Saturday, November 17, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 147 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 91

ருத்ரகீதம் - 2

20. மனத்தூய்மை வேண்டுபவர்கள் எப்போதும் தியானம் செய்யவேண்டிய மனோஹர ரூபம்‌ இதுவே. தத்தம் கடைமைகளையும் அனுஷ்டானங்களையும் தவறாது பின்பற்றுபவர்க்கு பக்தியோகமே சிறந்தது.

21. இந்திராதி தேவர்களும், லோகபாலர்களும் தங்களை அடையவே விரும்புகிறார்கள். ஆத்மஞானிகளும் விரும்புவது தங்கள் சரணமே. இறைவா! தங்களையே நம்பு அடியவர்கள்தான் தம்மைச் சுலபமாக அடைய இயலும்.

22. தர்மங்களை அனுஷ்டிப்பதால் மட்டும் தங்களை‌ மகிழ்விக்க இயலாது. பக்தியற்ற கர்மயோகிகள் தங்களை அடைவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஏகாந்த பக்தி உள்ளவன் தங்கள் சரணத்தைத் தவிர எவ்வித உயர்ந்த லோகத்தையும் விரும்பான்.

23. தனது புருவங்களை நெறிப்பதாலேயே ப்ரபஞ்சத்தை அழிக்கும் மரணதேவன் தங்களிடம் சரண் புகுந்தவனின் நிழலைக்கூடத் தொடமுடியாது. தங்களது அடியார்களுக்கு எமபயமில்லை.

24. பகவானின் திருவடிகளில் பக்தி செய்யும் அடியார்களின் சங்கம் அரைநொடி கிடைத்தாலும் அதற்கிணையாக ஸ்வர்காதி புண்ய லோகத்தையோ முக்தியின்பத்தையோ இணையாகக் கருதமாட்டேன். அவ்வாறிருக்க உலக இன்பங்களை எவரேனும் விரும்புவாரா?

25. தங்கள் சரணம் பாவங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் போக்குகிறது. அந்த சரண கமலங்களின் புகழ் பாடுவதால் மன அழுக்கு தொலைகிறது. தங்கள் சரண சம்பந்தத்தால் அன்றோ கங்கை புற அழுக்கையும் பாவங்களையும் போக்கிறது?
இவ்வாறு மன அழுக்கு நீங்கப்பெற்ற சாதுக்களின் இணக்கம் எங்களுக்கு எப்போதும்‌ கிடைக்கவேண்டும்.

26. எந்த சாதகனுடைய சித்தம் உலகியல்‌ இன்பங்களை விடுத்து, அஞ்ஞானத்தில் மயங்குவதில்லையோ, அவன் வெகு எளிதில் தங்கள்‌தரிசனத்தைப்‌ பெறுகிறான்.

27. பெருமானே! தாங்களே பரப்ரும்மம். தங்களிடமிருந்து தோன்றியதே இந்த ப்ரபஞ்சம். ப்ரபஞ்சமாகக் காணப்படுபவரும் நீரே. தங்களிடம் அடங்கும் இவ்வுலகில் தாங்கள் எங்கும்‌பரவியிருக்கிறீர். தாங்கள் ஒளிமயமானவர்.

28. இறைவா! தங்கள்‌ மாயைக்குத்தான் எத்தனை வடிவங்கள்! அதைக்கொண்டே இவ்வுலகைப் படைத்து, பரிபாலித்து அழிக்கவும் செய்கிறீர். இவையனைத்தும் கண்ணுக்கு உண்மைபோல் தோன்றினாலும் தங்களிடம் எந்த மாறுதலும்‌ இல்லை. ஜீவராசிகளிடம்‌ பல்வேறு வேறுபாடுகள் தோற்றமளிக்கின்றன. ஆனால் அனைத்தும் தாங்களே. தங்களிடம் மாயை செல்லாக் காசு. தாங்களே பூரண ஸ்வதந்த்ரர்.

29. பஞ்சபூதங்கள் பொறி, புலன்கள் ஆகியவற்றை வழிநடைத்திச் செல்வதிலிருந்து தாங்கள் மிகவும் ஸூக்ஷ்மமானவர் என்பது புரிகிறது. தங்களை அடையத்துடிக்கும் ஒருவன் பல்வேறு செயல்கள் (வேதம் ஓதுதல், விரதம் இருத்தல், தியானம் செய்தல், அன்னதானம் செய்தல், குளங்கள் வெட்டுதல்) வாயிலாக தங்களது ஸகுண ஸ்வரூபத்தை மிகுந்த ஈடுபாட்டுடன்‌பூஜிக்கிறான். உண்மையில் அவனே வேதத்தி்ன் கருத்தை அறிந்தவன்.

30. ஈடு இணையற்ற ஆதி புருஷர் தாங்கள். படைப்பிற்கு முன் மாயாசக்தி தங்களிடமே அடங்கியிருந்தது. பின், அதனினின்றும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண வேறுபாடுகள் தோன்றின. அவற்றிலிருந்து பஞ்ச மஹா பூதங்களும், தேவர்களும், ரிஷிகளும், இந்த ப்ரபஞ்சமும் தோன்றின.

31. பின்னர், தங்களது மாயா சக்தியால் தோன்றிய நால்வகைப் பிறப்புகளின் உடல்களிலும் தங்களது ஓர் அம்சத்துடன் உட்புகுந்தீர்கள். ஆகவேதான் உள்ளிருக்கும் ஜீவனை அனைவரும் பகவான் என்றறிகின்றனர். ஜீவன் உடலில் இருந்துகொண்டு உலக சுகங்களை அனுபவிக்கிறான்.

32. ப்ரபோ! தங்கள் தத்துவத்தை நேருக்கு நேர் கண்டவர் எவருமிலர். ஸ்தூல ஸூக்ஷ்மங்களாக விளங்கும் பொருள்களால், தோற்றுவித்த தங்களை ஊகித்தறியமுடியும். ஊழிக்காலத்தில் காலரூபியான தாங்கள்‌ பஞ்ச மஹாபூதங்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அனைத்து உலகங்களையும் அழிக்கிறீர்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment