Monday, September 10, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 95 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 39

கபிலர் கூறலானார்
மனுவின் மகளே!

என் அன்புத்தாயே!

இதுவரை பக்தியோகம்‌ அஷ்டாங்க யோகம் இரண்டையும் கூறினேன்.

இவற்றில்‌ ஏதாவதொன்றைக் கைக்கொண்டு சாதனை புரிந்து இறைவனை அடையலாம்.

வேதாந்தி பரப்ரும்மம்‌ என்கிறான். யோகி பரமாத்மா என்கிறான். பக்தன் பகவான் என்கிறான். இவன் தான் புருஷனும், ப்ரக்ருதியும். இறைவன் இவை இரண்டிற்கும் அப்பால் உள்ளவன்.

ஜீவனுக்கு அவரவர் கர்ம வினைக்கேற்ப பலனை அளிப்பதால் விதி என்றும்‌ கூறுவர்.

பகவானுக்கு காலம் என்ற பெயருண்டு. இது ஜீவன்களுக்கு பயத்தைக் கொடுக்கிறது.

தான் வேறு பகவான் வேறு என்ற பேதபுத்தியுடன் அலைபவனுக்குத்தான் காலத்திடம் பயம்.

காலஸ்வரூபனான பகவான் ஜீவன்களுக்குள் புகுந்து அவற்றைக் கொண்டே அவற்றை அழிக்கிறார்.

காலரூபனான பகவானுக்கு நண்பன், பகைவன் எவரும்‌ இலர். காலம் மிகுந்த ஊக்கத்துடன், பகவானை மறந்து போகத்தில் திளைப்பவனுக்கு நோயாக உள்நுழைகிறார்.

காலத்திடம் பயம் கொண்டே சூரியன் உதிக்கிறான். மேகம்‌ மழை பெய்கிறது. நட்சத்திரங்கள்‌ ப்ரகாசிக்கின்றன. மரம் செடி கொடிகள், மூலிகைகள் அனைத்தும் அதனதன் பருவத்தில் பூத்துக் காய்க்கின்றன.

இவருடைய கட்டளைப்படியே நதிகள்‌ பாய்கின்றன. கடல் கரையைக்‌ கடக்காதிருக்கிறது. அக்னி சுடர் விட்டு எரிகிறது. மலைகளுடன் கூடிய பூமி கடலில்‌ மூழ்காதிருக்கிறது.

இவருடைய கட்டளையினாலேயே உண்டான பஞ்ச பூதங்கள்‌ ஒன்றையொன்று மிஞ்சாமல் கட்டுப்பாட்டோடு செயல்படுகிறது.

அவரே மரணதேவனான யமனையும் அழித்து ப்ரபஞ்சத்தையும் அழிக்கிறார்‌.

இவ்வளவு சக்தியுடன் இயங்கும் காலரூபனைப் பல பிறவிகள் எடுத்தாலும் ஜீவன்கள் அறிந்துகொள்வதில்லை.

தன் சுகத்திற்காக ஜீவன் பல பொருள்களை சேகரித்துவைக்கிறான். பகவான் அனைத்தையும் தகுந்த காலத்தில் அழிக்கிறார். ஜீவன் துக்கப்படுகிறான்.

ஜீவன் நரகத்தில் வேதனை அடைந்தாலும், மாயையினால் மதிமயங்கி, உடல், மனைவி, மக்கள், செல்வம், உற்றார், உறவினர் என்று மனத்தை ஆழ ஊன்றி அனைத்து செல்வங்களையும் பெற்றுவிட்டதாக எண்ணுகிறான்.

குடும்பத்தைக் காக்கும் முயற்சியில் தோல்வி ஏற்படின், பேராசை கொள்கிறான். மனவலிமை தளர்கிறது. பிறர் செல்வத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.
இவனது சக்தி குறையும்போது மனைவி மக்கள் அலட்சியம்‌ செய்கிறார்கள்.

இவ்வளவு துன்பம் அனுபவித்தும்‌ உலக வாழ்வில் வெறுப்பு கொள்வதில்ல. மரியாதையின்றி போடப்படும் சோற்றை நாய்போல் உண்டு காலம் கழிக்கிறான்.
கடைசியில் காலபாசத்திற்கு ஆட்பட்டு மரணத்தை தழுவுகிறான். அப்போது சிவந்த கண்களை உடைய யமதூதர்களைக்‌கண்டு பயந்து மலமூத்திரங்களைக் கழிக்கிறான்.
இறந்த அவனுக்கு யாதனா சரீரம்‌ ஏற்படுகிறது. அதைப் பிடித்துக்கொண்டுதான் ஸ்தூல உடலை விடுகிறான். யமதூதர்கள் யாதனா சரீரத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு
வெகுதூரத்திலுள்ள யமபட்டணம் செல்கிறார்கள்.

வழியில் யமதூதர்களின் பயமுறுத்தலால் நடுங்குகிறான். தன்‌ பாவச் செயல்களை நினைத்து வருந்துகிறான்.

வழியில் பசி தாகத்தால் தவிக்கிறான். கொளுத்தும் வெயில். நெருப்புக்காற்று வீசும்‌ வழி. நிற்க நிழலோ, தாகத்திற்குத் தண்ணீரோ கிடைக்காது. நடக்கத் திராணியின்றி விழும்போது யமதூதர்கள்‌ சாட்டையால் அடிப்பார்கள்.

தர்மத்தில் பற்றுள்ள ஸத்புத்ரனைப் பெற்று வளர்த்திருப்பானாகில் அவன் இவனைக் குறித்துச் செய்யும்‌ கர்மாக்களால் ஜீவனுக்கு வழிக்கு உணவும் நீரும்‌கிடைக்கும்.‌

ஆங்காங்கே மூர்ச்சையாகி விழுந்து எழுந்து இருளடர்ந்த பாதையில் யமதூதர்களால் இழுத்துச் செல்லப்படுகிறான்.

யமலோக மார்கம் 7,92,000 மைல்கள் உடையது. இந்த தூரத்தை இரண்டு அல்லது மூன்று முஹூர்த்த காலத்தில் கடக்குமாறு இழுத்துச் செல்லப்படுகிறான்.

அங்கு அவனது பாவங்களுக்கேற்ப
கட்டைகளை அடுக்கி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறான்.
சிலசமயம் அவன் இடலையே யாரோ வெட்டித்தர, அதை அவனே உண்ணுமாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறான்.

யமபுரியில் நாய்களும் கழுகுகளும் இவனது யாதனா சரீரத்தை உயிருடன் பிடுங்கித் தின்னும். உயிர் போகாது.
தேள்கள் கொட்டும்.

அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவார்கள். மலையிலிருந்து உருட்டுவார்கள். கைகால்களைக் கட்டி நீரில் மூழ்கடிப்பார்கள்.

ஆணோ, பெண்ணோ யாராக இருப்பினும்‌ பாவத்தைன் பலனை அனுபவிப்பதற்கென்றே உண்டாக்கப்பட்ட தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம் என்ற நரக வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

தாயே! சிலரோ ஸ்வர்கமும் நரகமும் இந்நிலவுலகிலேயே இருக்கின்றன என்றும்‌ சொல்கிறார்கள். ஏனெனில்‌ இத்தகைய துன்பங்கள் பூமியிலேயே காணப்படுகின்றன.

மிகுந்த சுயநலத்தோடு பிறரைத் துன்புறுத்தி தன்னை மட்டும் பேணுபவன், இவ்வுலகிலேயே அவனால் ‌பேணப்பட்ட உடலை விட்டுவிட்டு, குடும்பத்தையும்‌ விட்டு இறந்தபின் தன் பாவங்களையே அனுபவிக்கிறான்.

தன் பாவமூட்டைகளே அவனுக்கு சோற்று மூட்டை. தனியொருவனாகவே நரகத்தை அனுபவிக்கிறான்.

நரகத்தில் பாவத்தின் பலனில் சிறிது அனுபவித்து, பின்னர் நாய், பன்றி, முதலிய பிறவிகளை எடுத்து பாவத்தைக் குறைத்துக்கொண்டு மீண்டும்‌ மனிதப்பிறவியை அடைகின்றான்.

ஆனால், இவ்வளவு துன்பங்களையும்‌ மறந்து மீண்டும் ‌பாவத்தைச் செய்கிறான்.
#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment