Sunday, November 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 347

வயதான காலத்தில், இதற்கு மேல் எங்கே குழந்தை பிறக்கப்போகிறது என்று அவநம்பிக்கை வந்த பின்பு, சற்றும் எதிர்பாராத வகையில் யசோதா கருவுற்றாள். வயிற்றில் குழந்தை வந்திருக்கிறது என்று உணரும்போதே ஐந்து மாதங்களாகிவிட்டது.

அதே நேரத்தில் வீட்டில் வந்து தங்கியிருந்த வசுதேவரின் மனைவியான ரோஹிணியின் வயிறு திட்டிரென பெரிசாகி, இரண்டு மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இப்போது நந்தனுக்கே குழந்தை பிறந்திருப்பது மிகப்பெரிய சந்தோஷத்தை ஊர் மக்களுக்குக் கொடுத்தது.

தண்டோரா போடும் வரையில் யார் காத்திருந்தார்? பொழுது புலரும் முன்பிருந்தே ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நேற்றைக்கு யசோதைக்கு வலி எடுத்ததென்று மருத்துவச்சியைக் கூட்டிக்கொண்டு போனார்களே. தகவல் இல்லையே. குழந்தை பிறந்திருக்குமா? என்ன குழந்தை ஆணா? பெண்ணா? யசோதைக்கு வயதாகிவிட்டதே. அவள் ஆரோக்யமாய் இருக்கிறாளா தகவலே இல்லையே.

மண்டையைக் குடையும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே நந்தன் அரண்மனை வாயிலுக்கே வந்து குழுமிவிட்டனர். தண்டோரா போடுபவனுக்கு தெருத்தெருவாய் அலையும் வேலை மிச்சமாயிற்று.

எல்லாருக்கும் ஓர் நற்செய்தி!
நந்த மஹாராஜாவுக்கு ஆண் குழந்தை சுபஜனனம்!
டண் டண் டண்!

அவ்வளவுதான் நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்தனர் அனைவரும். இனம் தெரியாத பரவசம். அவர்களிடம் அளவுக்கதிகமாக நிரம்பியிருந்த செல்வம் பசுக்களே. பாலும், தயிரும் வெண்ணெய்யும் மிதமிஞ்சி இருந்தபடியால், அவற்றைக் கொண்டுவந்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டனர்.

வீட்டிலுள்ள தாம்பாளங்கள் கரண்டிகள் எல்லாவற்றையும்‌கொண்டுவந்து வாத்யம்‌போல் வாசித்து, பாடி ஆடத் துவங்கினார்கள்.
என்ன பாடினார்கள்?

கோவிந்தனின் பெயரைத் தவிர வேறென்ன தெரியும் அவர்களுக்கு?
தன்‌பெயரை நிலைநிறுத்தி கலியுகத்திலுள்ளோர்க்கு அபயம் அளிப்பதே இறைவனின் அவதார நோக்கம் என்று பார்த்தோமல்லவா?
அவன் பிறந்ததுமே நாமகீர்த்தனம்‌ துவங்கிவிட்டது.

ஜெய் ஜெய் கோவிந்த!
ஜெய ஹரி கோவிந்த!

என்று பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும்,
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டும் தன்னிலை மறந்து மகிழ்ச்சியில் திளைத்தனர் அந்த பாக்யாசாலிகள்.

ஸ்ரீ பாகவதத்தில் கூறப்படும் இந்நிகழ்வை ஆழ்வார் அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்திடில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளலாயிற்றே.
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்டநின்
றாடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.

நந்தன் கொண்டாடிய உற்சவம் என்பதால் அது நந்தோற்சவம் என்று பெயர் பெற்றது. இன்றும் கண்ணன் பிறந்தநாளை நாடெங்கிலும், உறியடி வைத்து வண்ண நீரையும், பாலையும், வெண்ணெயையும் ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டு கொண்டாடுவதைக் காண்கிறோம்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment