Friday, February 1, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 204 சித்ரகேது - 4

புலனடக்கத்துடன் மௌன விரதமேற்று தன்னை வணங்கும் சித்ரகேதுவைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார் நாரதர். பின்னர் அவனுக்கு எட்டு ஸ்லோகங்களில் பகவானின் குணங்களையும், பெருமைகளையும் சொல்லும் ஸ்துதியான ஆத்ம வித்யையை உபதேசம் செய்தார்.

சித்ரகேது அந்த உயர்ந்த மந்திரத்தை மனனம் செய்து ஏழு நாள்கள் தியானம் செய்தான். அதன் பலனாக சித்ரகேது வித்யாதரர்களின் தலைமைப் பதவியைப் பெற்றான்.

அந்த மந்திரத்தின் மஹிமையால் மனத்தூய்மை பெற்று ஸங்கர்ஷண மூர்த்தியின் திருவடித் தாமரைகளின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றான்.
சித்தர்கள் சூழ விளங்கும் ஸங்கர்ஷண மூர்த்தி. தாமரைத்தண்டு போன்ற வெண்மை நிறம். அழகிய திருமேனி. நீலப்பட்டு. தலையில் நவரத்ன கிரீடம், புஜங்களில் தோள்வளைகள், செம்மை படர்ந்த அழகிய கண்கள், தெளிவான திருமுக மண்டலம்.

அவரைக் கண்ட‌ மாத்திரத்தில் சித்ரகேதுவின் அனைத்து பாவங்களும் அழிந்தன. அவன் மனம் தெளிந்து பக்தி பெருகிற்று. கண்களில்‌ நீர் சொரிய, மயிர்க்கூச்செறிந்து ஆதிசேஷனை வணங்கினான்.

அன்பின் முதிர்ச்சியால் சொல்லற்ற நிலையில் வெகுநேரம் நாத்தழுதழுக்க வாளாவிருந்தான்.

அதன் பின் எவராலும் வெல்லமுடியாத அவரைப் பலவாறு துதிக்கலானான்.
அதைக்கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன் சித்ரகேதுவைக் கொண்டாடி, பகவத் ஸ்வரூபத்தை உபதேசம்‌செய்தார். பின்னர் உனக்கு ஞானம் சித்திக்கும்‌ என்று அருளிச்செய்தார்.

வித்யாதரர்களின் அரசனாகிவிட்ட சித்ரகேது, ஸங்கர்ஷணர் மறைந்ததும், அவர் சென்ற திசை நோக்கித் தொழுத வண்ணம்‌ வெகு நேரம்‌ நின்றான். பின்னர் விமானத்திலேறி வான்வெளியில் தன் விருப்பம் போல் சுற்றத் துவங்கினான்.

பல யோகசித்திகள் கைவரப்பெற்ற சித்ரகேதுவை வித்யாதரர்களும், முனிவர்களும் புகழ்ந்தனர். அவன் மேரு மலையின் தாழ்வரைகளில் சுற்றத் துவங்கினான்.

ஒரு சமயம் பறக்கும்போது கீழே சித்த சாரணர்களும், முனிவர்களும்‌ சூழ்ந்திருக்க பரமேஸ்வரன் பார்வதியைத் தன் மடிமேல் அமர்த்திக்கொண்டிருப்பதைக் கண்டான்.


தன் விமானத்திலிருந்தபடியே சிரித்த வண்ணம் பார்வதியின் காதுகளில் விழும்படி,
உலகிற்கெல்லாம் ஆசார்யனான இவர் மஹரிஷிகள் கூடிய சபையில் வெட்கமின்றி மனைவியை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறாரே. பெருந்தவசி, ப்ரும்மவிசாரம் செய்பவர். இருந்தும் வெட்கமில்லையே.

பாமரன் கூட தனிமையில்தான் மனைவியைக் கொஞ்சுவான். இவர் கடினமான விரதங்கள் மேற்கொண்டவராய் இருந்தபோதிலும் இப்படிச் செய்கிறாரே. என்றான்.

பகவானின் பெருமையை சித்ரகேது அறியாதவனா? இருப்பினும் தான் புலன்களை வென்றவன் என்ற செருக்கு அவன் கண்களை மறைத்துவிட்டது.

அதைக் கேட்ட பார்வதி தேவி கடுஞ்சினம் கொண்டாள்.
இங்கிருக்கும் பெரியோர் தர்மநெறி அறியாரா? தலைவர்க்கெல்லாம் தலைவனான பரமேஸ்வரனுக்கே பாடம் சொல்வானா?

இவனது செருக்கு மிகுந்தது. இவனை தண்டிக்கத்தான் வேண்டும். ஆகவே ! தீயபுத்தி கொண்ட சித்ரகேதுவே! நீ அசுரப் பிறவியை அடைவாயாக! என்று சாபமிட்டாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment