Saturday, June 15, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 275

அடுத்ததாக ஸ்ரீ சுகர், நாபாகனின் மகனான அம்பரீஷனின் கதையைச் சொல்லப்போகிறேன் என்றார்.
அதைக் கேட்டு பரீக்ஷித் மிக்க மகிழ்ச்சியுற்றான்.

பெருமானே! அவர் பெரிய பக்தர் என்றும் ராஜரிஷி என்றும் கேட்டிருக்கிறேன். எவராலும் தடுக்க இயலாத அந்தண சாபம் அவரை ஒன்றும் செய்யவில்லையாமே. தீய தேவதை அவர்மீது ஏவப்பட்டபோதும், அதனால் இவரைத் துன்புறுத்த இயலவில்லையாமே. எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. அம்பரீஷனின் கதையை விரிவாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் கருணை பொங்க பரீக்ஷித்தை நோக்கிவிட்டுக் கூறத் துவங்கினார்.
ஆம். அரசே! அம்பரீஷன் பெரும் பாக்யசாலி. ஏழு த்வீபங்கள் கொண்ட பூமி முழுதும் அவனது வெண்கொற்றக்குடையின் கீழ் இருந்தது. பெரும் செல்வமும், அளவற்ற செழுமையும் அவனது ஆட்சியில் நிரம்பி வழிந்தது.
ஆனால், இவை அனைத்தையும் கனவு போல் மதித்தான் அம்பரீஷன்.

செல்வமும் செழிப்பும், சில நாள்களில் அழியக்கூடியவை, அவற்றை நம்பிக்கொண்டு வாழத்துவங்கினால் நரகவாசம் நிச்சயம் என்று உணர்ந்திருந்தான்.

பகவான் ஸ்ரீ ஹரியிடத்தும், அடியார்களிடத்தும் எல்லையற்ற பக்தி கொண்டிருந்தான்.

எப்போதும் இறைவனின் தாமரைத் திருவடிகளையே எண்ணிக்கொண்டிருப்பான். பரமனது குணங்களை புகழ்ந்து பாடுவதிலும், அவற்றைக் கேட்பதிலுமே பொழுதைச் செலுத்தினான்.

இறைவனின் திருக்கோவிலில் பணி செய்ய ஆள்களை நியமித்துவிட்டு கம்பீரமாக, அரசதோரணையில் சென்று மேற்பார்வை செய்பவன் இல்லை.

தன்னை இறையின் சேவகனாக எப்போதும் உணர்பவன். திருக்கோவிலை தினமும் சுத்தம் செய்வது, மெழுகி அலகிடுவது ஆகியவற்றைத் தானே செய்தான்.

கண்களை எப்போதும் அர்ச்சாவதாரத்தை தரிசிப்பதிலும், உடலை ஸாதுசேவை செய்வதிலும், ஈடுபடுத்தினான்.

இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதம் தவிர வேறெதையும் உண்ணமாட்டான்.

தன் அரசவை, மாளிகை அனைத்து இடங்களிலும் எங்கிருந்து பார்த்தாலும் கோவிலின் வானளாவிய கோபுரம் தெரியும் வண்ணம் சாளரம் அமைத்திருந்தான். மற்ற பணிகள் செய்யும் நேரத்திலும், அவனது கண்கள் கோபுரத்தை நோக்கியபடி இருக்கும்.

அரசனின் அருகில் வாசனைத் திரவியங்கள், போன்றவை இருக்காது. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிர்மால்ய துளசியை எப்போதும் அருகில் வைத்துக்கொண்டு அதை அடிக்கடி முகர்ந்த வண்ணமே இருப்பான்.

கோவில்களுக்கும், திருத்தலங்களுக்கும் நடந்தே செல்லும் பழக்கமுள்ளவன்.

அரசன் என்பதால் சந்தனம், மாலை, பட்டாடை ஆகியவற்றைப் பயன்படுத்தும் நியதி இருப்பதால், அவற்றை பகவானுக்கு சாற்றிவிட்டு பிரசாதமாகவே தான் ஏற்பான்.

எந்த வேலையைச் செய்தாலும், அந்தர்யாமியான பகவான் பார்த்துக்கொண்டிருக்கிறார், இதன் பலனும் அவரைச் சேர்ந்ததே என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் முழுமனத்துடன் நம்பிச் செய்வான்.

பக்தி என்ற பெயரில் நாட்டை வெறும் பஜனை மடமாக மாற்றாமல், மக்களை நல் வழிப்படுத்தி, தானே அவர்களுக்கு முன்னுதாரணமாக நின்று திறம்பட்ட அமைச்சர்களைக் கொண்டு நல்லாட்சி செய்துவந்தான்.

ஸரஸ்வதி நதிக்கு அந்தப்பக்கம் இருந்த வறண்ட பாலை நிலத்தில் வசிஷ்டர், அஸிதர், கௌதமர் முதலிய‌ ரிஷிகளைக் கொண்டு ஏராளமான அஸ்வமேத யாகங்களைச் செய்தான்.
அவ்வேள்விகளின் பயன் அனைத்தையும் யக்ஞபுருஷனான பகவானுக்கே அர்ப்பணித்தான்.

அம்பரீஷனின் வேள்விச்சாலையில் இருந்த ரித்விக்குகள் நல்லாடைகள் அணிந்து, இமைப்பதை விட்டு தேவர்கள் போல் காட்சியளித்தனர்.
மக்களையும் தன் வழியில் செலுத்தியபடியால், அவர்கள் எப்போதும் இறையின் புகழைக் கேட்பதும், பாடுவதும், உற்சவங்கள் கொண்டாடுவதுமாக இருந்ததனர். அதனால் எவரும் வைகுண்டத்தையும் விரும்பவில்லை.

பக்தியினால் அரசாட்சியையும், அரசபாரத்தினால் பக்தியையும் விட்டானில்லை.

பற்றற்று விளங்கிய அம்பரீஷனிடம் பெருமகிழ்ச்சி கொண்ட பகவான் ஒரு நாள் அவனுக்குக் காட்சியளித்தார்.
பழக்கத்தினால், என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அம்பரீஷனுக்கு வேண்டியதுதான் என்ன?
இறைவனையே நேரில் கண்டபின்பு ஒரு உண்மையான பக்தனுக்கு என்ன தேவை இருக்கமுடியும்?
ஸ்ரீ ஹரி அவனது நிலையை மெச்சி, வந்ததன் அடையாளமாக, தன் சுதர்சனத்தை அவனிடம் கொடுத்தார். உன்னிடமே உனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும். என்று சொல்லி மறைந்துவிட்டார்.

பகவான் விரும்பிக் கொடுத்த சக்கரத்தாழ்வாரைப் பூஜையில் வைத்து ஆராதனம் மட்டும் செய்ய அம்பரீஷனுக்கு விருப்பமில்லை.
ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரையே சிம்மசனத்தில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்வித்து, அவருடைய குடையின் கீழ் தான் நிர்வாகம் செய்யத் துவங்கினான்.

தினமும் நடைபெறும் ராஜாங்க காரியங்கள் அனைத்தையும் சக்கரத்தாழ்வாரிடம் தெரிவித்து, கணக்கு வழக்குகளைப் படித்துக்காட்டி, கப்பத்தை அவரது திருவடிக்கே சமர்ப்பித்து, இவ்வாறாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாரைக் கொண்டாடத் துவங்கினான் அம்பரீஷன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment