2. காத்வா முகுந்த3 மஹதீம் குலசீலரூப
வித்3யாவயோத்3ரவிணதா4மபி4ராத்மதுல்யம் |
தீ4ரா பதிம் குலவதீ ந வ்ருணீத கன்யா
காலே ந்ருஸிம்ஹ நரலோக மனோபி4ராமம் ||
தங்கள் குணவைபவங்களைக் கேட்டு தங்களையே வரித்தேன். என்று என்னைத் தவறாக எண்ணவேண்டாம். ஏனெனில் அது என் குற்றமல்ல. மனித குல திலகமே! அனைத்து ஜீவராசிகளும் தங்களைக் கண்டதும் மகிழ்ச்சி கொள்கின்றன. மனநிம்மதி பெறுகின்றன. நல்லொழுக்கம், அழகு, வித்யை, செல்வம், பெருமை, கருணை, பௌருஷம், வீரம், நல்ல குலப்பிறப்பு ஆகிய அனைத்திலும் இணையற்று விளங்கும் உங்களை திருமணப் பருவத்திலிருக்கும் எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?
3. தன்மே ப4வான் க2லு வ்ருத: பதிரங்க3 ஜாயாம்
ஆத்மார்பிதஶ்ச ப4வதோத்ர விபோ4 விதே4ஹி|
மா வீரபா4க3மபி4மர்ஶது சைத்3ய ஆராத்3
கோ3மாயுவன்ம்ருக3பதேர்ப3லிம் அம்பு3ஜாக்ஷ||
என் ஆன்மாவும் உடலும் இனி தங்களுக்கே சொந்தம் ஐயனே! தாங்கள் இங்கு வந்து என்னைத் தங்கள் மனைவியாக ஏற்கவேண்டும். சிங்கத்தின் இரையை சிறுநரி தீண்டுவதா? வீரரான தம்மைச் சரணடைந்த என்னை சிசுபாலன் நெருங்கலாகுமா? இதென்ன நீதி?
கண்ணன் உடனே கிளம்பி வரவேண்டும் என்பதால் கொஞ்சம் உசுப்பேற்றிவிடுகிறாள்.
4. பூர்தேஷ்டத3த்த நியம வ்ரத தே3வ விப்ர
கு3ர்வர்ச்சனாதி3பி4ரலம் ப4கவான் பரேஶ: |
ஆராதி3தோ யதி3 கதா3க்3ரஜ ஏத்ய பாணிம்
க்3ருஹ்ணாது மே ந த3மகோ4ஷ ஸுதாத3யோன்யே ||
நான் எனது கர்மாக்கள், தானங்கள், ஸாது சேவை, புண்ய நதிகளில் நீராடுதல், நியமங்கள், தேவர்கள், அந்தணர்கள், ஆசார்யர்கள், எளியோர், முதியவர்கள் ஆகியவர்களுக்கான பணிவிடைகள், கோவில் கட்டுதல், குளம் வெட்டுதல், முதலியவற்றை தவறாமல் செய்து வந்திருக்கிறேன். நான் செய்த நற்செயல்கள் அனைத்தும் பலனளிக்கும் வகையில் தாங்கள் இங்கு வந்து என் கைப்பற்றவேண்டும். வேறெவரும் என்னைத் தீண்டலாகாது.
5. ஶ்வோபா4விநி த்வமஜிதோத்3வஹனே வித3ர்பா4ன்
கு3ப்த: ஸமேத்ய ப்ருதனாபதிபி4: பரீத: |
நிர்மத்2ய சைத்3யமக3தே4ந்த்ரப3ல3ம் ப்ரஸஹ்ய
மாம் ராக்ஷஸேன விதி4நோத்3வஹ வீர்யசுல்காம் ||
எவராலும் ஜெயிக்கமுடியாதவரே! நம் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பே நீங்கள் ரகசியமாகப் படை திரட்டிக்கொண்டு வரவேண்டும். சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோரின் படைகளை கதி கலங்கச் செய்து வீரத்தைக் காட்டி, ராக்ஷஸ விவாஹ முறைப்படி பகிரங்கமாகக் கவர்ந்து செல்லவேண்டும். நானும் வீரகுலத்தில் பிறந்த நங்கை என்பதால் எவருமறியாமல் ரகசியமாக நமது திருமணம் நடக்கவேண்டாம்.
(எண் வகைத் திருமண முறைகளில் ராக்ஷஸ விவாஹ முறை க்ஷத்ரியர்களுக்கு உரியதாகும்.)
6. அந்த: புராந்தரசரீம் அநிஹத்ய ப3ந்தூ4ன்
ஸ்த்வாமுத்3வஹே கத2மிதி ப்ரவதாம்யுபாயம் |
பூர்வேத்3யுரஸ்தி மஹதீ குலதே3வியாத்ரா
யஸ்யாம் ப3ஹிர்நவவதூ4ர் கிரிஜாம் உபேயாத்||
நம் திருமண தினத்தன்று என் உறவினர்களைக் கொல்ல வேண்டாம். அவர்கள் நம் எதிரிகள் அல்ல. அதைத் தவிர்க்க நான் குலதெய்வமான கௌரியைப் பூஜை செய்ய கோவிலுக்கு வருவேன். அப்போது நீங்கள் என்னை எடுத்துச் செல்லலாம்.
(கண்ணன் வந்தாகவேண்டும் என்பதை பல விதமாக உறுதிப்படுத்துகிறாள்)
7. யஸ்யாங்க்4ரி பங்கஜரஜ:ஸ்நபனம் மஹாந்தோ
வாஞ்ச2த்யுமாபதிரிவாத்ம தமோபஹத்யை |
யர்ஹ்யம்பு3ஜாக்ஷ ந லபே4ய ப4வத்ப்ரஸாத3ம் |
ஜஹ்யாமஸூன் வ்ரத க்ருஶாஞ்ச2த ஜன்மபி:4 ஸ்யாத்||
தாமரைக் கண்ணனே! பதினான்கு லோகங்களில் உள்ள தேவர்களும் தங்கள் திருவடித் துகளை சிரசில் தரிக்கின்றனர். அப்படிப்பட்ட உமது அருள் எனக்குக் கிடைக்காவிடில் வ்ரதங்களால் என்னை வருத்திக்கொண்டு உயிரை விடுவேனேயன்றி வேறெவரையும் மணக்கமாட்டேன். ஒருக்கால் உம்மை மணக்க எனக்குத் தகுதி இல்லையென்று தாங்கள் எண்ணினால், நூறு ஜென்மங்களானாலும் உமது அருளையே வேண்டுவேன்.
இறைவனிடம் எப்படி ப்ரார்த்தனை செய்யவேண்டும் என்று அன்னை சொல்லித் தருகிறாள். தம் தாய் தந்தையிடம் அடம் பிடிக்கும் குழந்தையைப்போல பிரார்த்தனை செய்யவேண்டும். இதைச் செய்கிறேன் அதன் பலனாக என் விருப்பத்தை நிறைவேற்று என்று கேட்கலாம். ஆனால் அது பூரண சரணாகதி ஆகாது. செய்த செயலுக்குப் பயனாய் ப்ரார்த்தனையை வைப்பதைக் காட்டிலும் உன்னை விட்டால் வேறு கதியில்லை. எனக்கு நீ அருள் செய்தே ஆகவேண்டும் என்று கேட்பது நிபந்தனையற்ற சரணாகதி.
எல்லா விதமாகவும் தன்னை ஏற்கும்படி வேண்டினாள். பின்னர் தன்னை அழைத்துப்போகும் உபாயத்தையும் கூறினாள். முன்பின் தெரியாத பெண் யாரையோ திருமணம் செய்துகொள்ளட்டும். என்று எண்ணிவிட்டால்? அதற்காக எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீதான் கதி. உன்னையே அடைவேன் என்று வலியுறுத்துகிறாள்.
இவ்வளவு சொன்ன பிறகும் பேசாமல் இருப்பானா கண்ணன்.
அன்பினால் அந்த சாதுவின் கரங்களைப் பற்றிக்கொண்டான். நானும் அனைத்தையும் கேள்விப்பட்டேன் . இப்போதே புறப்படுவோம்.
என்று கூறிவிட்டு சாரதியான சாத்யகியை அழைத்து தேரைத் தயாராக வைக்கச் சொன்னான்.
அந்த சாதுவையும் தன் ரதத்தில் ஏற்றிக்கொண்டு விதர்ப்பதேசம் நோக்கி விரைந்தான் கண்ணன்.
சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், பலாஹம் என்ற நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தை சாத்யகி கண்ணனின் மனோவேகத்திற்கேற்ப ஓட்டினார்.
அதிதியாய் வந்த சாதுவுடன் இரவு வேளையில் ரதத்தில் கிளம்பிய கண்ணனைப் பார்த்தான் பலராமன். பணியாள்கள் மூலம் விவரம் அறிந்து ஒரு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு தானும் கண்ணனைத் தொடர்ந்து விதர்ப்பம் நோக்கிச் சென்றான்.
அவர்கள் அனைவரும் ஒரே இரவில் விதர்ப்பத்தை அடைந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..