Thursday, November 15, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 145 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 89


மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்.
ப்ரசேதஸ்கள் தந்தையின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்களாயினும், சான்றோரின் இயல்பின்படி தவத்திலேயே மனம் சென்றது.

அவர்கள் தவம் செய்ய விரும்பி மேற்றிசை நோக்கிச் சென்றனர். அங்கு கடல் போன்ற ஒரு பெரிய ஏரியைக் கண்டனர். அங்குள்ள நீர் சான்றோரின் இதயம்போல் தூய்மையாக இருந்தது.
நீர் வாழ்வன துள்ளி விளையாடின.

நீலத்தாமரை, செந்தாமரை, இரவில் மலரும்‌ஆம்பல், மாலையில் மலரும்‌ கல்ஹாரம் மற்றும் இந்தீவரம் எனப்படும் கருநெய்தற்பூ முதலிய பல்வேறு மலர்வகைகள் பூத்துக் குலுங்கின.

கரைகளில், அன்னப்பறவை, ஸாரஸம், சக்ரவாகம், காரண்டவம் முதலிய நீர்ப்பறவைகள் கூவி விளையாடின.

நாற்கரைகளிலும் பலவிதமான மரங்களும், செடி கொடிகளும் தழைத்திருந்தன. அவற்றின் மேல் மதம் பிடித்த வண்டுகள்‌பாடின.

தாமரை மலர்களின் மகரந்தப் பொடிகள் காற்றினால் பறந்தன. அது ஏதோ திருவிழா நடப்பதுபோல் தோற்றமளித்தது.

அப்போது பலவிதமான வாத்யங்களின் இசை கேட்டது.

அதைக்கேட்டு ஆச்சர்யமுற்ற அரச குமாரர்கள் இசை வந்த திசை நோக்கித் திரும்பினர்.

அப்போது தேவாதிதேவரான பரமேஸ்வரன் பரிவாரங்களுடன் அந்த நீர்நிலையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தார்.

அவரது திருமேனி உருக்கி வார்த்த தங்கம் போல் பளபளத்தது.

கழுத்தோ நீலம். செவ்வரியோடிய திருக்கண்கள். கந்தர்வர்கள் அவர் புகழைப் பாடிக்கொண்டிருந்தனர்.

அனைவர்க்கும் அருள் புரிவதையே தன் மகிழ்ச்சியாய்க் கொண்டவர். அவரைக் கண்டதும் மிகுந்த குதூஹலத்துடன் அவரது திருவடிகளில் வீழ்ந்தனர் ப்ரசேதஸர்கள்.

அறநெறி தவறாத அந்த அரச குமாரர்களைக் கண்டு பரமேஸ்வரன் மிகவும் மகிழ்ந்து கூறலானார்.

நீங்கள் பர்ஹிஷதனின் புதல்வர்கள்தானே. உங்களுக்கு அருள் செய்யவே இப்போது தரிசனம் தந்தேன்.

எவன் ப்ரக்ருதி மற்றும் ஜீவனைக் காட்டிலும் மேலான பகவான் நாராயணனை அடைக்கலமாகப் பற்றியவனோ, அவனே எனக்கு மிகவும் ப்ரியமானவன்.

அறநெறி தவறாது கடைமைகளை ஆற்றுபவன் நூறு பிறவிகளில் ப்ரும்மபதவியை அடைகிறான்.

அதற்கு மேல் பயனில் பற்றின்றி கர்மங்களைச் செய்பவன் என்னை அடைகிறான். நானும்‌ மற்ற தேவர்களும், எங்கள்‌ லோகத்தை அடைந்தவர்களும் எங்கள் பதவிக்காலம்‌ முடியும் தருவாயில் பகவான் நாராயணனை அடைகிறோம்.
ஆனால், பகவானது அடியாரோ அப்பிறவியின் முடிவிலேயே நேரடியாக பரமபதத்தை அடைகின்றார்.

நீங்கள்‌ பகவானது பக்தர்களாகையால் எனக்கும்‌ மிகவும் பிரியமானவர்கள்.
அதுபோல் பகவத் பக்தர்களுக்கும் என்னைவிடப்‌ பிரியமானவர் இல்லை.
இப்போது பவித்ரமானதும், முக்தியளிக்கக்கூடியதுமான ஒரு ஸ்லோகத்தை உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். அதை நீங்கள் ஒன்றுபட்ட மனத்துடன்‌ தனிமையில் ஜபம் செய்துவாருங்கள்.

என்று சொல்லி ப்ரும்ம தத்வத்தை விளக்கும் நாற்பத்திஏழு ஸ்லோகங்களை ப்ரசேதஸர்களுக்கு பரமேஸ்வரன் உபதேசம் செய்து அருளினார்.

இத்தொகுப்பு ருத்ரகீதம் எனப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment