Tuesday, December 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 361

நடக்கத் துவங்கிய கண்ணனை கோபிகளால் சமாளிக்கவே முடியவில்லை. கண்ணனும் அவன் அண்ணனும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைத்தாண்டி அக்கம்பக்க்த்து வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். அங்கு சென்று சும்மா இருந்தார்களா? விஷமங்கள் துவங்கின.

கண்ணன் தங்கள் வீட்டிற்கு வரமாட்டானா என்று ஏங்குவதும், வந்தால் அவன் விஷமத்தைத் தாங்கவொண்ணாமல் தவிப்பதும் வாடிக்கையாயிற்று.

யசோதையிடம் சென்று நேரடியாகப் புகார் செய்யத் தயங்கினர். அவள் அரசியாயிற்றே. அவளிடமே சென்று அவள் பிள்ளையைப் பற்றி எப்படிக் கூறுவது என்று பயந்தனர். ஆனால், சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் கண்ணனின் விஷமங்கள் அப்படி.

எனவே, யசோதையின் பார்வை படும் இடத்தில் கூடி நின்றுகொண்டு அவளது காதில் விழுமாறு பேசத்துவங்கினர்.

இன்னிக்கு காலைல கண்ணன் வந்து என்ன செய்தான் தெரியுமா?

என்ன செய்தான்?

நான் உள்ள வேலையா இருந்தேன். அவன் பாட்டுக்கு வந்து எல்லாக் கன்னுக்குட்டியையும் அவிழ்த்துவிட்டுட்டுப் போய்ட்டான்.

அச்சோ.. அப்றம்..

சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் அடுத்தவள். இவள் பட்ட அவஸதையை மனக் கண்ணால் கண்டுவிட்டாள் போலும்.

என்னடா கண்ணா இப்படி பண்ணின? ன்னு கேட்டா என்ன சொன்னான் தெரியுமா?

என்ன சொன்னான்?

அவிழ்த்துவிடத்தானே வந்திருக்கேங்கறான்.

அப்டின்னா?

எனக்கு மட்டும் புரிஞ்சுதான்ன? இனிமே இப்டி பண்ணாதடான்னு கொஞ்சம் கோவமா சொன்னேனா..

ம்ம்.

கலகலன்னு சிரிச்சுட்டான்.

ஹாஹா.. அப்றம்?

அப்றம்? என்ன கதையா சொல்றேன். அவன் சிரிப்புல எல்லாமே மறந்துபோச்சு. கொஞ்சம் வெண்ணெய் தாங்கோன்னு கேட்டான். ஒரு நினைப்பும் இல்லாம ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்ததும் ஓடிட்டான்.

சர்த்தான்.

நீ எவ்வளவோ பரவால்ல. எங்க வீட்ல நேத்து பானையெல்லாம் உருட்டி உடைச்சுட்டான்.
என்றாள் இன்னொருத்தி.

அடுத்தவள், அவன் சாப்டாலும் பரவால்ல. குரங்குக்கெல்லாம் கொடுக்கறான். வெண்ணெய் நன்னால்லன்னா அது என்னைப் பிடுங்க வரது.

ஹாஹாஹா

இன்னொருத்தி ஆரம்பித்தாள்..

எங்க வீட்ல தேடி தேடிப் பார்த்தான். வெண்ணெயே இல்ல. நான்தான் எல்லாத்தையும் அவர்ட்ட கொடுத்து வித்துட்டு வரதுக்காக மதுராக்கு அனுப்பிட்டேனே.

அப்றம்?

வெண்ணெய் இல்லன்னதும் கோச்சுண்டு தூளில தூங்கிண்டிருந்த குழந்தையைக் கிள்ளி அழவிட்டுட்டுப் போய்ட்டான்.

என்றதும் அத்தனை கோபிகளும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
யசோதையின் காதில் அனைத்தும் விழுந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment