Sunday, February 10, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 209

ஏழாவது ஸ்கந்தம் 

சித்ரகேதுவின் கதையைக் கேட்டதும், நம் அனைவருக்கும் எழும் சந்தேகத்தை நம் சார்பில் பரீக்ஷித் கேட்டான்.

மஹரிஷியே! பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே விதமாக அன்பு கொண்டவர்தானே! சமபுத்தியுள்ளவர். அப்படியிருக்க வேண்டியவன் பக்கம் சேர்ந்துகொண்டு வேண்டாதவர்க்குத் தீமை செய்யும் மனிதர்கள்போல், பல தீமைகள் செய்திருந்த போதிலும் வேண்டினான் என்பதற்காக  இந்திரனுக்கு நன்மை செய்ய அசுரர்களை அழிப்பானேன்?

வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் ஏன் இப்படிச் செய்தார்? தவறு செய்தாலும் தேவர்களுக்குப் பரிந்து வருவார். நல்லதே செய்தாலும் அசுரர்களை அழிப்பாரா?

அனைவரையும் சமமாகப் பார்க்கும் இறைவனின் இச்செயல் விளங்கிக்கொள்ளக் கடினமாக இருக்கிறதே. தயை கூர்ந்து என் சந்தேகத்தைப் போக்குங்கள். என்றான்.

ஸ்ரீ சுகர் கூறத் துவங்கினார்.
மன்னனே! நீ எழுப்பிய வினா மிகவும் சரியானது. இதற்கு விடையாக அசுர குலக்கொழுந்தும்,  பரம பாகவதோத்தமனுமான ப்ரஹலாதனுக்கு பகவான் எப்படி அருள் செய்தார் என்று கூறுகிறேன்.

நாரதர் முதலிய பெரியோர்களும் இந்த சரித்ரத்தை பக்தியுடன் போற்றுகின்றனர். என் தந்தையான வியாசரை வணங்கிக்கொண்டு உனக்கு இக்கதையைச் சொல்கிறேன். கேள்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். ப்ரக்ருதி, மாயை இவற்றால் பாதிக்கப்படாதவர்.
ஸத்வம், ராஜஸம், தாமஸம் போன்ற குணங்கள் மாயையால் ப்ரக்ருதியில் காணப்படுகின்றன. உண்மையில் அவை பகவானுடையவை அல்ல. இவை மூன்றும் ஒரே நேரத்தில் குறையவோ, நிறையவோ இயலாது. ஏற்றத்தாழ்வுகளோடுதான் இருக்கும்.

பகவான் அனைத்து ஜீவராசிகளிலும் வெளித்தோன்றாது மறைந்துள்ளார். அறிஞன் அவரைத் தவிர மற்ற பொருள்களை ஒதுக்கித் தள்ளி, முடிவில், தன் இதயத்தில் அந்த பகவானையே அந்தர்யாமியாக ஆன்மாவாகக் காண்கிறான்.

மன்னா! பகவான் ஸத்யசங்கல்பன். நினைத்ததை நினைத்தபடி முடிப்பவன். காலத்துக்கு உட்பட்டவர் அல்ல.

உன் பாட்டனார் தர்மபுத்ரர் ராஜசூய யாகம் நடத்தினார். அப்போது இது தொடர்பான கேள்வியை எழுப்ப, அதற்கு விடையாக நாரத மஹரிஷி மனமுவந்து கூறிய கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்.


அம்மாபெரும் வேள்வியில், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் ஒரு ஜ்யோதியாக  கண்ணனின் உடலில் இரண்டறக் கலந்தான். அதைக் கண்டு வியப்படைந்த  யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டார்.

ஆஹா! இதென்ன ஆச்சர்யம்‌ நாரதரே! பரம்பொருளான க்ருஷ்ணனிடம் இரண்டறக் கலப்பதென்பது பகவத் பக்தர்களுக்கே மிகவும் அரிய விஷயம். 

அப்படியிருக்க, எப்போதும் பகவானைத் திட்டிக்கொண்டிருந்த  சிசுபாலனுக்கு இந்த நற்பேறு எப்படிக் கிடைத்தது? முன்பொரு முறை வேனன் பகவானை நிந்தித்ததால் ரிஷிகள் அவனை நரகத்தில்‌ தள்ளினர். தீயபுத்தி கொண்ட சிசுபாலன் மழலைப் பருவம்‌ முதல் சற்று‌முன் வரை பகவானை நிந்தித்தானே. அவனுக்கு மட்டும் முக்தியா? அது எவ்வாறு?

இதன் பின்னால் இருக்கும் உண்மையைக் கூறுங்கள் என்றார்.

நாரதர் மிகவும் மகிழ்ந்து கூறலானார்.

மன்னா!  நிந்தித்தல், புகழ்தல், மரியாதை செய்தல், அவமதித்தல் இவையெல்லாம் உடலின் தொடர்புடையவை.  சரீரமே ஒரு கற்பனை. அதன் காரணம் மாயை. ஆன்மாவைப் பற்றிய உண்மையறிவு இல்லாததே காரணம்.

இவ்வுடலை ஆன்மாவென்று எண்ணும்போது, நான், எனது, என்ற எண்ணம் தோன்றுகிறது. வேற்றுமை எண்ணங்களே அனைத்துக்குமான அடித்தளம். அதனால்தான் உடலைத் திட்டும்போது மனம் துன்பமடைகிறது.

தீவிரமான பக்தி, தீவிரமான பகை, பயம், அன்பு, காதல் இவற்றில் ஏதோ ஒரு வழியில் மனத்தை முழுமையாக ஒப்படைத்தல் வேண்டும். பகவானுக்கு இவற்றுள் எந்த வேற்பாடும் இல்லை. எந்த வழியில் இறைவனை நாடுகிறோமோ அதேவழியில் அவர் நம்மை ஆட்கொள்கிறார்.

ஒரு ரகசியம் என்னவெனில் தீவிரமான பகையினால் பகவானுடன் ஒட்டிக் கொள்வதைப் போல், பக்தியோகத்தினால் கூடச் செய்ய முடிவதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment