Saturday, November 3, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 139 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 83

ப்ருது தன் மக்களையும் சபையோரையும் பார்த்து இனிமையாகப் பேசத் துவங்கினார்.
அவையோர்களே! உங்கள் அனைவர்க்கும் மங்களம் உண்டாகட்டும். நான் கூறுவதைச் சற்றே கேளுங்கள். அறநெறிகளை அறிய விரும்புபவன் தன் எண்ணத்தைச் சான்றோரிடம்‌ கூறி ஒப்புதலைப் பெறவேண்டும்.

தீயவர்களைத் தண்டிக்கவும், மக்களைக்‌காக்கவும், அவர்கள் நலமோடு வாழ ஆவன செய்யவும், அவர்களைத் தங்கள் கடைமைகளைச் சரிவரச் செய்ய அறிவுறுத்தவுமே என்னை மன்னனாக நியமித்திருக்கிறீர்கள்.

ஒருவன் தனது கடைமைகளைச் சரிவரச் செய்வானாகில், அவனைக் கண்டு அனைத்துச் செயல்களுக்கும் சாட்சியாக விளங்கும் பகவான் மகிழ்ச்சி கொண்டு அவனுக்கு உயர்ந்த உலகங்களை அளிக்கிறார். எனக்கும் அப்படிப்பட்ட பாக்யம் வேண்டும்.

எந்த அரசன் மக்களை நல்வழிச் செலுத்தாமல், கப்பத்தை மட்டும் பெறுகிறானோ அவன் ப்ரஜைகளின் பாவப்பயன்களை அனுபவிக்கிறான்.
தன் புண்ணியத்தையும் இழக்கிறான்.

ஆகவே, மக்களே, நீங்கள் உங்கள் அரசனான எனக்கு மறு உலகில் நற்கதி கிடைப்பதற்காக எனக்கு உதவி செய்யுங்கள். பகைமை எண்ணத்தையும், குற்றம் காணும் குணத்தையும் விட்டு மனத்தில் இறைவனை நிறுத்தி, அறநெறிப்படி உங்கள் கடைமைகளைச் செய்துவாருங்கள்.

தூய்மையான மனமுடையவர்களே! பிதுர் தேவதைகளே! முனிவர்களே!
புனிதமானவர்களாகிய நீங்கள் என் வேண்டுகோளை ஏற்கவேண்டும். ஏனெனில் எச்செயலானாலும், மரணத்திற்குப் பின்னால், அதைச் செய்தவன், செய்யத் தூண்டியவன், உடந்தையாய் இருந்தவன் ஆகிய மூவர்க்கும் ஒரே பலன்தான்.
கர்மங்களுக்குப் பயன் அளிப்பவர் யக்ஞநாராயணன் ஒருவரே.

ஸ்வாயம்புவமனு, ப்ரியவிரதன், உத்தானபாதன், மஹாராஜா த்ருவன், என் தாத்தா அங்கன், ப்ரும்மதேவர் முதலிய பெரியோர்களும், ப்ரஹ்லாதன், பலி முதலிய அசுர ச்ரேஷ்டர்களும் நால்வகைப்‌ புருஷார்த்தங்களையும் அளிப்பவர், மற்றும் அனைத்து லோகங்களின் தலைவர் ஸ்ரீமன் நாராயணனே என்று தீர்மானம் செய்துள்ளார்கள்.

ம்ருத்யுவின் பெண்வயிற்றுப் பேரனான என் தந்தை வேனனைப் போன்ற சிலர்தான் பகவானை நம்ப மறுப்பவர்கள்.

பகவானின் திருவடித் தாமரைகளில் தீவிரமான பக்தி ஏற்படுமானால், அது அவரது திருவடியில் தோன்றிப் பெருகும் கங்கைபோல் அனைவரின் மன அழுக்கையும்‌ கணத்தில் நீக்கிவிடும்.

பகவானின் திருவடித்தாமரையின் நிழலில் இருப்பவன் ஞானம் பெறுகிறான். அவன் ஸம்சாரத் தளையில் சிக்கமாட்டான்.

பகவானின் திருவடிக்‌கமலங்கள் மனவிருப்பங்கள் அனைத்தையும்‌ முடித்துத் தரவல்லது.

பகட்டான பக்தியின்றி, வேதம் ஓதுதல், ஓதுவித்தல், த்யானம் செய்தல் துதிப்செய்தல், பூஜை செய்தல் ஆகியவற்றோடு அவரவர்க்கு நியமிக்கப்பட்ட கடைமைகளையும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை ஒருமுகப் படுத்திச் செய்யுங்கள்.
நம் தகுதிக்கேற்ப நிச்சயம்‌ நற்பலன் ஏற்படும் என்ற நம்பிக்கை முக்கியமானது.

பகவான் நித்ய முக்தன். ஞானமே வடிவானவர்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் அற்றவர்.

கர்மயோகமான வேள்விகள், அவற்றின் பயன்கள், மந்திரங்கள் நெல், தானியங்கள், நிறங்கள், அவற்றின் குணங்கள், பொருள்களின் திறம் அனைத்தும் பகவானே.

அவரே பயனின் உருவில் பலவாறாகக் காட்சியளிக்கிறார்.

என் மக்கள் தேவாதிதேவனான யக்ஞநாராயணனைப் பூஜிக்கிறார்கள். உண்மையில் நானே பாக்யவான்.
அரசர்கள் அந்தணர்களை ஆள்பலம், அதிகாரம் காரணமாக அடக்கியாள நினைக்கலாகாது.

அவர்கள் பொறுமையும், தவமும் ஞானமும், பகவானிடம் பக்தியும் பெற்று ஒளிர்பவர்கள்.

அந்தணர்களின் திருவடிகளில் பக்தி செய்வதாலேயே பகவானுக்கு ப்ரும்மண்ய தேவன் (அந்தணர்களை தெய்வமாக மதிப்பவன்) என்ற பெயர் உண்டு.

வேதம் என்பது அப்பழுக்கற்ற கண்ணாடி. அதில்‌இப்ரபஞ்சத்தின் தத்துவம்‌முழுவதையும் தெளிவாய்க் காணலாம்.

அதன் உண்மைப் பொருளை அறிய ஆவல்கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடனும், தவம், நல்லொழுக்கம், வீண்பேச்சு பேசாமை, மனவடக்கம் ஆகிய சாதனைகளைக்‌ கைக்கொண்டு மன ஒருமையுடன் வேதத்தை தினம் ஓதுகிறார்கள்‌ அந்தணர்கள். அவர்களது திருவடித் துகளை ஆயுள் முழுவதிலும்‌ என் சிரசில் தாங்குவேன்.

நற்குணசீலன், நல்லொழுக்கமே செல்வம் எனக்கொள்பவன், நன்றி மறவாதவன், பெரியோரை மதிப்பவன் ஆகியோரைச் செல்வம் தானாக வந்தடையும்.

ஆகவே, பசுக்கள், அந்தணர்கள், பகவான், அடியார் குழாம் அனைவரும் எனக்கு அருள்‌புரியட்டும்
என்றார்.

அங்கிருந்த சான்றோர் ப்ருதுவின் பேச்சைக் கேட்டு மனம்‌ மகிழ்ந்தனர்.

நல்ல ‌மகனைப் பெற்றவன்‌ நல்ல உலகங்ககளை அடைகிறான் என்கிறது வேதம். அவ்வகையில் ப்ராம்மண சாபத்தினால்‌ தண்டிக்கப்பட்டு இறந்த உன் தந்தை வேனன் உன்னால் நரகத்திலிருந்து விடுதலை பெற்றான்.

ப்ரஹலாதனது பக்தியால், நாசங்கள் புரிந்த அவன் தந்தை ஹிரண்யகசிபுவும் நற்கதி பெற்றான்.

நீர் பூமியின் நாயகனாக நீடுழி வாழவேண்டும். உமது புகழ் எங்கும் பரவட்டும். ஸ்ரீ ஹரியின் புகழை எமக்குக் கூறினீர்கள்.

அரசனாகப் பெற்ற நாங்களே பாக்யசாலிகள்.
மக்களின் அறியாமை இருளை நீக்கி நல்வழி காட்டினீர்கள்.

நற்குணச் சுரங்கமான தாங்கள், அந்தணர் செயலை ஏற்று நல்லுபதேசம்‌ செய்தீர்கள். ‌க்ஷத்ரியர் செயலை ஏற்று அந்தணரைக்‌ காக்கிறீர்கள், ப்ரபஞ்சத்தைப் பரிபாலிக்கிறீர்கள். முத்தொழிலையும் செய்யும்‌ மஹாபுருஷரான வணங்குகிறோம்‌.
என்று சபையோர் கூறினர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment