Sunday, April 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 441

கம்பீரமாக நடந்துகொண்டிருந்தனர்  கோபாலனும் குழுவினரும்.

கடைவீதியிலிருந்து  ராஜவீதிக்குத் திரும்பியதும் பிரமித்துப்போனார்கள். மேகத்தை உரசும் மிக அழகான மாளிகைகள் கண்ணைப் பறித்தன. ஒவ்வொரு மாளிகையும் தனிச் சிறப்பு கொண்டதாயிருந்தது.

அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து வலியே வந்துவிட்டது சிறுவர்களுக்கு. 

அப்போது எதிரில் ஒரு கூனி வந்துகொண்டிருந்தாள். இளமையும் அழகிய முகமும் கொண்ட அவளது உடல் மூன்று கோணல்களாக வளைந்திருந்தது.

அவள் நடக்கும்போது கோணி கோணி கால்கள் திசைக்கொரு புறம் செல்ல கழுத்து வேறு பக்கம் திரும்பியது. கைகளில் சந்தனக் கிண்ணங்கள் கொண்ட தட்டை ஏந்திக்கொண்டிருந்தாள். அவற்றின் நறுமணம் சுண்டி இழுத்தது. 

அவளது நடையைக் கண்டதும் சிறுவர்கள் சிரித்தனர். கண்ணன் கண்ணாலேயே அவர்களை அடக்கினான். பின்னர் எதிரே சென்று அவளை அடுத்த அடி வைக்கவிடாமல் நின்றான்.

வழி மறைக்கப்பட்டதும் நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண். அவ்வளவுதான். தேடி வந்த சுந்தரக் கண்ணனின் அழகில் மயங்கினாள். அவள்‌ முகத்தில் வெட்கம் படர்ந்தது. குனிந்து கண்ணனின் தாமரைப் பாதங்களை நோக்கினாள்.

கண்ணன் அவளைப் பார்த்து,

ஓ! அழகிய பெண்ணே! நீ யார்? 
என்றான்.

அழகிய பெண்ணா? தன்னைக்‌ கேலி செய்கிறானா என்று நிமிர்ந்து பார்த்தவள் கண்ணனின் கருணை சிந்தும் மலர்விழிகளைக் கண்டு பகடி இல்லை என்று புரிந்துகொண்டாள்.

என் பெயர் த்ரிவக்ரா என்பது. நான் நறுமணப் பூச்சும், சந்தனக் குழம்பும் தயாரித்து கம்சனுக்கு அளிக்கும் பணிப்பெண். என்றாள்.

சுகந்தம் நிறைந்த இந்த சந்தனத்தை எனக்குத் தருவாயா?

உங்களைத் தவிர இது வேறு யாருக்குப் பொருந்தும்? தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கிண்ணத்தை நீட்டினாள்.

அதை எடுத்துக்கொள்ளாமல் கண்ணன் அவளைக் குறும்புடன் பார்க்க, அவளே எடுத்து, கண்ணனின் மார்பிலும் கரங்களிலும் பூசிவிட்டாள். பலராமனுக்கும், மற்ற சிறுவர்களுக்கும் சந்தனம் கொடுத்தாள்.

அந்த சந்தனத்தில் பற்பல  வண்ணங்களைக் கலந்திருந்தாள். எனவே சந்தப்பூச்சு கண்ணன் மற்றும் பலராமனின் திருமேனிகளில் மிக அழகாக விளங்கியது.

தன்னைக் கண்டதற்கான பலனை அவளுக்கு உடனே அளிக்க விரும்பினான் கண்ணன்.

அவளெதிரே சென்று இன்னும்‌ நெருங்கினான்.

அவள் என்ன நிகழ்கிறதென்று யோசிக்கும் முன்பாக, தன் ஒரு திருக்கரத்தால் அவளது கையைப் பிடித்துத் தூக்கினான். கால் விரலால் அவளது கால்களை அழுத்திக் கொண்டான். மற்றொரு கரத்தின் இரு விரல்களால் அவளது முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்த, அவளது உடலில் இருந்த கோணல்கள்‌ அனைத்தும் கணத்தில் நீங்கின.

கண்ணன் கரம் பட்டதும் தேவமங்கையைப் போல் பேரழகு படைத்த உடற்கட்டுடன் திகழ்ந்தாள் அவள்.

நற்குணங்களும், இரக்க சுபாவமும் கொண்ட த்ரிவக்ரா கண்ணன் மீது காதல் கொண்டாள்.

ஸ்வாமீ! ஒரு கணத்தில் என் உடலைக் குறையற்றதாக்கினீர்கள். மனக்குறை தீர வீட்டிற்கு வாருங்கள். என்றழைத்தாள்.

அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது‌ ஒரு பேரழகி தன்னை அழைப்பது கண்டு கண்ணனுக்கு வெட்கமாகிவிட்டது. திரும்பி நண்பர்களைப் பார்க்க அனைவர் முகத்திலும் தெரிந்த குறும்பைப் பார்த்து, அவளிடம் 

நான் கண்டிப்பாக வருகிறேன். ஆனால், இப்போது நிறைய வேலைகள் இருக்கின்றன. மற்றொரு சமயம் நிச்சயமாக இவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவேன். என்றான்

சூழ்நிலையை உணர்ந்த அவள், அவசியம் வரவேண்டும் என்று கண்ணனின் கையை அழுத்திச் சொல்லிவிட்டுப் பிரிய  மனமின்றி அவர்களை அனுப்பினாள்.

வழியெங்கும் வியாபாரிகள் பலர் கண்ணனுக்கு மரியாதைகள் செலுத்தினர்.

பிறகு தனுர்யாகம் எங்கே நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டு வேள்விச்சாலையை நோக்கி  கண்ணனும் பலராமனும் நண்பர்களுடன்  நடக்கத் துவங்கினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment