Saturday, November 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 352

அருள் செய்வதொன்றே இறைவனின் இயல்பு. பூதனையின் உயிரை உறிஞ்சினான். ஆனால், அவளுக்கு பிறவிச் சுழலிலிருந்து முக்தி அளித்தான்.

இதென்ன? விஷம் கொடுக்க வந்த அரக்கிக்கு முக்தி கொடுப்பானா? எனில், ஆசை ஆசையாக வெண்ணெய்யையும், பாலையும், அன்பையும் வாரிக் கொடுத்த இடைக் குலத்தோருக்கும், மற்ற பக்தர்களுக்கும் கொடுப்பதற்கு வேறு ஏதாவது தனிச்சிறப்புடன் வைத்திருக்கிறானா? அல்லது அவர்களுக்கும் பூதனைக்குக் கொடுத்த அதே பரமபதமா?

இதை அரங்கனிடம் கேட்டேவிட்டார் ஒரு பக்தர். நான் தினமும் உனக்கு பள்ளியெழுச்சி பாடி, உற்சவங்கள்‌செய்து, பார்த்து பார்த்து ஆராதனம் செய்கிறேன். எனக்கு முக்தி கொடுப்பாயா? என்றார்.

நிச்சயம்‌கொடுக்கிறேன் என்று அரங்கன் பதிலுரைத்ததும் அடுத்த கேள்வி கேட்டார்.

அப்படியானால், வைகுந்தம் வந்தால் என் பக்கத்தில் பூதனை, சகடாசுரன், கம்சன் போன்றவர்களும் அமர்ந்திருப்பார்களா? இதென்ன நியாயம்? என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது சிறப்பான இடம் கொடு. என்று அதிக உரிமையினால் கேட்கிறார்.

தன்னைப் புகழ்வதும், இகழ்வதும் இறைவனுக்கு ஒன்றே.

புகழ்தல், இகழ்தல், அன்பு, தாய்மை, நட்பு, விரோதம், எந்த விஷயமானாலும் அது இறைவனை நினைக்கத் தூண்டுமாயின் அதே வழியில் இறைவனை அடைந்துவிடலாம். இவை எதுவும் வராவிட்டால் இருக்கவே இருக்கிறது அவனது திருப்பெயர்.

மலை போன்ற அரக்கியின் உடலை எப்படி அழிப்பது? அப்படியே கொளுத்தி விட்டால் ஊருக்கே ஆபத்தாய் முடியுமே. எனவே சிற்சிறு பாகங்களாக வெட்டி எரியூட்டினர் கோபர்கள். அப்போது எரியிலிந்து துர்நாற்றம் வரவில்லையாம். அகில், மற்றும் சந்தன வாசனை கோகுலத்தைச் சூழ்ந்ததாம்.

இதுவொன்றே போதும். அவளது ஆன்மா கரையேறிவிட்டதற்கும், இறைவன் கரம் பட்டதால் அவளது உடல் புனிதமடைந்ததற்கும் சாட்சியாகிறது.

ஆனால், இவை எதையும் உணரும் நிலையில் கோபர்கள் இல்லை. இறைவன் தன் மாயையினால் அவர்கள் கண்களைக் கட்டி வைத்திருந்தான். குழந்தைக்கு ஏதோ ஆபத்து வந்ததென்று பயந்து பயந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஏனெனில் பூதனையின் அலறல் அவர்களது மண்டையைப் பிளந்ததுபோல் வலியை ஏற்படுத்தியிருந்தது.

பாற்கடல் வாசிக்கு கோமியத்தால் ரக்ஷை. பல்வேறு நியாசங்கள்‌ செய்துவைத்தனர்.

உன் பாதங்களை அஜரும், முழங்கால்களை கௌஸ்துபம் தரித்த இறைவனும், தொடைகளை யக்ஞ புருஷரும், இடையை அச்சுதரும், வயிற்றை ஹயக்ரீவரும், இதயத்தைக் கேசவரும், மார்பை ஈசனும்,‌ கைகளை‌ ஸ்ரீ விஷ்ணுவும், கழுத்தை சூரியனும், முகத்தை வாமனரும், தலையை பகவானும் காக்கட்டும்.

முன்புறம் சக்ரதாரியும், பின்புறம் கதை ஏந்தியவரும், பக்கவாட்டில் சார்ங்கமேந்திய மதுசூதனரும், நந்தகி ஏந்திய அஜனரும், திக்குகளில் கீர்த்தி பொருந்திய உருகாயரும், வானில் உபேந்திரரும், பூமியில் கருடரும், நாற்புறமும் கலப்பை ஏந்திய ஹலதரரும் உன்னைச் சுற்றி நின்று காக்கட்டும்.

பொறிகளை ஹ்ருஷீகேசரும், உயிரை ஸ்ரீமன் நாராயணரும், சித்தத்தை வாசுதேவரும், மனத்தை அநிருத்தரும் காக்கட்டும்.

புத்தியை பிரத்யும்னரும், அஹங்காரத்தை ஸங்கர்ஷணரும், விளையாடும்போது கோவிந்தனும், படுத்திருக்கும்போது மாதவனும் உன்னைக் காக்கட்டும். நடக்கும்போது வைகுந்தரும், அமர்ந்திருக்கும் போது ஸ்ரீபதியும், உண்ணும்போது யக்ஞநாராயணரும் காக்கட்டும்.

டாகினிகள், அரக்கிகள், கூஷ்மாண்டர்கள், பூத, பிரேத, பிசாச, ராட்சஸர்கள், கோடரை, ஜ்யேஷ்டா, பூதனா, மாத்ருகா, பொறிகளைக் கெடுக்கும் உன்மாதம், அபஸ்மாரம் முதலியவை, கெட்ட கனவுகள், குழந்தைகளைப் பீடிக்கும் பால கிரஹங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும். இவை அனைத்தும் பகவானின் பெயரைச் சொன்னாலே அழிந்துபோகும்.

எல்லா கோபிகளும் வந்து பல்வேறு வசனங்களைச் சொல்லி அனைவரையும் காக்கும் இறைவனுக்கு ரக்ஷை செய்வித்தனர்.

யசோதை ஒருவாறு மனக்கலக்கம் குறைந்து, குழந்தையை நன்கு நீராட்டி, அலங்கரித்து, தன் பாலை ஊட்டி உறங்கவைத்தாள்.

அவர்களது கைப்பாவையாக மாறிப்போன பரம்பொருள் தாயின் நிம்மதிக்காக மீண்டும் அறிதுயில் கொள்ள ஆரம்பித்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment