Wednesday, November 14, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 144 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 88

மைத்ரேயர் ப்ருதுவின் கதையை முழுமையாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

மிகவும் புனிதமான ப்ருதுவின் கதையைக் கேட்பவர், படிப்பவர், பிறர் கேட்கச் சொல்பவர் ஆகியோர் ப்ருது மன்னர் அடைந்த உயர்ந்த உலகை, அதாவது வைகுண்டத்தை அடைவர்.
இதைப் படிக்கும் அந்தணன் ப்ரும்மதேஜஸை அடைவான். க்ஷத்ரியன் அரசர்க்கரசனாவான். வைசியன் மிகச் சிறந்த வாணிபத்தையும் செல்வத்தையும் அடைவான். நான்காம் வர்ணத்தவன் பெரும்பேறு பெற்று நீங்காத செல்வத்தையும், பல பெருமைகளையும் அடைவான்.

மிகுந்த ஈடுபாட்டுடன் இக்கதையைக் கேட்பவர்க்கு மக்கட்செல்வம் உண்டாகும். தரித்திரன் பெரும் செல்வந்தனாவான்.யாரென்று அறியாதவன் பெரும் புகழை அடைவான். அறிவிலி ஞானியாவான்.
நான்கு விதமான புருஷார்த்தங்களையும் வழங்கக்கூடியது ப்ருதுவின் சரித்ரம்.

ப்ருதுவின் சரித்ரத்தைக் கேட்டுவிட்டு ஒரு முயற்சியில் ஈடுபடுவோர்க்கு வெற்றி நிச்சயம்.

அனைவரும் கீழ்ப்படிவர்.

பகவானின் சரணங்களில்
ஈடு இணையற்ற பக்தி பெருகச் செய்து சம்சார சாகரத்தைக் கடக்கச் செய்வது இச்சரித்ரம். என்றார்.

ப்ருதுவிற்குப் பின் அவரது மகன் விஜிதாச்வன் பெரும்புகழ் பெற்ற மன்னனாக விளங்கினான். தம்பிகளிடம் மிகுந்த அன்பு கொண்ட அவன், நாற்றிசைகளுக்கும் அவர்களை அதிபதிகளாக்கினான்.

ஹிரண்யாக்ஷனுக்கு கிழக்கையும், தூம்ரகேசரனுக்கு தெற்கையும், விருகனுக்கு மேற்கையும், நான்காவதான வடதிசை அரசை திரவிணனுக்கும் அளித்தான்.

மறைந்து வாழும் அந்தர்தான வித்தையை இந்திரனிடமிருந்து கற்று, அந்தர்தானன் என்று பெயர் பெற்றான்.
சிகண்டினி என்ற பெண்ணை மணந்து தன்னைப்போலவே மூன்று புதல்வர்களைப் பெற்றான்.

பின்னர் நபஸ்வதீ என்பவளை மணந்து ஹவிர்தானன் என்ற மகனைப் பெற்றான்.

அவன் மிகவும் மென்மையான மனம் படைத்தவன். தன் தந்தையின் வேள்விக் குதிரைகளை இந்திரன்தான் கவர்ந்தான் என்றறிந்தும் அவனைக் கொல்லாமல் விட்டான்.

கப்பம் வாங்குதல், தண்டனையளித்தல் ஆகிய அரசப் பணிகளை கொடுமைகளாக எண்ணினான். தீர்க ஸத்ரம் என்ற வெகுநாள்கள் செய்யும் வேள்விக்கு சங்கல்பம் செய்துகொண்டு அரசப் பொறுப்பை விடுத்தான்.

ஆன்மஞானம் கைவரப் பெற்று ஸத்ரயாகத்திலேயே ஹம்ஸ வடிவினனான பகவானை தீவிர ஸமாதி யோகத்தால் ஆராதனை செய்து பகவானின் லோகத்தை அடைந்தான்.

ஹவிர்தானனின் மனைவி பர்ஹிஷதன், கயன், சுக்லன், கிருஷ்ணன், ஸத்யன், ஜிதவிரதன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றாள்.

ஹவிர்தானனின் மகன் பர்ஹிஷதன் மிகவும் சிறப்பு வாய்ந்தவன். நிறைய வேள்விகள் செய்தான். யோக மார்கத்திலும் சிறந்து விளங்கினான். சிறந்த பிரஜாபதியாக இருந்தான்.

அவன் ஒரே இடத்தில் இல்லாமல் பூமியின் பல்வேறு இடங்களில் யாகம் செய்ததால், பூமி முழுவதும் கிழக்கு நுனியாகப் பரப்பப்பட்ட தர்பைகளால் மூடப் பட்டிருந்தது.

ப்ராசீனபர்ஹிஸ் என்றழைக்கப்பட்ட பர்ஹிஷதன் ப்ரும்மதேவரின் சொற்படி சமுத்ரராஜனின் மகளான சதத்ருதியை மணந்தான். பதினைந்தே வயது நிரம்பிய அவள் அதிரூபசுந்தரியாய் விளங்கினாள். திருமணத்தில் அனைத்து ஆபரணங்களும் அணிந்து திருமண மண்டபத்தில் வலம் வரும்போது அவளைக் கண்டு அக்னி தேவன் உள்பட அனைத்து தேவர்களும், தன்வசமிழந்து காமுற்றனர்.

ப்ராசீனபர்ஹிஸுக்கு சதத்ருதியிடம் பத்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் ப்ரசேதஸ் என்றழக்கப்பட்டனர். ஒரே மாதிரியான தர்மங்களும், அனுஷ்டானங்களும் உடையவர்கள்.

அவர்களை ப்ரஜைகளை ச்ருஷ்டிக்கும்படி ப்ராசீனபர்ஹிஸ் கூறவே, அவர்கள் அதை மறுத்து தவம் செய்யப் புறப்பட்டனர்.

அவர்களை பரமேஸ்வரன் தடுத்தாட்கொண்டு உபதேசம்‌செய்தார்.

உடனே, விதுரர் இடைமறித்துக்‌கேட்டார்.

ப்ரும்மரிஷியே.. சிவதரிசனம் மிகவும் அரிதானது.

சங்கரரோ‌ ஆத்மாராமர். இவ்வுலகைக் காக்கும் பொருட்டு சக்தியுடன் உலா வருகிறார். ப்ரசேதஸ்கள் எங்ஙனம் அவரது தரிசனம்‌ பெற்றனர்?
விவரமாகக் கூறுங்கள்‌ என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment