Monday, June 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 268

ஒன்பதாவது ஸ்கந்தத்தில்
வைவஸ்வத மனுவின் வம்சம், மற்ற மனுக்களின் வம்சம், கற்பரசி சுகன்யாவின் கதை, மன்னன் சர்யாதியின் கதை, அம்பரீஷனின் புண்ய சரித்ரம், இக்ஷ்வாகு வம்சம், மாந்தாதா, சௌபரி மஹரிஷி ஆகியோரின் சரித்ரம், மன்னன் திரிசங்குவின் கதை, அரிச்சந்திரனின் கதை, ஸகரனின் கதை, பகீரதனின் கதை, கங்கை மண்ணுலகம் வந்த சரித்ரம், ஸ்ரீ ராமாவதாரக் கதை, நிமியின் வம்சம், சந்திர வம்ச வர்ணனை, ரிஷீகர், ஜமதக்னி, பரசுராமர் ஆகியோரின் கதை, விஸ்வாமித்திரரின் கதை, க்ஷத்ரவ்ருத்தன், ரஜீ முதலியவர்களின் வம்சம், யயாதியின் கதை, பூருவின் வம்சம், துஷ்யந்தன் மற்றும் பரதனது சரித்ரம், பரதனின் வம்சம், மன்னன் ரந்திதேவனின் கதை, பாஞ்சாலர்கள், கௌரவர்கள் மகத மன்னனின் வம்ச வர்ணனைகள், யதுவம்ச வர்ணனனம், விதர்பனின் வம்சம்
ஆகிய பல்வேறு சுவாரசியமான கதைகள் விவரிக்கப்படுகின்றன.

நவமஸ்கந்தம் ஒரு பல்சுவைக் கதைக் களஞ்சியமாகத் திகழ்கிறது.
ஒவ்வொன்றும் நமது பாரத தேசத்தை ஆண்ட மன்னர்களின் கதை என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமே இல்லை.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பரீக்ஷித் கேட்டான்.
மஹரிஷியே! இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தையும் சுவைபட விவரித்தீர்கள். கடைசியாகப் பாண்டியமன்னன் ஸத்யவிரதன் மனுவான கதியைக் கூறினீர்கள். அவரது வம்சத்தைப் பற்றிக் கூறுவீர்களா? என்று கேட்டான்.

ஸ்ரீ சுகர் கூறலுற்றார்.
மன்னா, வைவஸ்வத மனுவின் வம்சத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன். ஏனெனில் அதை விரிவாகக் கூறுவது நூறு வருடங்களானாலும் இயலாத காரியம். என்றார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆன்மாவாக விளங்கும் பகவான் மட்டுமே மஹாபிரளயத்தின்போது தனியொருவராக இருந்தார்.
அவரது தொப்புளிலிருந்து தோன்றிய தாமரை மொட்டிலிருந்து ப்ரும்மா தோன்றினார்.

பிரும்மாவின் மானஸ புத்திரர் மரீசி. மரீசியின் புதல்வர் கச்யபர். கச்யபரின் மனைவி தக்ஷனின் மகளான அதிதி. அவர்களது மகன் விவஸ்வான் எனப்படும் சூரியன். விவஸ்வானது மனைவி ஸம்க்ஞாவிடம் வைவஸ்வத மனுவான ச்ராத்ததேவன் தோன்றினார்.
அவரது மனைவி ச்ரத்தாதேவி. அவர்களுக்கு
இக்ஷ்வாகு, ந்ருகன், சர்யாதி, திஷ்டன், திருஷ்டன், கரூஷகன், நரிஷ்யந்தன், பிருஷத்ரன், நபகன், கவி ஆகிய பதின்மரும் அவர்களது புதல்வர்கள் ஆவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment