Sunday, November 18, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 148 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 92

33. பகவானே! மாயையால் மயங்கிய ஜீவன் ஒவ்வொரு நிமிடத்தையும்‌ குழப்பத்திலேயே கழிக்கிறான். உலக சுகங்களில் பேராசை கொள்கிறான். இறுதிக்காலம் பற்றி நினைப்பதேயில்லை. தாங்களோ எப்போதும் விழிப்புடன் இருப்பவர். பசியுடன் இருக்கும் பாம்பு திடீரெனப் பாய்ந்து எலியைப் பிடிப்பதுபோல் காலரூபமாய் நின்று திடீரென்று யமனின் வாயிலாக உயிரைப் பறிக்கிறீர்.

34. இவ்வுடல் என்றோ ஒருநாள் அழியக்கூடியதே. தங்களைத் துதிக்காமல் காலத்தை வீணடிப்பவனுடைய ஆயுள் சீக்கிரம் கரைகிறது. சற்றேனும் உண்மை புரிந்தவனும் தங்கள் திருவடிகளை விடுவானா?

35. காலரூபனான ருத்ரனுக்கு பயந்து அனைவரும் கலங்கி நிற்கின்றனர். இந்த உண்மையறிந்த எங்களுக்கு நீரே புகல்.

36. அரசகுமாரர்களே ! இந்த ருத்ர கீதத்தை நீங்கள் ஒருமனத்தோடு விடாமல் ஜபியுங்கள்.

37. அனைத்து ஜீவராசிகளிலும் விளங்கும் ஸ்ரீ ஹரியை உங்கள் ஹ்ருதயகுகையில் வைத்து பூஜை செய்யுங்கள்.

38. முனிவர்களுடைய விரதத்தை ஏற்று நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள்.

39. ப்ரும்மா தன் படைப்பைத் துவங்கியபோது, தன் புதல்வர்களுக்கும், ப்ருகு முதலிய ரிஷிகளுக்கும், எனக்கும் இந்த கீதத்தைக் கூறினார்.

40. ப்ரஜாபதிகளான நாங்கள் இந்த கீதத்தை ஓதி, அஞ்ஞானம் நீங்கப்பெற்று பலவித படைப்புகளைச் செய்தோம்.

41. இப்போதும், "இறைவனே தனக்கு அனைத்தும்" என்ற நம்பிக்கையுடன் ஜபம் செய்பவர்கள் விரைவில் அனைத்து நலன்களையும் பெறுவர்.

42 - 47. முக்தியின்பம் தரும் ஞானமே சிறந்தது. பகவானை ஆராதிப்பது கடினம்தான். இந்த துதியை சிரத்தையுடன் படிப்பவன் எளிதில் பகவானை மகிழ்விக்கிறான். நன்மையளிக்கும் அனைத்து சாதனங்களாலும் அடையப்படுபவர் பகவான் ஒருவரே. இதை ஜபிப்பவனுக்கு விரும்புவது கிடைக்கும். கைகூப்பி சிரத்தையுடன் கேட்பவனும் சொல்பவனும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

அரசகுமாரர்களே! இந்த ருத்ரகீதத்தை ஜபம் செய்து கடுந்தவம் செய்யுங்கள். தவத்தின் முடிவில் எல்லா நன்மையும்‌கிடைக்கப் பெறுவீர்கள்!

என்று பரமேஸ்வரன் கூறிவிட்டு அந்தர்தானம் ஆனார்.
ருத்ரகீதத்தை ப்ரசேதஸர்கள் பத்தாயிரம் வருடங்கள் நீரில் நின்ற வண்ணம் ஜபித்து தவம் இயற்றினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment