Friday, April 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 433

ஒரு வழியாக சிறிது நேரம் கழித்து உணர்வு பெற்ற அக்ரூரர், மெதுவாக நந்தபவனத்தை அடைந்தார். செல்லும் வழியில் கண்ட மாடுகள் கன்றுக்குட்டிகள், வீடுகள், மரங்கள், கோபர்கள், கோபியர்கள் அனைத்தையும் மானசீகமாக வணங்கிக்கொண்டே சென்றார்.

நந்தபவனத்திற்கு முன்னால் இருந்த மாட்டுக்கொட்டிலில் நீலஜோதி நின்றுகொண்டிருந்தது. அருகில் தங்க ஜோதியாக பலராமன்.  பளபளவென்று தங்கவரிகளைப்‌போல் அசையும் மஞ்சள் பட்டாடையைக் கண்ணனும், நீலப் பட்டாடையை பலராமனும் அணிந்திருந்தனர். இருவருக்கும்  நீண்ட கைகள். குட்டி யானைகளைப்போல் நடப்பவர்கள்.

அன்றலர்ந்த நீலத் தாமரை போலவும் தங்கத் தாமரை போலவும் மலர்ந்த முகங்கள். ரத்தின மாலைகளை அணிந்திருந்தனர். நாற்றிசையிலும் ஒளிவீசும் திருமேனி கொண்டவர்கள்.

கண்டது கண்டபடி அசையாமல்‌ நின்றுகொண்டே இருந்தார் அக்ரூரர். 
பின்னர், உணர்வு பெற்று, அவர்களை நோக்கி தண்டம்போல் தரையில்  விழுந்தார். 

ஆனந்தக் கண்ணீர் பெருக, மயிர்க்கூச்செறிய, நா தழுதழுக்க, கண்ணா! நான் அக்ரூரன் வந்திருக்கிறேன் என்று சொல்லவும் சக்தியற்றுப் போய்க் குலுங்கினார்.

தன் திருவடியில் விழுந்த அக்ரூரரைத் தூக்கி, அவரது முகம் கண்டு எண்ணத்தை உணர்ந்த கண்ணன், சித்தப்பா என்று வாய் நிறைய அழைத்து, அவரது கரங்களைப் பிடித்து அருகில் இழுத்து அன்புடன் அணைத்துக்கொண்டான். 

பலராமனும் கண்ணனும் அவரது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு துள்ளலுடன் நடந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

பேச்சற்றவராய் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு தானும் குழந்தைகளுடன் ஓடினார் அக்ரூரர்.

அவரை அமரவைத்து, உபசரித்து, தேன் கலந்த பாலைப் பருகக் கொடுத்தார்கள்.

ஏதேதோ கதைகளைக் குழந்தைகள் பேச, விழிவிரியக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வெளியில் சென்றிருந்த நந்தன் வந்ததும் அவரும் அக்ரூரரை உபசரித்தார். பின்னர் அனைவரும் உணவருந்தினார்கள். நறுமணம் மிக்க சந்தனம் கொடுத்து, தாம்பூலம், மாலைகள் அளித்து அக்ரூரரை மகிழ்வித்தார் நந்தன். 

நந்தனும் அக்ரூரரும் பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் 
விளையாடச் சென்றனர்.

கம்சனின் அரசாட்சியில் எப்படி வாழ்கிறீர்கள்? கசாப்பு கடை ஆடு போல் நிம்மதியற்ற வாழ்க்கையாயிற்றே அது? 
தன் சகோதரி என்றும் பாராமல் அவளது குழந்தைகளைக் கொன்ற கொடும்பாவி. மக்கள் நலனில் அவனுக்கு அக்கறையே கிடையாதே.

என்றார் நந்தன். 

அக்ரூரர் வழி நடந்த களைப்பு நீங்கி நந்தனுடன் பேசத் துவங்கினார்.

மிகவும் கவனமாகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது. என்று சொல்லி தனுர் யாகம் நடக்கப்போகும் விஷயத்தைச் சொன்னார். அதற்கு நந்தனும், மற்ற கோபர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்பதை தயங்கித் தயங்கித் தெரிவித்தார்.

அவரது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து நந்தனுக்கும்‌ கவலையாக இருந்தது. எனினும் அரசன் சொல்லைத் தட்டமுடியாதென்பதால் கண்ணனைக் கலந்து பேசுகிறேன் என்று பதில் சொல்லிவைத்தார்.

இரவு கண்ணனும் பலராமனும் சித்தப்பா எங்களுடன் உறங்கட்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.

தனியாகச் சென்றதும் கண்ணன் அவரைக் கேட்டான்.

சித்தப்பா! உங்கள் பயணம் எப்படி? நம் சொந்தக்காரர்கள் அனைவரும் நலமா?
கம்சன் எப்படி இருக்கிறார்? பொது மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்னால்தான் என் பெற்றோர்க்குச் சிறைவாசம்‌ நேர்ந்தது. அதை நினைத்து என் மனம் கலங்குகிறது. வெகு நாள்களாக உங்களை எதிர்பார்த்திருந்தேன். எனக்காக என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்?

என்றான்.

எப்படிச் சொல்வதென்று தவித்துக்கொண்டிருந்த அக்ரூரருக்கு கண்ணனே எடுத்துக் கொடுத்ததும் சுலபமாகப் போயிற்று. 

மதுராவில் நடந்த அனைத்தையும்‌ ஒன்று விடாமல் சொன்னார். கம்சனின் திட்டத்தையும், தன்னை தூதனாக அனுப்பியதையும் கூறினார்.

அனைத்தையும்‌ கேட்டுக்கொண்ட கண்ணன், நான் பார்த்துக்கொள்கிறேன்.நாளை நாம் கிளம்புவோம். நிம்மதியாக உறங்குங்கள் என்றான்.

பின்னர், அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்ணனும் பலராமனும் உறங்கத் துவங்கினார்கள்.

ஆனந்தத்தில் எல்லையில் இருந்த அக்ரூரருக்கு உறக்கம் வருமா?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment