Wednesday, March 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 406

தேவேந்திரன் யாகத்தின் மூலம் வரப்போகும் உணவுகளுக்காகக் காத்துக் காத்துக் குழம்பினான்.

ஏன் யாக உணவுகள் வரவில்லை? ஒருக்கால் தீட்டு, மரணம் அல்லது வேறு ஏதாவது காரணங்களால் யாகத்தைத் தள்ளி வைத்திருக்கிறாகளா?

யோசித்து யோசித்துப் பின் பொறுமையை இழந்து, ஒரு தேவனை அழைத்து என்னவாயிற்றென்று பார்த்து வர அனுப்பினான். 
அந்த தேவன் கோகுலம் சென்று நடந்ததைக் கண்டு வந்து இந்திரனிடம் உரைக்க, தேவேந்திரனின் கோபம் தலைக்கேறியது.

கண்ணனின் மீதும், நந்தனின் மீதும் வந்த ஆத்திரத்தால் அறிவை இழந்தான். தானே இறைவன் என்ற கர்வத்தினால் உலகை அழிக்கும் ஸம்வர்தகம் என்ற ப்ரளய கால மேகக்கூட்டத்தை அழைத்தான்.

காட்டில் வசிக்கும் இடையர்கள், போயும் போயும் மனிதர்கள், செல்வச் செருக்கால் தேவர்களை அவமதித்துள்ளனர்.

கண்ணன் ஒரு வாயாடி, திமிர் பிடித்தவன், அறிஞன் என்ற அகங்காரம், மனிதன், அவனைத் துணைக்கொண்டதற்காக அந்த இடையர்கள் வருந்தவேண்டும்.
(இந்த ஸ்லோகத்திற்கு மாற்றாகப் பொருள் உண்டு. பெரியவர்களால் நிந்தா ஸ்துதியாக போற்றப்படுகிறது.)

மேகங்களே, தங்களைப் பெரிய மனிதர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் அவர்களது செருக்கைப் பொடிப் பொடியாக்குங்கள். அவர்களது செல்வமான  பசுக்களையும் அழியுங்கள்.

பேராற்றல் கொண்ட மருத் என்ற காற்றுக்கூட்டத்துடன் நான் உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன்.

மலைக்குப் பூஜை செய்துவிட்டு கோகுல வாசிகள் வீடு திரும்பினர். அன்று முழுவதும் மலைச்சாமியைப் பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. மலைச்சாமி கண்ணனைப் போலவே இருந்தது என்று பேசிக்கொண்டார்கள்.

திடீரென்று வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மின்னல்கள் கண்ணைப் பறித்தன. வானமும் மேல் லோகங்களும் கீழே விழுந்துவிட்டதைப்போல் தொடர்ந்து இடி விழுந்தது. பேய்க்காற்று வீசிற்று. ஆலங்கட்டி மழை கொட்டத் துவங்கிற்று.

குடிசைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கண்ணன் ஊருக்கு மத்தியில் ஒரு மரத்தடியில் கல்லின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்திருந்தான்.

அனைவரும் மாடுகளை அழைத்துக்கொண்டு கண்ணனிடம் ஓடிவந்தார்கள்.

கண்ணன் அவர்கள் அனைவரையும் தீர்கமாக ஊன்றி கவனித்தான்.

ஸர்வக்ஞனான பகவான் அவர்கள் மனத்தைப் படித்தான்.

இந்திர வேள்வியைத் தடை செய்ததால் அவன் கோபம் கொண்டு மழையை ஏவியிருப்பதை அறிந்திருந்தான்.

கண்ணா காப்பாற்று என்று வேண்டிய கோபர்கள் 
ஒருவராவது வேள்வியை நிறுத்தியதால் வந்த ஆபத்து என்றோ  கண்ணனால் நிகழ்ந்தது என்று சொல்வதல்ல, மனத்தினால் கூட எண்ணவில்லை.

கையிலிருந்த கோலை ஊன்றி எழுந்து, கல்லின் மேல்‌ ஏறிய கண்ணன், அவர்களைப் பார்த்துப்‌ பேசத் துவங்கினான்.

தனக்கான வேள்வி தடைபட்டதால் இந்திரன் கோபம் கொண்டு மழையை ஏவியிருக்கிறான். கவலைப் படாதீர்கள். நான் அவனது திமிரை அடக்குவேன். ஸத்வ குணம் கொள்ள வேண்டிய தேவர்கள் அகங்காரம் கொள்வது பிரபஞ்ச ஒழுங்கை பாதிக்கும். என்னையே சரணடைந்தவர்களை நான் அனைத்து சக்திகளையும் பயன்படுத்திக் காப்பாற்றுவேன். இதுவே என் கொள்கை.

அனைவரும் என் பின்னால் வாருங்கள்.

என்று கூறி, விறுவிறுவென்று நடக்கத் துவங்கினான்.

கோகுலத்திலிருந்த கோப கோபியர்கள், மாடுகள், மற்றும் அனைத்து ஜீவராசிகள் அனைத்தும் கண்ணனைப் பின் தொடர்ந்தன.
நாமும் எப்போதும் கண்ணனைப் பின்தொடர்வோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment