Friday, March 29, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 238 கடல் கடைந்த கடல்வண்ணன் - 2

தேவர்கள் ப்ரும்மாவை முன்னிட்டுக்கொண்டு வைகுண்டம் சென்று பகவானைத் தஞ்சமடைந்தனர். தாயுள்ளம் படைத்த பகவான் அவர்களை நோக்கிக் கூறலானர்.

தேவர்களே! என் யோசனையைக் கேளுங்கள். இப்போது அசுரர்களுக்கு நல்ல காலம். எனவே, அவர்களுடன் சமாதானமாகச் செல்லுங்கள்.

நமக்கு பெரிய காரியம் ஆகவேண்டுமானால், அவ்வமயம் அனைவருடனும் சமாதானமாகத்தான் செல்லவேண்டும். காரியம் முடிந்தபின், வேண்டுமானால் பாம்பு எலி போல் பகைமை பாராட்டலாம்.

பாம்பு ஒரு பெட்டியில் அடைபட்டு வருந்திக்கொண்டிருந்தது. அச்சமயம், பெட்டியினுள் திடீரென ஒரு எலி நுழைந்தது. பாம்பைக் கண்டதும் எலி பயந்து ஓடத்துவங்க, பாம்பு அதை அழைத்து சமாதானம் பேசியது.
பயப்படாதே! நான் உன்னை விழுங்கமாட்டேன். நீ என் நண்பன். இந்தப் பெட்டியில் ஓர் ஓட்டை போடு. நாமிருவரும் தப்பி விடலாம்‌
என்று அன்பு பொங்கக் கூறியது. எலி அதன் பேச்சை நம்பி ஓட்டை போட்டது. வெளியே வந்ததும் பாம்பு முதல் வேலையாக எலியை விழுங்கிவிட்டது. சமாதானம் தப்பிக்கும் வரை மட்டுமே. மற்றபடி இயல்பை மாற்ற இயலாது.

நீங்கள் தாமதிக்காமல் சென்று கடலைக் கடைந்து அமுதத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். அதை அருந்தினால் மரணமற்றவர் ஆவீர்கள்.
அனைத்து வகையான மூலிகைகளையும் பாற்கடலில் போட்டு, மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை நாண்கயிறாகவும் கொண்டு கடையுங்கள். நானும் உதவி செய்வேன். சோம்பேறித்தனமோ, கவனக்குறைவோ இன்றி முழுமுயற்சி செய்தால் அமுதம் கிட்டும்‌. அசுரர்களுக்குத் துன்பமே‌ மிஞ்சும்.

அசுரர்களுடன் சமாதானம் பேசும்போது, அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, அப்படியே ஒத்துக்கொள்ளுங்கள். அமைதியாக இருந்தால் காரியத்தை சாதிக்கலாம். கோபம்‌ கொள்வதால் பயனில்லை.

கடையும்போது விஷம் தோன்றும். அதைக் கண்டு அஞ்சவேண்டாம். இன்னும் பல உயர்ந்த பொருள்களும் தோன்றும். அவற்றில் ஆசை கொள்ளாதீர். ஒருக்கால் நீங்கள் விரும்பும் பொருள் கிடைக்கவில்லை என்றாலும் சினம் கொள்ளக்கூடாது. அமுதம் வரும் வரை பொறுமை காக்கவேண்டும்.

இவ்வாறு கட்டளையிட்டு பகவான் மறைந்துபோனார்.

ப்ரும்மதேவரும், பரமேஸ்வரனும் தத்தம் உலகம் சென்றனர். இந்திரன் முதலான தேவர்கள் நேராக பலிச் சக்ரவர்த்தி யிடம் சென்றனர்.

போருக்கான ஆயத்தமின்றி வெறும் கையுடன் வரும் தேவர்களைக் கண்டு குழப்பமும் கலக்கமும் அடைந்தனர் அசுரர்கள். அசுரர்கள் தேவர்களைப் பிடிக்க ஓடிவர, பலி அவர்களைத் தடுத்தான்.

அரியாசனத்தின் மேல் அமர்ந்திருந்த பலியிடம், சிறந்த புத்திமானான இந்திரன் சமாதானம் பேசினான். பகவான் கூறிய விஷயங்கள் அனைத்தையும் கூறினான். மரணமில்லாமல் காக்க அமுதம் உதவும் என்ற செய்தி அசுரர்களுக்கும் பிடித்திருந்தது.

கிடைக்கும் அமுதத்தில் அனைவர்க்கும் பங்கு என்ற நிபந்தனையுடன் திருப்பாற்கடலைக் கடைய ஒத்துழைப்பதாக ஒப்புக்கொண்டனர்.
தடிதடியாக உடல் படைத்த அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மந்தரமலையைப் பெயர்த்தெடுத்தனர். பெருங்கூச்சலுடன் பாற்கடலுக்குத் தூக்கி வரத் துவங்கினர்.

மந்தரமலையோ பெரும் பாரம். பாற்கடல் வெகுதொலைவில் இருந்தது. அதனால் அனைவரும் களைத்துப்போய், கை சோர்ந்து பாதியிலேயே மலையைக் கீழே போட்டுவிட்டனர்.

பெரும் பாரமான அத்தங்கமலை கீழே விழும்போது அதனடியில் சிக்கி பல தேவர்களும் அசுரர்களும் பொடிப் பொடியாயினர்.

இதைக் கண்டு மற்ற தேவாசுரர்களின் மனோபலம் குன்றிப்போனது. இதைப் பார்த்துக்கொண்டே இருந்த பகவான், மனம் பொறாமல், கருடன் மீதேறி விரைந்து வந்து மலையை அலட்சியமாக ஒரு கையால் தூக்கினார்.

மலைக்கடியில் நசுங்கிப்போயிருந்த தேவர்களையும் அசுரர்களையும் தன் அருட்பார்வையால் எழுப்பினார்.
பின்னர் மலையை கருடன் மேல் வைத்துக்கொண்டு, தானும் அமர்ந்து சென்றார். அனைவரும் அவரைத் தொடர்ந்தனர்.

பாற்கடலை அடைந்ததும் கருடன் மலையை இறக்கி கடற்கரையில் வைத்துவிட்டு, பகவானிடம் அனுமதி பெற்றுத் தன்னிருப்பிடம் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment