Tuesday, June 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 281

தான் தன்னலமற்ற உத்தம பக்தர்களின் அடிமை என்றும், அவர்களுக்குத் தீங்கிழைத்தால் தன்னாலும் காக்க இயலாது என்றும் அம்பரீஷனையே சரணடையும்படியும் பகவான் துர்வாசரிடம் கூறினான்.

வேறு வழியின்றி துர்வாசர் மதுவனத்தை நோக்கி ஓடினார்.
மதுவனத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து எல்லா லோகங்களுக்கும் ஓடி, ஸத்யலோகம், கைலாசம், வைகுந்தம் வரை சென்று திரும்ப எவ்வளவு காலமாயிற்றோ. இதில் மற்ற லோகங்களுக்கும் பூமிக்கும் காலக்கணக்கு வெவ்வேறானவை.

அவ்வளவு காலமாக அம்பரீஷன் நீர் கூட அருந்தாமல், தான் தவறிழைத்துவிட்டதாகவே எண்ணி, வருந்திக்கொண்டு இருந்தான். சக்கரம் திரும்பி வரும் அல்லது ஏதேனும் செய்தி வரும். எது வந்தாலும் தனக்கான தண்டனை வேண்டும் என்று எதிர்பார்த்து விரதத்தைத் தொடர்ந்தான்.

துர்வாசர் உணவு ஏற்காமல் போனதோடு, சக்கரம் அவரைத்  துரத்தியதில் மிகவும் மனவருத்தம் கொண்டிருந்தான்.

அம்பரீஷா! காப்பாற்று! என்று அலறிக்கொண்டு துர்வாசர் திரும்பி ஓடிவந்து அம்பரீஷனின் சரணங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழ, அரசனோ, ஓடிச் சென்று ஒளிந்துகொண்டான்.

நாமாக இருந்தால் என்ன நினைப்போம்? பார்த்தீரா மஹரிஷியே! என் பக்தியின் பெருமையை? என்னிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று இறுமாந்திருப்போம்.

ஆனால், அம்பரீஷனோ, மஹரிஷியின் இந்தத் துன்பத்திற்குத் தானே காரணம். இதில் அவர் வந்து என் சரணத்தில் வீழ்வதாவது என்றுவெட்கினான். மிகவும் பதறிப்போனான்.

இருப்பினும், ஸ்ரீ சுதர்சனத்தை சாந்தப்படுத்தும்படி துர்வாசர் வேண்ட, அம்பரீஷன் சக்கரப்படையின் முன்னால் போய் இருகரம் கூப்பி நின்றான்.

திருவாழியே! சூரியபகவானின் திருவுருவானவர் தாங்கள். உடுகணங்களின் தலைவனான சந்திரனும் உமது பிம்பமே. ஐம்பூதங்களாகவும், ஐந்து தன்மாத்திரைகளாகவும், பதினோரு புலன்களாக விளங்குபவரும் தாங்களே.

ஆயிரம் ஆரங்கள் கொண்டவர். பகவானுக்குப் பிரியமானவர். இறையடியார்க்கு அன்பர். இன்சொல் மிக்கவர்.

அறவுருவானவர். அறநெறி விடுத்து மறநெறி புகுவோரை தூமகேதுவைப்போல் சுட்டெரிப்பவர். அனைத்து உலகங்களையும் காப்பவர். ஒளி வடிவானவர். மனோவேகம் படைத்தவர். தீயவரை அழிப்பதற்காகவே பகவானால் நியமிக்கப்பட்டவர்.

எங்கள் குலம் விளங்க இந்த அந்தணரை மன்னியுங்கள். இதுநாள் வரையில் நான் ஏதாவது தானம், வேள்வி, மற்றும் அறநெறிகளைக் கடைப்பிடித்திருப்பின் இவர்க்கு அருள் புரியவேண்டும்.

என் முன்னோர் அந்தணர்களையே முழுமுதல் தெய்வமாகக் கொண்டு ஆராதனை செய்திருப்பார்களேயானால், இவரை இந்தத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்.

குணபூரணனான பகவானை நான் அனைத்து ஜீவராசிகளிலும் கண்டு போற்றி ஒழுகுவது ஸத்யமெனில், எனது உபாசனையில் பகவான் ஸ்ரீ ஹரி சிறிதளவாவது மகிழ்ந்திருப்பாராகில் இந்த அந்தணர், துர்வாச முனிவர்க்கு ஏற்பட்ட ஆபத்து விலகட்டும் என்று கூறி நமஸ்கரித்தான்.

அம்பரீஷன் கூறியதைக் கேட்ட ஸ்ரீ சுதர்சனம் அமையடைந்து சிம்மாசனத்தில் போய் அமர்ந்தது.

இவ்விடத்தில் முற்றும் துறந்த முனிவர், ஒரு பக்தனுக்குத் தீங்கிழைத்ததால் ஞானம் விலகி, தேக அபிமானத்துடன் உயிரைக் காக்க அனைத்துலகங்களுக்கும் ஓடுகிறார். ஆனால், அரசன், எல்லா போகங்களையும் அனுபவிப்பவன், செல்வந்தன், பகவானைச் சரணடைந்தவன், தேக அபிமானத்தை முற்றும் துறந்து பிசாசு அழிக்க வந்தபோதும் அசையாமல் நின்றான்.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment