Friday, November 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 360

தத்தித் தத்தி நடக்கும் கண்ணன் சில சமயம் புல் தடுக்கிக் கீழே விழுவான். சட்டென்று நிமிர்ந்து தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று பார்ப்பான். யாரும் பார்க்கவில்லையென்றால் தானே எழுந்து, மண்ணைத் தட்டிக்கொண்டு மீண்டும் நடப்பான்.

யாராவது கோபி பார்த்து விட்டால், அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பான். அவள் ஓடிவந்து தூக்குவதற்கு வந்தால், பேசாமல் அப்படியே உட்கார்ந்துவிடுவான். அவள் வந்து கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டு மண்ணைத் தட்டிவிட்டு தூக்கிவைத்துக் கொள்வாள். அல்லது இறங்கி மீண்டும் நடையைத் தொடர்வான்.

அந்த கோபி கண்ணன் விழுந்ததைக் கண்டு சிரித்துவிட்டால் அன்றைக்குத் தொலைந்தாள் அவள். பெருங்குரல் எடுத்து அழுது, அமர்க்களம் செய்து யசோதையை வரவழைத்துவிடுவான். யசோதை வந்து கண்ணனைத் தூக்கி சமாதானப் படுத்த முயலும்போது சிரித்த கோபியைக் கையைக் காட்டி, என்னமோ அவள்தான் தள்ளிவிட்டாள் என்னும்படியாக மாட்டிவிட்டுவிடுவான்.

ஒரு சமயம் கண்ணன் கீழே விழுந்தபோது, சுற்றுமுற்றும் யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்து நடக்கத் துவங்கினான். அப்போது 'கொல்'லென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. ஆயிரவரின் சிரிப்பொலி அது. சுற்றி எவரும் இல்லையே என்று நிமிர்ந்து மேலே பார்த்தபோது, தேவர்கள் அனைவரும் நின்றுகொண்டிருந்தனர்.

பகவான் நிமிர்ந்து பார்த்ததும் பயந்துபோய் வாயை மூடிக்கொண்டார்கள்.
மூவுலகையும் ஒரு காலால் அளந்தவன் புல் தடுக்கிக் கீழே விழுகின்றானே என்று சிரித்துவிட்டார்கள் போலும்.

அவ்வளவுதான். வந்ததே கோபம் கண்ணனுக்கு. உங்களை யார் இங்கு அழைத்தார்கள்? இங்கேயே வந்து பிறந்திருக்கவேண்டியதுதானே. இப்போது மேலிருந்து என்ன வேடிக்கை? என்று கடிந்துகொள்ள பயந்துபோய் கலைந்து சென்றனர்.

வெகு விரைவிலேயே நன்றாக நடக்கவும் பழகிக்கொண்டான் கண்ணன்.

கறுத்த மேகம் போல் திருமேனி. குண்டு தொப்பை, அழகழகான அவயவங்கள். ஸ்ரீ சுகர் பாதி ச்லோகத்தில் கண்ணன் நடக்க ஆரம்பித்ததைச் சொல்லிவிட்டு அடுத்த லீலைக்குப்‌ போய்விடுகிறார். பெரியாழ்வாரோ பத்து பாசுரங்களில் அனுபவிக்கிறார்.

கண்ணனையும், யானையையும் ஒப்பிடுகிறார். குட்டி யானை போல் நடக்கிறானாம்.

கண்ணனும் குண்டு, யானையும் குண்டு.
யானைக்கு வாயிலிருந்து மதநீர் சொட்டிக்கொண்டே இருக்கும். கண்ணனுக்கும் வாயிலிருந்து இற்றுச் சொட்டும்.

யானை வரும் பின்னே மணியோசை வரும்‌முன்னே என்பதற்கிணங்க யானை வருமுன் அதன் கழுத்தில் கட்டிருக்கும் மணியின் ஓசை கேட்கும். கண்ணனுக்கும் இடுப்பில் கிண்கிணி, மேகலை, காற்சதங்கைகள் எல்லாம் போட்டுவிட்டிருப்பாள் யசோதை. அவன் வருவதற்கும் முன் அவை சலசலவென்று ஒலியெழுப்பும்.

யானை தெருவில் போனால் யானை யானை என்று பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் வியந்து நோக்குவர். ஆனால், அது யாரையும் லட்சியம் செய்யாமல் போய்க்கொண்டே இருக்கும்.

கண்ணன் தெருவில் போனாலும் அப்படித்தான். கோகுலத்திலுள்ள அனைவரும் வந்து கண்ணன் கண்ணன் என்று சொல்லிக்கொண்டு வைத்த கண்ணை எடுக்காமல் தலை மறையும்வரை பார்த்துக் கொண்டே நிற்பார்கள். இவன் யாரையும் லட்சியம் செய்யாமல் போய்க்கொண்டே இருப்பான்.

இவ்வாறு மிக அழகாக ஒப்புநோக்கும் ஆழ்வாரின் பாசுரம் கீழ்வருமாறு.

தொடர் சங்கிலிக்கை சலார் பிலாரென்ன
தூங்கு பண்மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம்
பைய நின்றூர்வதுபோல்
உடன்கூடி கிண்கிணி ஆரவாரிப்ப
உடைமணி பறைகறங்க
தடந்தாளினைக் கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ!

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment