Monday, April 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 430

இரவு துவங்கும் நேரத்தில்‌ அரசரிடமிருந்து அழைப்பு வந்ததைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்தார் அக்ரூரர். கம்சன் கொடூரனாயிற்றே. எதற்கு அழைத்தானோ என்று பயந்துகொண்டே சென்றார்.

வஞ்சகன் கம்சனோ வழக்கத்திற்கு மாறாக அவரை வரவேற்றான்.
அக்ரூரருக்கு பயம் இன்னும் அதிகமாயிற்று.

வாருங்கள் அக்ரூரரே என்றழைத்த கம்சன் அவரருகே வந்து அவரது கரங்களைப் பிடித்துக்கொண்டான்.

அக்ரூரரே! நீங்கள்தான் என் ஆத்மநண்பர். எனக்கு இப்போது உங்களை விட்டால் உதவ யாருமில்லை. எனக்கு ஆலோசனை சொல்லவும், நன்மை செய்யவும் என்னைவிடப் பெரியவர் இங்கு எவருமில்லை. நீர் ஒருவர்தான் எனக்கு உதவி செய்யமுடியும்.

அக்ரூரர் செய்வதறியாது திகைத்தார். துஷ்டனான கம்சனின் பேச்சை அவர் நம்பவில்லை. இருப்பினும் அவனை மறுத்துப்பேசவும் இயலாது. அவ்வாறு செய்தால்‌ கொன்றுவிடுவான் என்பது அவருக்குத் தெரியும்.

அமைதியாக அவனை உற்றுப் பார்த்தார்.
ஆஜானுபாகுவான தேகமும், முறுக்கேறிய நரம்புகளும், கரங்களின் உறுதியும் கம்சனின் பலத்தைப் பறைசாற்றின. ஆனால், அதற்குச் சற்றும் பொருத்தமில்லாமல், முகத்தில் மட்டும் பயத்தின் ரேகைகள். வீரத்தினால்  துடிக்கவேண்டிய மீசை பயத்தினால் துடித்தது. 

கம்சன் மேலும் தொடர்ந்தான்.

கோகுலத்தில் வசுதேவரின் இரு புதல்வர்கள் இருக்கிறார்களாமே. நீங்கள் உடனே சென்று அவர்கள் இருவரையும் அழைத்து வர வேண்டும்.

என்னுடைய எதிரிகள் அவர்கள்தான் என்று முன்னமொருமுறை அசரீரி சொல்லிற்று. நந்தன் உள்பட, கோபர்களையும் அவர்களின் உறவினர்களையும் அவர்களோடு சேர்த்து அழைத்து வாருங்கள்.

என்றான்.

அக்ரூரரின் உடல் நடுங்கியது. அடுத்து என்ன சொல்லப்போகிறான் என்பதை ஊகித்துவிட்டார். 
அவர்கள் இங்கு வந்ததும் கொன்றுவிடலாம். குவலயாபீடம் தயாராக இருக்கிறது. அதனிடம் தப்பினால் மல்லர்கள் கொல்வார்கள். அவர்களுடன் வரும் நந்தன் முதலானவர்களையும், வசுதேவர், தேவகி, அவர்கள் உறவினர்கள், என் தந்தை உக்ரசேனர் அனைவரையும் கொன்றுவிடப்போகிறேன். இல்லையெனில் கலகம் வரும்.

அதன் பின் இந்த பூமியில் எனக்குப் பகைவரே இருக்க மாட்டார்கள். என் மாமனார் ஜராசந்தன், என் தோழன் த்விவிதன், சம்பரன் பாணன் ஆகியோரின் துணையுடன் தேவர்களையும் வெல்வேன். பூமி முழுவதையும் என் குடையின் கீழ்க் கொண்டுவந்துவிடுவேன்.

உங்களை நன்கு கௌரவிப்பேன். எனக்கு தெய்வம் போன்றவர் நீங்கள். எப்படியாவது க்ருஷ்ணனையும் பலராமனையும் இங்கு அழைத்து வந்து விடுங்கள். இச்செயல் உங்களால் மட்டுமே முடியக்கூடியது.  உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். 
என்றான்.

அக்ரூரர் நீண்ட பெருமூச்சு விட்டார்.
அரசே! உங்கள் திட்டம் சரியாக அமைந்திருக்கிறது. என்னால் முடிந்த அளவு முழுமையாக முயல்கிறேன். பயன் எப்படி இருக்குமோ தெரியாது. எப்படி இருந்தாலும் தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன். என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

நாளையே செல்லுங்கள் அக்ரூரரே! என்றான். 
ஆகட்டும் என்று தலையாட்டிவிட்டு வீடு சென்றார் அக்ரூரர்.

இதற்கிடையில் கம்சனால் அனுப்பப்பட்ட கேசி கோகுலத்தை அடைந்திருந்தான். பெரிய ராட்சச குதிரை போல் வடிவம் கொண்டு குளம்புகளால் பூமியைப் பெயர்த்துக்கொண்டு அதிவேகமாக ஓடினான். தன் பிடறி மயிரால் மேகங்களைச் சிதறடித்தான். பொந்து மாதிரி வாய், பெரிய கண்கள், நீண்ட கழுத்து, இடியைப் போல் கனைத்துக்கொண்டு அவன் ஓடிவருவதைப் பார்த்து நிலநடுக்கம் வந்ததுபோல் கோகுலம்‌ அஞ்சிற்று.

கோகுலவாசிகளின் பயத்தைக் கண்டு கண்ணன் நேராக கேசியின் எதிரில் வந்து நின்றான். கேசி கடுங்கோபத்துடன் கண்ணனைப் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். 

அந்த உதை தன் மீது விழாமல் நகர்ந்துகொண்டு ஏமாற்றினான் கண்ணன். பின்னர் கேசியின் பின்னங்கால்களைப் பிடித்து வேகமாகச் சுழற்றினான். தலைசுற்றி குடல் வாய்க்கு வந்துவிட்டது கேசிக்கு. பின்னர் தூக்கிவீசினான். 

கீழே விழுந்ததும் சுதாரித்துக்கொண்டு  இன்னும் வேகமாக கண்ணனை நோக்கி ஓடிவந்தான். கண்ணன் அவனது வாயினுள் தன் இடது கையை விட்டான். கையை வளர்த்திக்கொண்டே போக சுவாசம் தடைபட்டு முழி பிதுங்க, கால்களை உதறிக்கொண்டு உயிரற்றுத் தரையில் வீழ்ந்தான். 

பெரிய செயலைச் சாதித்துவிட்ட பெருமை ஏதுமின்றி யமுனையில் இறங்கி முகம் கைகால் கழுவிக்கொண்டு கண்ணன் கோகுலத்தை நோக்கி நடக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

கண்ணன் கேசியைக் கொன்ற இடம் கேசி காட் என்று வழங்கப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment