Tuesday, March 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 411

கண்ணன் கோவர்தனத்தைத் தூக்கியது ஐப்பசி மாத சதுர்தசி, தீபாவளி. அன்றிலிருந்து ஏழு நாள்கள் மலையைத் தாங்கிக் கொண்டிருந்தான். எட்டாம் நாளன்று இந்திரன் வந்து வணங்கி கோவிந்த பட்டாபிஷேகம் செய்வித்தான். எனவே அன்று வட இந்தியாவில் 'கோபாஷ்டமி' என்று கொண்டாடுகின்றனர்.

அடுத்து வந்த கார்த்திகை மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம் கைசிக ஏகாதசி என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அது மிகவும் புண்யமான தினம் என்பதால், அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்தார் நந்தன். பின்னர் மறுநாள் துவாதசி அன்று அதிகாலை எழுந்து யமுனையில் ஸ்நானம் செய்யப் புகுந்தார்.

உண்மையில் அவர் சென்றது நள்ளிரவிலாகும். சேவலின் குரலைக் கேட்டு அதிகாலை என்றெண்ணிச் சென்றுவிட்டார்.

நள்ளிரவு நேரம் அசுரர்களின் வேளையாகும். அவ்வேளையில் நதிகளில் நீராடுதல் பாபத்தை விளைவிக்கும். அறியாமையால் நந்தன் யமுனையில் இறங்க, வருணனின் பணியாளன் ஒருவன், வருணனின் உத்தரவின்படி நந்தனைப் பிடித்து வருணலோகம் கொண்டுசென்றுவிட்டான்.

நதிக்கு ஸ்நானம் செய்யப்போன நந்தன் விடிந்து வெகுநேரமான பின்னும் திரும்பாததால் அரண்மனையில் பதட்டம் கூடிற்று. அரசனைக் காணவில்லை என்னும் செய்தி மக்களை எட்டுமுன் கண்டுபிடித்து அழைத்துவரத் தலைப்பட்டான் கண்ணன். 

எல்லா இடங்களிலும் தேடினான். யமுனை முழுவதிலும், மடுக்களிலும் தேடிக் காணாமல், ஞான திருஷ்டியால் நோக்கினான்.

நந்தன் வருணலோகத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் மிகுந்த கோபம் வந்தது. தனக்குத் துயரென்றால் அதைப் பொறுக்கும் கண்ணனுக்கு, தன் மீது அளவற்ற அன்பு கொண்ட தந்தைக்குத் துன்பம் என்றதும் பொறுக்க இயலவில்லை.

மிகுந்த சினத்துடன் காலனைப்போல் கிளம்பி வருணலோகம் சென்றான். தந்தையைத் தேடி பகவானான கண்ணன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தான் வருணன். எனவே இறைவனை வரவேற்க வருணலோகத்தின் வாசலிலேயே அனைத்து வித மரியாதைகளையும் செய்ய ஆயத்தமாய்க் காத்திருந்தான்.

கோபத்துடன் வந்த கண்ணன் வரவேற்பைக் கண்டதும் சற்று சினம் தணிந்தான்.

கண்ணனை வணங்கி, எல்லாவித மரியாதைகளையும் செய்தபின் வருணன் துதிக்கத் துவங்கினான்.

ப்ரபோ! உடல் பெற்ற பயனை இன்றுதான் அடைந்தேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவர்கள் ஸம்ஸாரக் கடலின் அக்கரையை அடைகிறார்கள்.

யோகிகளுக்குப் பரமாத்மாவாகவும், வேதாந்திகளுக்கு பரப்பிரும்மமாகவும், பக்தர்களுக்கு பகவானாகவும் இருப்பது தாங்களே. 

மாயை இவ்வுலகை தங்களிடமிருந்து வேறாகக் காட்டுகிறது. ஆனால் தங்களிடம் செயலிழந்துவிடுகிறது. 

தங்களது பெருமை உணராமல் என் பணியாள் செய்த தவற்றை மன்னிக்கவேண்டும். தங்கள் தந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்றான்.

தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் கண்ணனின் சினம் முற்றாய்த்  தணிந்தது. நந்தனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

தேவாதிதேவரே ஆனாலும் பகவான் வைகுண்டத்தில் இருக்கும்போது தரிசனம் செய்ய முடிவதில்லை. எத்தகைய துயர் வந்தாலும் அவர்கள் ப்ரும்மாவிடம் முறையிட்டு, அவர் மூலமாகத்தான் இறைவனிடம் கூற இயலும். அப்போது பகவானாக மனம் வைத்து தரிசனம் தந்தால் உண்டு. பல நேரங்களில் அசரீரியாகப் பேசிவிடுகிறான். க்ருஷ்ணாவதாரத்தின் போதும் ப்ரும்மாவின் மனத்தில் தியானக் குரலாய் ஒலித்தானே தவிர, பகவானின் தரிசனம் இல்லை.

அத்தகைய பகவான் பூமியில் இறங்கி மிகவும் எளிமையாக வெண்ணெய் திருடி, சிறுவர்களுடன் விளையாடுகிறான் என்னும்போது தேவர்களுக்கு மிக அதிசயமாக இருக்கிறது. பூலோகத்தில் காலைக் கூட வைக்காமல் இரண்டடி மேலிருந்தே பேசும் பழக்கமுள்ளவர்கள் தேவர்கள்.

இந்திரன், ப்ரும்மா ஆகியோர் பகவானின் எளிமையைக் கண்டு ஏமாந்துபோயினர். ஆனால், வருணனின் நிலை வேறு. 

இந்திரன் சொல்லி மழையைப் பொழிவித்த நீர்க்கடவுளான  வருணன், பகவானின் பெருமைகளைக் கண்ணெதிரே கண்டவன். ஏழு நாளும் மழை வடிவில் கிரிதாரியை அவனும் ரசித்தவன்தானே.

எப்படியாவது பகவான் விபவாவதாரம் (புவியில் இறங்கியிருக்கும்போதே) தன் லோகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றெண்ணினான் போலும். அதனால் அவனே நள்ளிரவில் கூவ சேவலைத் தூண்டினான் என்றும் சொல்கிறார்கள்.

எப்படியோ கண்ணன் வருணலோகத்தில் கால் பதித்து தந்தையை மீட்டு வந்துவிட்டான்.

பகவான் பரவாசுதேவனாக இருக்கும்போது மற்ற லோகங்களுக்குச் செல்வதில்லை. எனவே க்ருஷ்ணாவதாரத்தில் எல்லா‌ லோகங்களுக்கும் சென்று வந்துவிடுகிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment