Monday, November 12, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 142 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 86

சநத்குமாரர் மேலும்‌ கூறலானார்.

செல்வம், புலன் நுகர்ப்பொருள்கள், அதனால் வரும் இன்பம் என்று சிந்தித்திருப்பவன் தனது உயர்ந்த புருஷார்த்தங்களை அழித்துக்கொள்கிறான்.

அவற்றால் பகுத்தறிவும் சிற்றறிவும் மொத்தமாக அழிந்துபோய் அடுத்த பிறவியில் பகுத்தறிவற்ற ஜீவனாகவும் மரம் செடி கொடிகளாகவும் பிறக்கிறான்.

அஞ்ஞானமாகிய இருளைக் கடக்க விரும்புகிறவன், இவ்வுலகியல்‌ இன்பங்களில் மனத்தைச் செலுத்தாமல்‌ இருக்கவேண்டும்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்‌ஆகிய நால்வகைப் புருஷார்த்தங்களையும்‌அடைய விடாமல் தடுப்பது உலகியல் பற்றே ஆகும்.

நான்கு புருஷார்த்தங்களிலும் சிறந்தது முக்தி இன்பம். மற்ற மூன்றும் காலத்தால் அழியக்கூடியவை.
முக்குணங்களின்‌ பாதிப்புகளால் பிறக்கும் எப்பிறவியாயினும், காலன் விழுங்குகிறான். அவற்றிற்கு அழிவு உண்டு.

அனைத்து ஜீவராசிகளும் இறைவனே என்று அறியுங்கள். இது அபேதோபாசனை எனப்படும். அந்த பகவான் தான் நான் என்ற வேறுபாடற்ற எண்ணத்தைக் கொள்ளுங்கள்.

பகவான் நித்யமுக்தன்
அவருக்கு தளை என்பதே இல்லை.
உள்ளும் புறமும் தூய்மையானவர்.
ப்ரபஞ்சம்‌ தோன்றக்‌ காரணமானவர்.
கர்மாவினால் ஏற்படும் பிறவிகள் அவருக்கு இல்லை.

பஞ்சபூத தேகமற்றவர். அவர்‌ திருமேனி ஸத் சித் ஆனந்தமயமானது.
அவரது மாயைக்கு ஆட்பட்டவர்களுக்கு அவரைப் பற்றி புரியாது.

இருட்டில் பூமாலையைக் கண்டவன் பாம்பு என்று பயம் கொள்கிறான்.

வெளிச்சம் வந்ததும் மாலை என்று தெரிகிறது. பயமும் போய்விட்டது.

ஒருமுறை மாலை என்று தெளிந்தபின் பாம்பு என்ற அச்சமே வராது.

அதுபோல் உண்மை ஞானம் பெற்றவன் மாயையால் பாதிக்கப்படுவதில்லை.

பகவான் வாசுதேவனின் பாதகமலங்களில் கொண்ட பக்தியால், சாதுக்கள் பந்தத்தினால் ஏற்படும் அஹங்காரத்தை அறுத்தெறிகிறார்கள்.

யோகிகளால்கூட பந்தத்தை பக்தனைப்போல் சுலபமாக அறுத்தெறிய முடிவதில்லை.

ஐந்து புலன்களும் மனமும் சேர்ந்து ஆறு முதலைகள் போல் சுற்றி சுற்றி வரும் இந்த ஸம்சாரமாகிய ஆழ்கடலை பக்தர்கள் பகவானின் சரணகமலமாகிய ஓடத்தைப் பற்றிக்கொண்டு கடந்துவிடுகிறார்கள்.

ஆனால் சிலர் அந்த கோரமான கடலை ஓடமின்றிக் கடக்க முயல்கின்றனர்.
அதற்குக் காரணம் கர்மம், யோகம்‌ முதலிய சாதனங்கள்.

அவை எளிதில் கடக்க உதவி செய்யாது.
நிறைய கஷ்டங்கள் நிரம்பிய பாதைகள் அவை.

ஆகவே, அனைவராலும் எளிதில் சேவித்து வணங்கக்கூடிய பகவானின் திருப்பாத கமலங்களைத் தெப்பமாகப் பற்றிக்கொண்டு இறைநாமத்தினால் இந்த சம்சாரக் கடலைத் தாண்டுங்கள்.
என்றார்.

இவற்றைக்‌கேட்டதும் ப்ருது உணர்ச்சி மிகுதியால் தழுதழுத்தார்.
பின்னர் பேசலானார்.

முன்னர் கருணைக்கடலான பகவான் நேரில் வந்து காட்சியளித்தார். பகவானான தாங்களோ ஞானத்தை மொத்தமாக வழங்க நேரில்‌ வந்திருக்கிறீர்கள்.

பகவானின் திருவருளை முழுவதுமாக எனக்குக் கிடைக்கும் படி செய்தீர்கள்.
இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?

(அனைத்துமே இறைவன் படைத்ததாகையால், அவன் கொடுத்ததை அவனுக்கே தக்ஷிணையாகக் கொடுப்பது அழகில்லை).

என் சொந்தம், சொத்துக்கள், அரண்மனை, ராஜ்யம் சேனைகள், பூமி, பொக்கிஷங்கள் அனைத்தும்‌ தங்களுக்கே சமர்ப்பணம்.

பகவானை அடையும் சன்மார்கம் இதுதான் என்று காட்டித்தருபவர்க்கு கைம்மாறு செய்துவிடமுடியும் என்று நினைத்தல் நகைப்புக்குரியது.
இரு கரம்‌ கூப்பி வணங்குவதைத் தவிர வேறெதுவும் செய்துவிடமுடியாது.
என்றார் ப்ருது.

அதன் பின் சனகாதியர் ப்ருதுவிற்கு அனுக்ரஹம் செய்துவிட்டு ஆகாய மார்கமாய்ச் சென்றனர்.

இப்பதிவு தொடர்பாக நினைவுக்கு வந்த நமது குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்.

ராகம் : பைரவி
தாளம் : ஆதி

பல்லவி
கை கொடுத்தென்னை கரையேற்றிவிட்ட உந்தனுக்கு
கைம்மாறு என்ன செய்வேன் குருநாதா || கை ||

அனுபல்லவி
வையத்திலே மீண்டும் பிறந்து உழலாமல் நான்
உய்ய உன்னத வழிகாட்டிய உந்தனுக்கு || கை ||

சரணம்
கல்லும் கரைந்திடும் வண்ணம் நீ
அல்லும் பகலும் பாகவதக் கதை உரைப்பாய்
உள்ளும் புறமும் என்னை ஆட்கொண்டு
துள்ளும் மனதில் வந்தமர்ந்து ஆட்சி செய்வாய் || கை ||

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment