Thursday, June 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 270

வைவஸ்வதனின் கடைசி மகனான கவி என்பவன் உலக விஷயங்களில் வெறுப்புற்று ஆசையைத் துறந்து வனம் சென்றான். எங்கும் நிறை இறையை மனத்தில் இருத்தி சிறு வயதிலேயே இறைவனை அடைந்தான்.

கரூஷன் என்ற இன்னொரு மகனிடமிருந்து காருஷர்கள் எனப்பெயர் கொண்ட க்ஷத்ரியர்கள் தோன்றினர். அவர்கள் அறநெறியில் நாட்டம் கொண்டிருந்தனர். அன்பு மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் வட மாநிலங்களைக் காத்தனர்.

திருஷ்டன் என்பவனிடமிருந்து தார்ஷ்டம் என்ற க்ஷத்ரிய வம்சம் உண்டானது. அவர்கள் தவம் செய்து செய்து அந்தணத்தன்மையை அடைந்தனர்.

நிருகனது மகன் ஸுமதி. அவனது மகன் பூதஜ்யோதி. அவனது மகன் வஸு.
வஸுவின் குமாரன் ப்ரதீகன். ப்ரதீகனின் மகன் ஓகவான். அவன் மகன் பெயரும் அஃதே. மகளின் பெயர் ஓகவதி. அவள் சுதர்சனனை மணந்தாள்.

வைவஸ்வதனின் இன்னொரு மகனான நரிஷ்யந்தனின் மகன் சித்ரஸேனன். அவனது மகன் ருக்ஷன். ருக்ஷனின் மகன் மீட்வான். அவனது மகன் கூர்சன். கூர்சனின் புதல்வன் இந்த்ரஸேனன். அவனது மகன் வீதிஹோத்ரன். அவனது மகன் ஸத்யச்ரவன். அவனது பிள்ளை ஊருச்ரவஸ். ஊருச்ரவஸின் மகனாக தேவதத்தன் பிறந்தான்.
அக்னிதேவன் அக்னிவேச்யன் என்ற பெயருடன் தேவதத்தனுக்குப் பிறந்தார். அவரது வேறு பெயர்கள் கானீனன் மற்றும்‌ ஜாதுகர்ண்ய மஹரிஷி என்பவை.
இவரை ஆதிபுருஷராகக் கொண்டு ஆக்னிவேசம் என்ற கோத்ரம் துவங்கியது.
இவை நரிஷ்யந்தனின் வம்சம் ஆகும்.

திஷ்டனது வம்சம் பின்வருமாறு.
திஷ்டனின் மகன் நாபாகன். நபகனின் பிள்ளை இவனல்ல. அவன் தன் செயல்களால் வசியனானான்.
அவனது மகன் பலந்தன், பலந்தனின் பிள்ளை வத்ஸப்ரீதி.

வத்ஸப்ரீதியின் புதல்வன் ப்ராம்சு. அவனது மகன் பெயர் ப்ரமதி. அவனது மகன் கனித்ரன். அவனது மகன்தான் சாக்ஷுஷன். இவனது மகன் விம்சதி.
விம்சதியின் பிள்ளை ரம்பன். கனிநேத்ரன் என்பவன் ரம்பனின் பிள்ளை. அவன் அறநெறிகளில் சிறந்து விளங்கினான். இவனது மகன் கரந்தமன் சக்ரவர்த்தியானான்.
கரந்தமனின் பிள்ளை ஆவிக்ஷித். அவனது மகனான மருத்தனும் சக்ரவர்த்தியாக இருந்தான்.

ஆங்கீரஸ் முனிவரின் புதல்வர் ஸம்வர்த்தர் மருத்தனை யாகம் செய்யும்படி தூண்டினார்.
அந்த வேள்வியைப் போல் ஒரு பெரிய வேள்வியை இதுவரை எவரும் செய்ததில்லை. அவனது வேள்வியில் அத்தனை பாத்திரங்களும் தங்கத்தாலானவை.

மிக மிக நிறைவாக அனைத்து தேவர்களையும், அந்தணர்களையும் திருப்திப்படுத்தினான் மருத்தன்.
அவனது மகன் தமன். அவனது பிள்ளை ராஜ்யவர்த்தனன். அவனது பிள்ளை ஸுத்ருதி. ஸுத்ருதியின் மகன் நரன்.

நரனின் பிள்ளை கேவலன். அவனது மகன் பந்துமான். இவனது தனயன் வேகவான். வேகவானின் மகன் பந்து. அவனது மகன் த்ருணபிந்து.
அனைத்து நற்குணங்களும் கொண்டு விளங்கிய த்ருணபிந்து அலம்பஷா என்ற உயர்ந்த அரசகுலப் பெண்ணை மணந்தான். அவர்களுக்குப் பல மகன்கள் பிறந்தனர். இடபிடை என்ற மகளும் பிறந்தாள்.

புலஸ்திய முனிவரின் மகனான விச்ரவஸ் சிறந்த வித்தைகளைக் கற்று, இடபிடையை மணந்தார்.
அவர்களின் மகனே செல்வங்களின் அதிபதியான குபேரன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment