Monday, November 19, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 149 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 93

ப்ரசேதஸர்கள் தவம்‌ செய்யும் காலத்தில் அவர்களின் தந்தையான ப்ராசீனபர்ஹிஸின் மனம் கர்மங்களைச் செய்வதிலேயே ஈடுபாடு கொண்டது. அப்போது நாரதர் அவர் முன் தோன்றி புரஞ்சனன் என்பவனின் சரித்திரத்தைக் கூறினார்.

ஸ்ரீ மத் பாகவதத்தில் ஐந்து அத்யாயங்களில் புரஞ்சனோபாக்யானம் சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் விதுரர் கேள்வியெழுப்பவே ப்ரசேதஸர்களின் கதை தொடர்கிறது. நாம் இப்போது ப்ரசேதஸர்களின் கதையைப் பார்த்துவிட்டுப் பிறகு புரஞ்சனனின் கதையை சுருக்கமாகப் பார்க்கலாம்.

விதுரர் கேட்டார்.

ப்ரசேதஸர்கள் ருத்ரகீதத்தை ஜபித்து நிச்சயம் பகவானின் திருவடியை அடைந்திருப்பார்கள். அக்கதையை விரிவாகக் கூறுங்கள் என்றார்.
ஐந்து அத்யாயங்கள் புரஞ்சனோபாக்யானம் கேட்டுவிட்டு மறக்காமல், மீண்டும் ப்ரசேதஸர்களின் கதையைப் பற்றிக் கேட்ட விதுரரின் விழிப்புணர்வை எண்ணி மகிழ்ந்தார்
மைத்ரேயர்.

பரமேஸ்வரனிடம் உபதேசம் பெற்ற பின்னர் ப்ரசேதஸர்கள் நடுக்கடலில் நின்றுகொண்டு தவம் இயற்ற ஆரம்பித்தனர்.

ருத்ரகீதத்தினால் ஸ்ரீ ஹரியை‌ மகிழ்வித்தனர். பத்தாயிரம் வருடங்கள் முடிந்த நிலையில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவர்களுக்குக் காட்சியளித்தார்.

அவரது திருமேனியின் ஒளியால் ப்ரசேதஸர்களுக்கு தவம் செய்த களைப்பு நீங்கியது.

கருடன்மீது அமர்ந்துவந்த பகவான் கார்மேகம் போல்‌இருந்தார். அரையில்‌ பொன்னாடை, கழுத்தில் கௌஸ்துபம். அவரது ஒளியால்‌ நாற்றிசையும்‌ ப்ரகாசமடைந்தது.

ஒளிவீசும் ஆபரணங்கள். எட்டுக் கைகளிலும் எண்வகை ஆயுதங்கள். கருடாழ்வார் சாமவேதமயமான இறக்கைகளின் இனிய நாதத்தால் பகவானின் திருப்புகழைப் பாடுகிறார்.

வனமாலை புரளும் மார்பில் ஸ்ரீவத்ஸம். அழகிய திருக்கண்களால் அன்பொழுகப் பார்த்து மேக கர்ஜனை போன்ற‌குரலில் பேசத் துவங்கினார்.

அரசகுமாரர்களே! உங்களுக்கு அனைத்து நலன்களும் உண்டாகட்டும். நீங்கள் அனைவரும் உடலால் மட்டுமே வேறுபட்டவர்கள். தங்களின் மன ஒற்றுமை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

தினமும் மாலை வேளையில் தங்களை நினைப்பவனுக்கு தன் சகோதரர்களிடமும், மற்ற ஜீவராசிகளிடமும் நீங்காத அன்பு பெருகும்.

காலையும் மாலையும் நீங்கள் துதித்த ருத்ரகீதத்தால் என்னை ஆராதிப்பவனுக்கு அவன் விரும்பும் வரத்தையும் மெய்ஞானத்தையும் அளிப்பேன்.

உங்கள்‌ புகழ் உலகெங்கும்‌ பரவப்போகிறது.

எனதருளால் குன்றாத வலிமையோடும் இளமையோடும் பத்து லட்சம்‌தேவ வருடங்கள் இம்மை‌ மறுமை இன்பங்களை அனுபவிப்பீர்களாக!

முடிவில், என்னை ஆராதித்ததன் பலனாய் பெறற்கரிய மனத்தூய்மை பெற்று அற்ப சுகங்களில் வெறுப்புற்று என் லோகமான வைகுண்டத்தை அடைவீர்கள்.

எவரது செயல்கள் அனைத்தும் பகவத் அர்ப்பணமாகச் செய்யப்படுகின்றனவோ, எவரது நேரமும்‌ காலமும் என் திவ்ய சரித்ரங்களைக்‌ கேட்பதிலும் கூறுவதிலுமாகவே கழிகிறதோ, அவர் இல்லறத்தில் இருந்தபோதும் இல்லற இன்ப துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை.

அவர்கள் தினமும் என் கதைகளையே பேசி வருவதால், நான் அவர்களது ஹ்ருதய கமலத்தில் தினம்தினம் புதிய புதிய வடிவங்களில் காட்சி அளிப்பேன். அவர் உலகியல் ஆசாபாசங்களைக் கடந்து நித்ய முக்தராக விளங்குவார்.
என்று கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment