Thursday, April 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 432

சூரியன் உதித்ததும் தன் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு க்ருஷ்ண சந்திரனைக் காண தேரிலேறிக் கிளம்பினார் அக்ரூரர். 

இவரது மனோ வேகத்திற்கு தேர்க் குதிரைகளால் ஈடுகொடுக்கமுடியவில்லை. 
நான் என்ன புண்ணியம் செய்துவிட்டேன்? ஏதாவது தவம் செய்திருப்பேனா? யாக, யக்ஞங்களோ, தான தர்மங்களோ செய்திருப்பேனோ?

பக்தி என்பது என்னவென்றே நான் அறியேன்.
ஶக்தியும் இல்லை தவம் புரிவதற்கு.
பந்தங்களையும் நான் விட்டவனும் இல்லை.
மந்த மதியனும் நானே ஆவேன்

வேதமும் நான் அறிந்தோன் இல்லை. உன்
பாதமும் நான் பணிந்தோன் இல்லை. ஒரு
ஸாதனையும் நான் புரிந்தோன் இல்லை. 
ஸாது போதனையும் கேட்டோன் இல்லை

உன் தலங்களுக்கு வந்தோன் இல்லை.
உள்ள மலங்களும் போனவனில்லை.
உயர்ந்த ஶீலமும் கொண்டோன் இல்லை.
உத்தமனே மாலவனே முரளீதரனே.

இத்தனை க்ருபை என் மேல் தகுமோ
ஐயா
நப்பின்னை நாதனே யமுனைத் துறைவனே

ஆனால், இவையெல்லாம் நான் செய்யாவிட்டாலும் எனக்குக் கண்ணனின் தரிசனம் கிடைக்கப்போகிறதென்றால் அது அவனது காரணமற்ற கருணையல்லவா?

எப்படியோ என் பிறவிப் பயனுற்றேன்.

கம்சனைப் போல் எனக்கு நன்மை செய்பவர் யாருமில்லை. அவனல்லவோ அனுப்பினான். இல்லையெனில் நான் எப்படி கண்ணனைக் காண வரமுடியும்? இறைவனைக் காண வழிவகுப்பவர் குரு அல்லவா? கம்சன் எனக்கு குரு ஸ்தானத்தில் அமைகிறான்.

ப்ரும்மாவும், திருமகளும், தேவர்களும் காண ஏங்கும் திருவடி. முனிவர்களும், எண்ணற்ற  பக்தர்களும்  பூஜை செய்யும் திருவடி. 

கண்ணனின் திருவடி மஹிமையை யாரே அறிவார்.

பவித்ர பாகீரதி தோன்றிய திருவடி. வலிய வந்து பலியை ஆட்கொண்ட திருவடி. முனியின் மனைவியை முன்னவண்ணம் செய்த திருவடி. சடுதியில் ஸகடனை ஸாய்திட்ட திருவடி. நாகத்தின் மேலாடி அதன் கொட்டம் அடக்கிய திருவடி.

கற்பனைக்கெட்டாத அழகே உருவெடுத்த கண்ணனை இன்று காணப்போகிறேன். கண் படைத்ததன் பயனை அடையப்போகிறேன். 

உலகைச் சாட்சியாகக் கொண்டு பிறவி எடுத்திருந்தாலும் கண்ணன் அறியாமையற்றவர். யோகமாயையைக் கொண்டு ஐந்து பிராணன், பத்து புலன்கள், புத்தி (ஈரெட்டாவரணம்) ஆகியவற்றுடன் இந்தப் ப்ரபஞ்சத்தையும் ஜீவன்களையும்‌படைத்து அவற்றுள் தானே நிரம்பியிருப்பவர். தன்னோடு தானே விளையாடுவதுபோல் இடைச்சேரியில் விளையாடுகிறார். 

பாவங்களைப் போக்குவதும், மங்களைத் தருவதுமான பகவானின் குணங்கள், லீலைகள், அவதாரங்கள் ஆகியவற்றைப் பேசும் சொற்களே இவ்வுலகை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தூய்மையாக்குகின்றன. மற்ற வாக்குகள் அனைத்தும் வீண்.

மகான்கள் விரும்பும் பெரும்பதம், உலகின் குரு, பேரழகன், லக்ஷ்மிதேவி விரும்பும் சுந்தரன், அவனை இன்றே காண்பேன். இன்றைய காலை நற்காலையாயிற்று.

கண்ணனையும் பலராமனையும் கண்டதும் வணங்குவேன். நந்தன், யசோதை, ரோஹிணி ஆகியவர்களையும் பணிவேன். கோபர்களை வலம் வந்து தொழுவேன்.

என்றெல்லாம் யோசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்த அக்ரூரர் ப்ருந்தாவனத்தின் எல்லையை அடைந்தார். சட்டென்று தேரை நிறுத்தச் செய்தார்.

எல்லா தேவர்களும் எந்தத் திருவடியின் தூசி தங்கள் தலையில் படுமா என்று ஏங்குகிறார்களோ அந்தத் திருவடியின் அச்சு ப்ருந்தாவனம் முழுதும் பதிந்திருப்பதைக் கண்டார். ஒவ்வொரு அச்சிலும், தாமரை, யவம், துரட்டி, கொடி ஆகிய முத்திரைகள் காணப்பட்டன.

ஆஹா! இவை பகவானின் திருவடி அச்சுக்கள்! என்று கூவினார். காலணியை ரதத்தில் விட்டு, தரையில் குதித்தார். கீழே விழுந்து அந்தப் புழுதியில் கடகடவென்று உருண்டார். ப்ருந்தாவனத்தின்  மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார். தலையில் வாரி வாரிப் போட்டுக் கொண்டார். வாயிலிட்டு விழுங்கி அம்ருதம் அம்ருதம் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தற்பெருமை, பயம், சோகம் ஆகிய உணர்வுகளின்றி பகவானின் கதையைக் கேட்பதும், அதையே எப்போதும் சிந்திப்பதுமாக இருப்பவர்க்கு அக்ரூரரைப்போல்  பக்தி சித்திக்கிறது. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment