Tuesday, September 4, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 89 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 33

ப்ரக்ருதியின் குணங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜீவன் அஹங்காரத்தால் 'நானே செய்பவன்' என்று எண்ணுகிறான்.

இதனால் தன் இயல்பான சுதந்திரத்தை இழந்து, ஆனந்தத்தை மறந்து, பாவ புண்யங்களுக்குத் தக்கவாறு, பற்பல வகையான பிறவிகளை அடைகிறான். பிறப்பு இறப்புச் சுழலில் மாட்டிக்கொள்கிறான்.
கனவில் தோன்றும் அச்சம், சோகம் முதலியவற்றுக்குக் காரணம் ஏதுமில்லை. ஆனால், கனவு இருக்கும்வரை அவற்றை அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.


அதுபோலவே, அச்சம், துயரம், நான், எனது, பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்கு எந்த ஆதாரமும்‌ இல்லை.

எனினும், அஞ்ஞானத்தின் காரணமாக புலன் நுகர் பொருள்களில் கவனம் செலுத்துவதால் ஜீவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை கிடைப்பதில்லை.

உலகியல் பற்று கொண்ட மனத்தை இடைவிடாத பக்தி யோகத்தாலும், வைராக்யத்தாலும் மெல்ல மெல்லத் தன்வயப்படுத்தவேண்டும்.

மிகவும்‌ ஈடுபாட்டுடன் அப்யாசம் செய்து, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தி, ஆன்மா வேறு, ப்ரக்ருதியின் உருவான உடல் வேறு என்று அறியவேண்டும்.
பக்தியுடன் தேனினும்‌ இனிய திருக்கதைகளைச் செவியாரப் பருகவேண்டும்.

எல்லா ஜீவராசிகளிடமும் பகைமை பாராட்டாமல் அன்புடன்‌ பழகவேண்டும்.
புலனடக்கத்துடன் இறைச் சிந்தனை தவிர மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பகவத் அர்ப்பணமாக உறுதியுடன் தன் கடைமைகளைச் செய்யவேண்டும்.
மிதமான ஆகாரம் ஏற்று ஸாது சங்கத்தில் எப்போதும்‌ இருக்கவேண்டும்.

மற்ற சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும்.

தேகத்திலோ, அதைச் சார்ந்திருக்கும் மனைவி, மக்களிடமோ, நான் எனது என்ற வீண் அபிமானம் கொள்ளாதிருக்க வேண்டும்.

ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்ற அறிவால் ஜாக்ரத்(விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) முதலிய நிலைகளைக் கடக்கவேண்டும்.
இவ்வாறு செய்பவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ரும்மத்தையே அடைகிறான்.

நீர் நிலைகளில் நீரில் தோன்றும் சூரியனின் ப்ரதிபிம்பம், அருகிலிருக்கும் சுவற்றில் பரதிபலிக்கும். அதைப் பார்த்தாலும், நாம் அறிவது என்ன? ஆகாயத்தில் சூரியன் இருக்கிறான் என்பதேயாம்.

அதுபோல், ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்துப் புலன்களும் அஹங்காரத்தில் ஒடுங்கி விடுகின்றன. அப்போது விழிப்பு, உறக்கம், கனவு மூன்று நிலைகளிலும் சாட்சியாக விளங்கும் ஜீவாத்மா விழிப்புடன் இருக்கிறது. அதனால்தான், உறங்கி எழுந்ததும் 'நான் நன்றாகத் தூங்கினேன்' என்று சொல்லமுடிகிறது.

மற்ற புலன்கள் செயலற்றுக் கிடப்பினும் ஜீவன் விழிப்புடன் இருப்பதாலேயே உடலில் உயிர்ப்புத்தன்மை இருக்கிறது. இல்லையெனில் உடலின் பெயர் வேறாகிவிடும்.

விழித்துக்கொண்டிருக்கும்போது இந்திரியங்கள் செயல்படக் காரணம் அந்தர்யாமியான பகவான் என்று புரிந்துவிடும். உறங்கும்போது புலன்கள் செயலற்றிருப்பதால் அந்தர்யாமி இல்லை என்றாகிவிடாது.

உண்மையில் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாமல் போவது அஹங்காரமும் புலன்களின் உணர்வும் மட்டுமே. உறக்கத்தில் அஹங்காரம் செயலற்றுப் போவதால் தானே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.

உறக்கத்தில் அஹங்காரம் தொலைந்து ஜீவன் விழிப்புடன்தான் இருக்கிறது.
அம்மா, மேற்கூறிய அனைத்தையும்‌ ஆராய்ந்து விவேகத்துடன் பரமாத்மாவை அறிந்துகொள்ளவேண்டும்
என்றார் கபிலர்.

மிகவும்‌ மகிழ்ந்த தேவஹூதி, நம் பொருட்டு, மேலும் கேள்விகள் கேட்கத் துவங்கினாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment