Monday, March 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 410

யார் இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் படைத்து அதனுள் நுழைந்து நீக்கமற நிறைந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறாரோ, 

யார் ஈரேழு பதினான்கு லோகங்களின் தலைவர்களையும், அவற்றை‌ நிர்வகிக்க அதிகாரிகளையும் நியமித்தாரோ,

யாருக்கு எவராலும் பயனில்லையோ, எவருடைய துணையுமின்றி எவர் தனித்தியங்குவாரோ,

எல்லாவற்றிற்கும் மேலாக எவர் தன்னை இந்திர பதவியில் நியமித்தாரோ,

அவரது பராக்கிரமங்களையும், இயல்பையும் மறந்து அவரிடமே தான் பெரியவன் என்ற திமிரைக் காட்டினான் இந்திரன். 

அதன் பலனாக இறைவனை ஏறெடுத்தும் பார்க்கத் துணிவில்லாமல் வருந்தி, கூனிக் குறுகிக் கொண்டு தன் செருக்கு முற்றிலும் அழிய, தலையைக் கவிழ்ந்துகொண்டு நின்றான்.

பின்னர் மெதுவாக தழுதழுத்த குரலில் பேசினான்.

இறைவா! உமது வடிவம் பரம சாந்தமானது. ஸத்வ குணத்தால் ஆனது. தங்களைப் பற்றிய உண்மை அறியாதவர் தங்களை சாதாரண மனிதப் பிறவி என்றெண்ணுகின்றனர்.

அறியாமையின் தொடர்பு தங்களுக்குத் துளியும் இல்லை. அப்படியிருக்க ஆசை, கோபம், கஞ்சத்தனம் ஆகிய தீய குணங்கள் தங்களிடம் எவ்வாறு இருக்கும்?

உலகின் தந்தை, குரு, தலைவன், காலன், ஈசன் அனைத்தும்‌ நீரே!

அப்படியிருக்க நானே ஈசன் என்ற செருக்குடையவர்கள், தங்களால் அகங்ஹாரம் அழியப்பெற்று பக்தி மார்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

உமது பெருமையை உணராமல், செருக்கால் நான் செய்த பிழைகளைப் பொறுத்தருளுங்கள்! இனியும் இத்தீய எண்ணம் எனக்கு எக்காலத்திலும் வரக்கூடாது.

எனக்கான வேள்வி தடைபட்டதால் என் ஆளுமையிலிருந்த பெருமழையையும், காற்றையும் துஷ்பிரயோகம் செய்து கோகுலத்தை அழிக்க முற்பட்டேன். என் முயற்சிகள் அனைத்தும் வீணாகி அகங்காரம் அழிந்தது. தங்களையே சரணடைகிறேன்.

கலகலவென்று சிரித்த கண்ணன், இடி போன்ற கம்பீரமான குரலில் பேசினான்.

இந்திரா! உன் செருக்கை அழிக்கவே வேள்வியைத் தடை செய்தேன். செல்வத்தால் ஏற்பட்ட ஆணவத்தால் கண்கள்‌ குருடாகின்றன. அவனது கண்கள் காலரூபனான என்னைக்‌ காண்பதில்லை. நான் யாருக்கு அருள் புரிய விரும்புகிறேனோ அவர்களது செருக்கை அழிப்பேன். எப்போதும் என்னை நினைவில் கொள்ளச் செய்வேன்.

நீங்கள் இப்போது செல்லலாம். உங்கள் கடைமைகளைக் குறைவறச் செய்யுங்கள். என்றான்.

அப்போது இந்திரனுடன் வந்திருந்த காமதேனு கண்ணனை வணங்கிப் பேசினாள்.

உலகைக் காக்கும் இறைவா! நீரே எங்களது மேலான தெய்வம். பசுக்களையும் அந்தணர்களையும், நல்லோரையும் துன்புறுத்திய இவரைத் தலைவராக இனி எங்களால் ஏற்க இயலாது. நீரே எங்களது தலைவன் என்று பட்டாபிஷேகம் செய்ய விரும்புகிறோம். 

கோலோகத்தின் தலைவராக கோவிந்தரான நீங்களே இருக்கவேண்டும்.

கண்ணன் சிரித்து ஆமோதிக்க,
சுரபி தன் பாலால் கண்ணனுக்கு அபிஷேகம் செய்தாள். இந்திரன் தன் தாயான அதிதியின் சொற்படி, ஐராவதத்தை ஆகாச கங்கையைக் கொண்டுவரப் பணித்திருந்தான். அந்த நன்னீரால் கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்து கோவிந்தன் என்று பெயர் சூட்டினான்.

தும்புரு, நாரதர், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், சாரணர்கள், மற்ற எல்லா தேவர்கள், அனைவரும் வந்து கோவிந்தன் பெயரைப் பாடி பூமாரி பெய்து, ஆனந்த நடனம் புரிந்தனர்.

கோவிந்த பட்டாபிஷேகம் சிறப்பாக முடிந்ததும் இந்திரன் மற்ற தேவர்களுடன் கண்ணனின் அனுமதி பெற்று இருப்பிடம் சென்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.




No comments:

Post a Comment