Sunday, November 4, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 140 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 84

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்.

மிகுந்த பராக்ரமசாலியான மன்னன் ப்ருதுவை மக்கள் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கே ஸனகர், ஸநந்தனர், ஸனத்குமாரர், ஸனத்சுஜாதர் ஆகிய நால்வரும் வந்தனர்.
அரசரும் அவரது பரிவாரமும் ஒளிவீசும் அவர்களைக் கண்டதுமே ஸநகாதியர் என்று புரிந்து கொண்டனர்.
அனைவரும் விரைந்து எழுந்தனர்.
அவ்வாறு அவர்கள் எழுந்தது புலன் இன்பங்களிலிருந்து ஜீவனைத் தடுத்து நிறுத்தவே ஆகும்.

பெரியவர்களைக் காணும்போது ஜீவன் அவர்களோடு மேலெழும்புகிறது. வணங்கியதும் ப்ராணன் தங்கிவிடுகிறது என்கிறது மனு ஸ்ம்ருதி.

அவர்களைக் கண்டு பூரித்துப்போன ப்ருது, ஸாதுக்களை உபசரிக்கும் முறை அறிந்தவர் ஆகையால், வணங்கி, ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி பூஜை செய்தார்.

அவர்களது பாத தீர்த்தத்தை சிரத்தில் தரித்தார்.

ஸனகாதி முனிவர்கள் பரமேஸ்வரனுக்கும் முன் தோன்றியவர்கள்.

தங்கச் சிம்மாசனத்தில் தக்ஷிணாக்னி போல் ப்ரகாசிக்கும் அவர்களைப் பார்த்து ப்ருது கூறினார்.

மங்களமான திருவுருவுடையவர்களே! யோகிகளுக்கும் கிடைத்தற்கரியது தங்கள் தரிசனம்‌. நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

கண்களுக்குப் புலனாகும் இப்ரபஞ்சத்தின் மஹத் முதலிய தத்வங்களை எவரும் காண இயலாது. அதுபோல், நீங்கள் எல்லா இடங்களிலும் சுற்றி வந்தாலும், தங்கள் தரிசனம் அரிதே.

எவருடைய வீட்டில், சான்றோர்கள், தண்ணீர், ஆசனம், உபசரிப்பு, நல்மனம் கொண்ட பணியாள்கள் ஆகியவற்றில் ஏதாவதொன்றையாவது ஏற்கிறார்களோ அவனே சிறந்த செல்வந்தன்.

எவனது திருமாளிகையில் ஸாதுக்களின் திருவடிகள் பதியுமோ அவனே செல்வந்தன். அவ்வாறு அந்த இல்லம் தூமையாக்கப் படாவிடில், அது பாம்பு வாழும் புற்றுக்கு ஒப்பாகும்.
தாங்கள் தோற்றத்தில் சிறுவயதினர். எனினும், மனத்தை ஒருநிலைப்படுத்தி ப்ரும்மசர்ய விரதம் அனுஷ்டிக்கிறீர்கள்.

நாங்களோ துன்பங்களின் விளைநிலமான இப்புவியில் புலன் இன்பங்களை பெரிதாகக் கருதி உழல்கிறோம். எங்களுக்கும் நற்கதி கிடைக்க உபாயம்‌ உண்டா?

தாங்கள் எப்போதும் ஆத்மானந்தத்தில் லயித்திருப்பவர்கள். இது நல்லது, கெட்டது என்ற வேறுபாடு தங்களிடம் இல்லை.

இவ்வுலகியல் காட்டுத்தீயில் வெந்து கொண்டிருக்கும் எங்களுக்குத் தாங்களே உற்ற நண்பராவீர்.

அந்த நம்பிக்கையில் தங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வுலக மக்களுக்கு நன்மை பெறுதற்கான சிறந்த எளிய வழிதான் என்ன?

இறைவன் நாராயணனே அடியார்க்கு அருள் புரிய எண்ணி தங்களைப் போன்ற சித்தபுருஷர்கள் உருவில் ஆங்காங்கு சுற்றித் திரிகிறார் என்பதே உண்மை. தாங்கள் எங்களுக்கு கருணைகூர்ந்து நல்வழியைக் காட்டுங்கள் என்றார்.

ப்ருது பேசியது மிக அழகாகவும், சுருக்கமாகவும், ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டதாகவும் இருந்தது கண்டு ஸநத்குமாரர் பெருமகிழ்ச்சி கொண்டு பேசத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment