடியையும், அதைக்கொண்ட திருவயிற்றையும் தியானம் செய்யவேண்டும்.

ஸகல உலகங்களுக்கும் தோற்றுவாய் அதுதானே. அதன் மின் முத்துமாலைகள் தவழும் மரகத மலைத்தடம் போன்ற திருமார்பை தியானம் செய்யவேண்டும்.

அத்திருமார்பில் அல்லவோ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்?
நினைப்பவர்க்கு மனநிறைவை அளிப்பது. கண்களுக்கு விருந்தாவது. கௌஸ்துபமணி திகழும் அத்திருமார்பத்தை வெகுநேரம் தியானிக்கவேண்டும்.

பகவானின் நான்கு நகரங்களும் எண்டிசை லோகபாலர்களின் இருப்பிடம். மந்தர மலையை மத்தாக நிறுத்தி அமுதம் கடைந்தபோது கலகலவென்று உராய்ந்த பளபளக்கும் பொன் வளைகள் மிளிரும் திருக்கரங்களைத் தியானம் செய்யவேண்டும்.

ஒரு கரத்தில் ஆயிரம் சூரியன்போல் ப்ரகாசிக்கும் சக்கரப்படை. மறுகரத்தில் தாமரைமேல் வீற்றிருக்கும் அன்னம்போல் வெண்சங்கம். இவறரையும் தியானம் செய்தல் வேண்டும்.

பகைவர்க்கு எமனாகும் கதை, வண்டுகள் மொய்க்கும் வனமாலை, ஜீவன்களின் ஆத்ம தத்வமான கௌஸ்துபம் இவற்றை தியானம் செய்யவேண்டும்.

தன்‌அடியார்களுக்கு அருள் வழங்கவே பகவான் பற்பல அவதாரங்களை மேற்கொள்கிறார்.
காதுகளில் ஊஞ்சலாடும் மகரகுண்டலங்களின் ஒளி கன்னத்தில் எதிரொளிக்கும். அழகு மிகுந்த தோற்றம். எள்ளுப்பூ போன்ற எடுப்பான நாசி. அன்றலர்ந்த தாமரைபோல் விளங்கிம் திருமுகத்தை தியானம் செய்யவேண்டும்.

முன்நெற்றி முடிகள் சுருண்டு தவழும் திருமுகமண்டலம்.

தாமரைபோன்ற திருக்கண்கள். அசைந்து அசைந்து சுற்றி வரும் வாளைமீன்களாய் விழிகள்.
உயர்ந்து அழகுற விளங்கும் புருவங்கள்.

பகவானின் பார்வையை ஹ்ருதயத்தில் நிறுத்தி தியானிக்கவேண்டும்.

கருணையும் அன்பும் பெருக்குவது. அருள் மழை பொழிவது.

அதன் பின் பகவானின் புன்னகையை தியானம் செய்தல் வேண்டும்.

தன் திருவடிகளில் அண்டி நிற்கும் அடியார்களின் சோகக்கடலைக் கணத்தில் வற்றச் செய்வது அது.

பகவானின் திருமேனி அழகில் எளிதில் தியானத்தில் நிற்பது அவரது புன்சிரிப்பே ஆகும். சிவந்த இரு உதடுகளின் காந்தி, மல்லிகை மொட்டுக்கள்போல் அழகான சிறு பல்வரிசையில் பட்டு பற்கள் சற்றே சிவந்ததுபோல் காணப்படுகின்றன.

(புன்னகையொன்றினால் கர்தமரை ஆட்கொண்டார் பகவான். பகவானின் புன்னகை அழகு அவர் முகத்தில் தெரிய, தேவஹூதி மயங்கி அவரைத் திருமணம் செய்தாள். கடைசியாகச் சொல்வதே தியானத்தில் நிற்கும். தேவஹூதி ஏற்கனவே புன்னகை அழகில் ஈடுபட்டவள் என்பதால் அவளுக்கு அது சுலபமான தியானப்பொருளாகும் என்று நினைத்து கடைசியாக அதையே அவளது நினைவில் நிறுத்துகிறார் போலும்).

இவ்வாறு பகவானை தியானம் செய்ய செய்ய அவர்மீது அளவிலாக் காதல் பெருகும்‌. பக்தியினால் உளமுருகும். ஆனந்ததினால் உடல் புல்லரிக்கும். ஆனந்தக் கண்ணீர் பெருகும். இதுவரை புத்தியினால் தியானரூபத்தைப் பிடித்துக் கொண்டவர்க்கு, இனி புத்தியின் செயல்பாடுகளும் நின்றுபோகும்.
அதாவது மீன் பிடிக்கப் பயன்பட்ட வலை, மீனைப் பிடித்ததும் கைவிடப்படுவதுபோல்.

அதன்பின் அவன் எங்கும் எதிலும் பகவானையே காண்பான். தனியாக பகவத் தியானம் அவசியமற்றுப்போகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment