Monday, March 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 404

இடைச்சேரி விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே தோரணங்கள், மாலைகள், தீபங்கள், ஏராளமான தானியங்கள் மலைபோல் குவிக்கப்படிருந்தன.

அண்டா அண்டாவாக விதம் விதமான உணவுகளும் பட்சணங்களும் தயாராகிக் கொண்டிருந்தன. வேள்விச் சாலைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து கோபர்களும் வேள்விக்கு வேண்டிய பொருள்களைத் தயார் செய்யும் வேலையில் இருந்தனர்.

நந்தன் ஒரு மரத்தடித் திண்ணையில் சில கோபர்களுடன் அமர்ந்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அனைத்தையும் நன்கு கவனித்த கண்ணன், நேராக தந்தையிடம் சென்றான்.

கண்ணனுக்கு அனைத்தும் தெரிந்தபோதிலும் மிகவும் அடக்கமாக, வணங்கிக் கேட்டான்.

அப்பா! இதென்ன இவ்வளவு பரபரப்பு? என்ன நடக்கப்போகிறது? என்ன வேள்வி? யாரைக் குறித்து? எதற்கு இவ்வளவு திரவியங்கள்? ஏதாவது விழாவா? என்னிடம் சொல்லக்கூடாதா? 

இந்த வேள்வி எதற்கு? இதன் காரண காரியங்கள் இருக்கிறதா? அல்லது வழக்கம் என்பதற்காகச் செய்கிறோமா?

கண்ணனைப் பற்றி நன்கறிந்த நந்தன் அவனை தீர்கமாகப் பார்த்தார். பின்னர் கூறத் துவங்கினார்.

கண்ணா! நமக்கெல்லாம் பகவான் இந்திரன். மேகங்களின் அதிபதி. நமக்கு நல்ல நீரை மேகங்கள்தானே வழங்குகின்றன? எனவே அந்த மேகங்களால் உண்டான மழையால் விளையும் பொருள்களைக் கொண்டு வேள்வி செய்து இந்திரனை வழிபடுகிறோம்.

நாம் இதைப் பரம்பரையாகச் செய்துவருகிறோம். இவ்வாறு குலவழக்கமாகச் செய்யும் விஷயங்களைத் தன் விருப்பத்திற்காகவோ, பேராசை, பயம், மற்றும் துவேஷம், சோம்பேறித்தனம் ஆகியவற்றால் செய்யாமல் விட்டால் நன்மை விளையாது.

இதைக் கேட்ட கண்ணன், இந்திரனைச் சீண்டிப் பார்க்கும் விதமாகப் பேசினான்.

அப்பா! ஒவ்வொரு உயிரும் கர்மவினையால் தோன்றுகிறது. கர்மவினையாலேயே மடிகிறது. இன்ப துன்பம் அனைத்திற்கும் காரணம் கர்மாதான்.

இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் கர்மவினைக்கேற்ற பயனையே அளிப்பார். கர்மா இல்லாமல் தன்னிச்சையாக சுகத்தையோ துக்கத்தையோ வழங்கமாட்டார்.

அவரவர் தத்தம் வினைக்கேற்ற பயனையே அனுபவிக்கிறார்கள் என்னும்போது, இங்கு இந்திரனால் நமக்கென்ன பயன்?

வினைப்பயனை ஒட்டியே இவன் எதிரி, இவன் நண்பன் என்ற பாகுபாடு நிலவுகிறது.

முன்வினைக்கேற்ப விதிக்கப்பட்ட கடைமைகளைச் செய்துகொண்டு வாழ்வை நடத்தவேண்டும். வாழ்வை நடத்த எது உதவுகிறதோ அதுவே தெய்வம்.

வாழ்விற்குதவும் தெய்வத்தை விட்டு மற்றவரை உபாசனை செய்தால் பலனொன்றுமில்லை.

அப்பா! வைசியர்களாகிய நமக்கு விவசாயம், வணிகம், பசுக்களைக் காத்தல், வட்டிக்குப் பணம் தருதல் ஆகிய நான்கும் வாழும் வழிகள். நாமோ பசுக்களைக் காத்துப் பிழைக்கிறோம்.

முக்குணங்களால் தூண்டப்பட்டே பிரபஞ்ச கர்மங்கள் யாவும் நடக்கின்றன. மழை ரஜோ குணத்தால் தூண்டப்படுகிறது. இதில் மகேந்திரனுக்கென்ன வேலை?

நமக்கென்று நாடோ, வீடோ, நகரமோ கிடையாது. நாம் எப்போதும் காட்டிலும் மலையிலும்தானே வசிக்கிறோம். எனவே அந்தணர்கள், பசுக்கள் இவர்களின் நன்மைக்காக ஒரு சிறிய வேள்வி  செய்யலாம். எல்லா விதமான உணவுகளும் தயாராகட்டும்.
 அந்தணர்களுக்குப் பல்வகையான உணவுகளையும், தக்ஷிணைகளையும் கொடுக்கலாம். 

மற்ற ஜீவராசிகள், சமூகத்தில் பிற்பட்ட மக்களுக்கும் அவரவர்க்குப் பிடித்த உணவைக் கொடுப்போம். பசுக்களுக்குப் புற்களைக் கொடுப்போம். கோவர்தன மலைக்குப் படையல் போடுவோம். புத்தாடை உடுத்தி, நன்கு அலங்கரித்துக் கொண்டு, நன்கு உண்டபின், மலையை வலம் வருவோம். வேள்வி, பசுக்கள், அந்தணர்கள், மற்றும் இந்த கோவர்தன மலை ஆகியவையே எனக்குப் பிரியமானவை. 

நான் சொன்னவை தங்களுக்கு உகப்பென்றால் செய்யுங்கள் என்றான்.

கண்ணன் பேச பேச, எல்லா கோபர்களும் அங்கு கூடிவிட்டிருந்தனர்.

அனைவரும்‌ சேர்ந்துகொண்டு 
கண்ணன் சொன்னது சரி. கண்ணன் சொன்னது சரி என்று கூக்குரலிட, நந்தன் ஊராரின் ஆமோதித்தலின்படி கண்ணன் சொன்னதை செயல்படுத்த உத்தரவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment