Saturday, June 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 272

சுகன்யா சியவன மஹரிஷிக்கு மிகவும் சிரத்தையாகப் பணிவிடைகள் செய்து வந்தாள்.

ஒருநாள் அஸ்வினி குமாரர்கள் சியவனரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்கள் தேவ மருத்துவர்களாவர்.
அவர்களை முறைப்படி உபசரித்த சியவனர்,
நீங்கள் மிகவும் திறமை மிக்கவர்கள். எனக்கு இளமையைக் கொடுங்கள். ஆரோக்யமான உடலும் அழகும் வேண்டும். பெண்கள் விரும்புவது இவற்றைத்தான். உங்களுக்கு இதுவரை யாகத்தில் ஹவிர்பாகம் இல்லை. இனி வரும் யாகங்களில் உங்களுக்கு ஹவிர்பாகம் கிடைக்கும்படி நான் செய்கிறேன் என்றார்.

அஸ்வினி குமாரர்கள் இருவரும் இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்தனர். சியவனரின் ஆசிரமம் அருகே ஒரு மடு இருந்தது. அதைக் காட்டி,
மஹரிஷியே, சித்தர்களால் படைக்கப்பட்ட இம்மடுவில் நீராடி எழுங்கள்
என்று கூறினர்.

சியவனர் பலகாலம் தவமிருந்தமையால் அவரது உடல் மெலிந்து, மூப்படைந்து, நரம்புகள் புடைத்துக்கொண்டு, தோல் சுருங்கி, நரைத்த முடியுடன் பார்க்கவே அருவறுக்கத்தக்க தோற்றத்துடன் இருந்தார்.

அஸ்வினி குமாரர்கள் அவரை அங்கிருந்த மடுவிற்கு அழைத்துச் சென்று அவருடன் அவர்களும் மூழ்கினர்.
மடுவினின்று எழும்போது, மூவரும் தாமரை மாலையணிந்து, காதுகளில் குண்டலங்கள் ஒளிர, அழகான ஆடைகள் உடுத்தி மயக்கும் அழகுடன் வெளிப்பட்டனர்.

மூவரும் சூரியன் போல் ஒரே மாதிரியான அழகுத் திருமேனி கொண்டு வந்ததும், கற்புக்கரசியான சுகன்யா திகைத்தாள். அவளால் சியவனரை அடையாளம் காண இயலவில்லை. அப்போது தன் கணவர் யாரென்று காட்டும்படி அஸ்வினி தேவர்களையே வேண்டித் துதித்தாள்.

அவளது துதியால் மகிழ்ந்த தேவர்கள், அவளுக்கு மஹரிஷியை அடையாளம் காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
அழகான உடலை அடைந்த சியவனர், மனைவியைப் பலவாறு மகிழ்வித்தார்.

சிலகாலம் கழித்து மன்னன் சர்யாதி ஒரு வேள்வி செய்ய நினைத்தான். தன் மாப்பிள்ளையான சியவனரையே அழைத்து யாகம் செய்துவைக்கும்படி கேட்பதற்காக அவரைத் தேடி ஆசிரமத்திற்குச் சென்றான்.
அங்கே தன் மகள் சுகன்யாவின் பக்கத்தில் ஒளி மிக்க அழகான ஒரு ஆண்மகன் அமர்ந்திருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.

தந்தையைக் கண்ட சுகன்யா அவனை வணங்கினாள்.
சர்யாதி மிகவும் கோபத்துடன் அவளைப் பார்த்து,
கொடியவளே! என்ன காரியம் செய்தாய்? உத்தமமான சியவனருக்கு துரோகம் செய்தாயா? அவர் கிழவர் என்ற ஏளனமா? மஹா மேதாவியான கணவரை விடுத்து கள்ளக்காதலனுக்குப் பணிவிடை செய்கிறாயா? உயர்குலத்தில் பிறந்த உனக்கு இக்காரியம் தகுமா? என் குலத்திற்கே களங்கம் கற்பித்துவிட்டாயா? உன் தந்தை, கணவன் நாங்கள் இருவருக்குமே உன்னை சரியாக வழிநடத்தாததன் விளைவாக நரகம் கிட்டும்.
என்று கத்தினான்.

தந்தை மனம் வருந்திக் கூறுவதைப் பார்த்து சுகன்யா புன்முறுவலுடன்
இவர் உங்கள் மாப்பிள்ளையான சியவனர்தான் அப்பா.
என்று கூறிச் சிரித்துக் கொண்டே நடந்தவை அனைத்தையும் கூற, அதைக் கேட்ட சர்யாதி பெரும் வியப்பும் மகிழ்ச்சியும்‌அடைந்தான்.

அதன் பின்னர், சியவன மஹரிஷி சர்யாதி மன்னனின் பொருட்டு ஸோமயாகம் செய்தார். அப்போது யாகத்தில் அஸ்வினி தேவர்களுக்கும் ஹவிர்பாகம் கொடுத்தார்.
இதைக் கண்ட இந்திரன் விதியை மீறுகிறார் என்று கோபத்துடன் அவரைத் தாக்க வஜ்ராயுதத்தை எடுத்தான். சியவனர் தன் தவ வலிமையால் இந்திரனின் கையை செயலிழக்கச் செய்ய, இந்திரன் திகைத்துப்போனான்.

அவரது மகிமையை உணர்ந்த மற்ற தேவர்கள், இந்திரனை சமாதானப்படுத்தி, அஸ்வினி தேவர்களுக்கும் ஹவிர் பாகம் கொடுப்பதை ஒத்துக்கொள்ளச் செய்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment