Monday, November 4, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 344

சாதாரணக் குழந்தை அழுதாலே பத்ரகாளிபோல் அலறுகிறது என்று சொல்வோம். இங்கு நிஜமாகவே பத்ரகாளி அலறுகிறாள்.

யாராவது உறங்க இயலுமா? அனைவரும் விழித்துக்கொண்டது மட்டுமன்றி பயந்துபோனார்கள்.

காவலாளிகள் நள்ளிரவென்றும் பாராமல், கம்சனுக்குச் சேதி சொல்ல ‌ஓடினர்.

கஞ்சன் வயிற்றில் நெருப்பாக நெடுமால் நின்றுகொண்டிருக்க அவனுக்கு உறக்கமேது?

அவன் காணும்‌ பொருள் அனைத்திலும் இறைவனைக் கண்டு கண்டு அஞ்சிக் கொண்டிருந்தான். பல்லாயிரம்‌ ஆண்டுகள் தவம் செய்தாலும் கிட்டாத பேறு கம்சனுக்கு பயத்தினால் கிடைத்தது. ஏதோ ஒரு உணர்வினால் இறைவனை இடையறாமல் நினைப்பதே பக்தி. கம்சன் செய்தது பயபக்தி.

காவலர் ஓடிவந்து சொன்னதும், அறையில் குறுக்கும்‌ நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கம்சன், கத்தியை உருவிக்கொண்டு தலைவிரிகோலமாக அப்படியே ஓடிவந்தான். ஓடிவரும் வேகத்தில் இடறி விழுந்தான். பிறகு எழுந்து அதிவேகமாக ஓடிவந்தான்.

அவனது நடையில் அண்டமே‌ கிடுகிடுத்தது.
அவனைக் கண்டதும் தேவகி, குழந்தையை தன் நெஞ்சோடு இறுக்கி புடைவைக்குள் ஒளித்துக்கொண்டாள்.

அவனிடம்‌கெஞ்சத் துவங்கினாள்.
அண்ணா! இது ஆண் குழந்தை இல்லை. பெண்‌குழந்தை. உன் மருமகள். பெண் குழந்தையைக் கொல்வது தகுமா?

ஏற்கனவே நான் பெற்ற குழந்தைகள் அனைத்தும்‌ இறந்துபட்டன. உன் ஆசைத் தங்கையான எனக்கு இந்தப் பெண்ணையாவது விட்டுவை அண்ணா. இவள் நீ சீர் செய்து கொண்டாடத் தக்கவள். இவளைக் கொல்வது தகாது
என்று கதறினாள்.

கம்சனின் இதயம்‌ மட்டுமல்ல. அந்தச் சிறைச்சலையும் கல்லால் ஆனது. எதுவும் உருகவில்லை.

மாறாக‌ கம்சன் அவளை மிரட்டி, அவள் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கிக்கொண்டான்.

தன்னைக் கொல்வதற்காக எட்டாவதாக சிங்கக்குட்டி போல் ஓர் ஆண்மகன் வருவான் என்று எதிர்பார்த்திருந்த கம்சனுக்கு பெண் குழந்தையைக் கண்டதும் சப்பென்றாகிவிட்டது.

இருப்பினும் அசரீரி எட்டாவது கர்பம் என்று தான் கூறியது. ஆணா பெண்ணா என்று கூறவில்லையே என்று நினைவுபடுத்திக் கொண்டான். எனவே அந்தக் குழந்தையைக் கொல்வதென்று முடிவு செய்து ஜகன்மாதாவான அந்த காளியின் கால்களைப் பிடித்துத் தூக்கினான். அவளைக் கல்லில் அறைவதற்காக ஓங்கி உயரே தூக்கும்‌ சமயம்..

யோகமாயா அவனது கைகளிலிருந்து நழுவி மேலே‌ சென்று ஆகாயத்தை மறைத்துக்கொண்டு ஓர் அற்புதக் காட்சி கொடுத்தாள்.

கண்ணனைக் காண விரும்பும் பக்தர்க்கு மிகவும் மகிழ்ந்துபோய் அவர்கள் வாழ்விலும்‌ இறை தரிசனத்திற்கும் ஏற்படும் தடைகளை விலக்குபவள் யோகமாயை எனப்படும் துர்காதேவியே ஆவாள்.

இப்போதும் கம்சனுக்கு கண்ணன் தரிசனத்திற்கு முன்பாக தேவி காட்சி கொடுத்தாள்.

கண்ணாடி எப்படி நம்மை எதிரொளிக்கிறதோ அவ்வண்ணமே நிர்குண பிரும்மமான இறையும் எதிரே நின்று வழிபடுபவரின் எண்ணத்தை எதிரொளித்து உருவம் கொண்டு, அருளும் செய்கிறது.

கம்சன் பகை கொண்டு அவளைக் கொல்ல எண்ணியதால் அவளும் பகையாகவே பதிலுரைத்தாள்.

எட்டுத் திருக்கரங்களுடன் மாலைகள், ஆடைகள், நறுமணப்பூச்சுக்கள், இரத்தின ஆபரணங்கள், வில், சூலம், பாணம், கேடயம், கத்தி, சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தி அற்புதக் கோலம் கொண்டு விளங்கினாள் தேவி.

வீணையின் நாதம் போன்ற இனிமையான குரலில், அவள் பேசினாலும் கம்சனுக்கு அது நாராசமாக இருந்தது.

மூடனே! என்னைக் கொல்லத் துணிவாயா? அதனால் என்ன பயன்? உன்னைக் கொல்லப்போகும் எதிரி வேறிடத்தில் பிறந்துவிட்டான். எளிய குழந்தைகளை வீணாகக் கொல்லாதே! உன்னை விடப் பெரிய அசுரர்களை கண நேரத்தில் அழித்தவள் நான். என் காலைப் பிடித்துவிட்டாய். அதனால், சில காலம் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். உன் எதிரிக்காகக் காத்திரு என்று கூறிவிட்டு மின்னலென மறைந்துபோனாள்.

செய்வதறியாது திகைத்து நின்ற தேவகியும் வசுதேவரும் அவள் நின்ற திசையை விழுந்து விழுந்து வணங்கினர்.

கம்சன் அங்கேயே தலையில் கைவைத்துக்கொண்டு தரையில் அமர்ந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment