Tuesday, November 13, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 143 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 87

அரசன் ப்ருது தன் வாழ்க்கையை பகவத் அர்ப்பணமாகவே வாழ்ந்தார். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப்போல் அரசாட்சி நடத்தினார்.

பூபதி என்ற பெயர் பூமியின் கணவன் என்பதாக அரசர்களுக்கு வழங்கப்படுகிறது.

ப்ருது பூமியைத் தன்‌ மகளாக ஏற்றதால், அனைவராலும் ஏகபத்னிவிரதன் என்று கொண்டாடப்பட்டார்.

ராஜா என்னும் பெயருக்கேற்ப மக்களின் மனம் மகிழ்விக்கும் சந்திரனாக விளங்கினார்.
மக்கள் அரசனை தெய்வமாகப்‌போற்றினர். தன் கடைமைகள் அனைத்தையும் வழுவாது ஆற்றி வந்த அவருக்கு ஐந்து மகன்கள்‌ பிறந்தனர்.

விஜிதாச்வன், தூம்ரகேசன், ஹர்யக்ஷன், திரவிணன், விருகன் என்பது அவர்களின் பெயர்கள்.

மக்களின் தலைவர், தான் தோற்றுவித்த அன்னபானங்கள் அனைத்தையும் பன்மடங்காக்கியவர், அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திற்கும் வாழ வழி செய்தவர், சாதுக்களின் அறநெறியில் தான் ஒழுகியதோடு மக்களையும் நல்வழியில் நிறுத்தியவர். தன் கடைமைகள் அனைத்தும் முடிந்து விட்ட தாய் உணர்ந்தார்.

முக்தி நெறிக்கான முயற்சியை மேற்கொள்ள எண்ணி, தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைத்தார்.

பிரிவாற்றாமையால் கதறி அழும் மக்களையும் சுற்றத்தையும் விடுத்து மனைவியுடன் வனம் ஏகினார்.
வானப்ரஸ்த ஆசிரமத்திற்கான தர்மங்களை தீவிரமாகப் பின்பற்றினார்.

காய் கனி, கிழங்குகளை உண்டு தவம்‌செய்தவர், பின்னர் தானாக உதிர்ந்த சருகுகளை உண்டார்.

பின்னர் சில மாதங்களில் பதினைந்து நாள்களுக்கொரு முறை நீரை மட்டும் அருதியும், பின்னர் காற்றையே உணவாகக் கொண்டும் தவம்‌ இயற்றினார்.

கடும் கோடைக்காலத்தில் பஞ்சாக்னி நடுவிலும், மழைக்காலத்தில் நனைந்துகொண்டும், பனிக்காலத்தில், நீர்நிலையில் கழுத்தளவு நீரில்‌ நின்றும், மற்ற நேரங்களில் மண் தரையில் எடுத்துக் கொண்டும் முனிவர்களது வாழ்கை நெறியில் தவமியற்றினார்.

தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து, மௌனவிரதம் ஏற்று, ப்ராணாயாமத்தால் பொறிகளை அடக்கினார். மனத்தூய்மை பெற்றார்.
இயல்பாக அவர் மனத்தில் ஸநத்குமாரர் உபதேசம் செய்தபடி ஸ்ரீமன் நாராயணனின் பாததாமரைகளை எழுந்தருளச்செய்து பக்தி செய்தார்.

பகவானுக்கு பிரியமான தர்மங்களை அனுஷ்டித்ததால் உறுதியான பக்தி ஏற்பட்டது. பொங்கியெழுந்த பக்தி வெள்ளத்தால் தளைகள் அனைத்தும் அறுபட்டன.

இவ்வுடலே நான் என்ற எண்ணம் முழுதுமாய் நீங்கி ஞானம் பெற்றார்.
பின்னர் ஆசனவாயில் குதிகாலை அழுத்தி, மூச்சுக்காற்றை மூலாதாரத்திலிருந்து மேலெழுப்பி ஒவ்வொரு இடமாக தொப்புள், மார்பு, தொண்டைக்குழி, புருவமத்தி ஆகியவற்றில் நகர்த்தி, உச்சந்தலையில் உள்ள ப்ரும்மரந்திரத்தில் நிறுத்தினார்.
ஆசைகள் அற்ற நிலையில், பஞ்சபூதங்களால் ஆன உடலினின்று அவற்றைப் பிரித்து அந்தந்த மஹாபூதங்களில் கலந்தார்.

ப்ராணவாயுவைக் காற்றிலும், பௌதிக உடலை பூமியில், உடலிலுள்ள நீரை நீரிலும், உடலின் வெம்மையை அக்னியிலும் கலக்கச் செய்து அக்கணமே உடலின் உருவத்தைக் கலைத்தார்.

அவரது மனைவியான அர்ச்சிஸ், மஹா பதிவ்ரதை. மஹாலக்ஷ்மி ஸ்ரீ மன் நாராயணனைத் தொடர்வதுபோல் தொடர்ந்து பணிவிடை செய்தவள்.
கணவர் பின்பற்றிய அத்தனை நெறிகளையும் பின்பற்றியவள்.
உடல் மெலிந்து களைத்தவள்.

கணவனுக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்குகளை முறைப்படி செய்து தர்ப்பணமும் செய்தாள்.

பின்னர் சிதை மூட்டி கணவனின் திருவடிகளை தியானித்து அனைத்து தேவர்களையும் வணங்கிச் சிதையில் புகுந்தாள்.

இதைக் கண்டு ஆயிரமாயிரம் தேவர்கள் வந்து பூமாரி பொழிந்தனர். தேவர்களின் மனைவியர் அர்ச்சிஸைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவள் மேலுலகம் செல்வதை அவர்கள் அனைவரும் கண்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment