Thursday, November 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 345

எட்டாவது குழந்தையாக வந்த தேவி, கம்சனை எச்சரித்துவிட்டு தன் பங்கிற்கு இன்னும் கொஞ்சம் பயத்தை அதிகரித்துவிட்டுச் சென்றாள்.

இறைவன்பால் கம்சன் கொண்டிருந்த பயமே அவனது தவம். அதுவே அவனை இறையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தது.

தாயன்பு, குழந்தை என்ற வாத்ஸல்யம், நட்பு, தொண்டன், காமம், பயம், கோபம் போன்ற எவ்வுணர்வானாலும் அது இறைவன் பால் வருமானால் அவ்வுணர்வின் மூலமாகவே இறை அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது.

கம்சன் வசுதேவரையும் தேவகியையும் பார்த்து அவர்களுக்குத் தன்னால் ஏற்பட்ட நிலை கண்டு வருந்தினான்.

அவர்களைச் சிறையினின்று விடுவித்தான்.
எட்டாவது குழந்தை என்னைக் கொல்லும் என்று அசரீரி கூறிற்று. ஆனால், எட்டாவது குழந்தையோ, என்னைக் கொல்பவன் வேறிடத்திலிருக்கிறான் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது. தெய்வம் கூட மாற்றி மாற்றிப் பேசுகிறதே. அதன் பேச்சை நம்பி உங்களைப் பலகாலம் சித்ரவதை செய்துவிட்டேனே. பல சின்னஞ்சிறு குழந்தைகளை அதுவும் சொந்த தங்கையின் குழந்தைகளைக் கொன்றேனே.

அவை தம் கர்மபலனைத்தான் அனுபவித்தன. பூமியில் தோன்றியவை மறையவேண்டும் என்பது நியதி. பொருள்தான் அழியுமே தவிர, ஆன்மா அழிவதில்லை. உடலே ஆன்மா என்றெண்ணுவதாலேயே பேத புத்தி ஏற்படுகிறது. தேகத்தை ஆன்மாவென்று நினைக்கும் அறிவிலிதான் கொன்றேன் என்றோ கொல்லப்பட்டேன் என்றோ நினைத்து சுக துக்கங்களில் மூழ்குவான்.

என் கொடுஞ்செயலைப் பொறுத்துக்கொள்ளுங்கள். சான்றோர்களாகிய நீங்கள் இருவரும் என்னிடத்தில் இரக்கம் காட்டுங்கள் என்று கூறி அழுதுகொண்டே வசுதேவர் மற்றும் தேவகியின் கால்களில் விழுந்தான்.

யோகமாயையின் வாக்கை நம்பிய கம்சன், தன்னைக் கொல்ல வந்தவன் தேவகியின் மகனில்லை என்று எண்ணினான்.

கீழோர் ஊருக்கு உபதேசம் செய்பவர்களேயன்றி தன் வரையில் அதைப் பின்பற்றமாட்டார்கள்.

தன் மரண பயத்தை வெல்ல முடியாத கம்சன் சாத்தான் வேதம்‌ ஓதுவதுபோல், நிலையாமை பற்றி தேவகிக்கும் வசுதேவருக்கும் எடுத்துரைத்தான்.

அளவுக்கதிகமான பயத்தினால் உண்மையில் அவன் புத்தி பேதலித்துப் போயிருந்தது.

கம்சன் சொன்னதைக் கேட்டு, துக்கத்திலும் இருவரும் சிரித்தனர். பின்னர் அவன் மீதுள்ள கோபத்தை விடுத்து, தங்கள் வீடு சென்றனர்.

மறுநாள் காலை, கம்சன் தன் அறிவார்ந்த அமைச்சர்களை அழைத்து, யோகமாயை கூறியதனைத்தும் கூறினான்.

தேவர்களிடம் பகை கொண்ட அசுரர்களாகிய அவர்கள், தங்கள் துர்புத்தியால் ஆலோசனைகளை வழங்கத் துவங்கினர்.

அரசே! நகரங்களிலும் கிராமங்களிலும் பிறந்து பத்து நாள்கள் கூட ஆகாத குழந்தைகளைக் கொன்றுவிடுவோமா?

தேவர்கள் உங்களிடம் மிகவும் அஞ்சுவார்களே!
தற்பெருமை பேசுபவர்களான அவர்களால் நம்மை என்ன செய்து விட முடியும்?

விஷ்ணு ஒளிந்து வாழ்பவர். சிவனோ காட்டில் அலைகிறார். தவம் செய்யும் ப்ரும்மாவால் மட்டும் என்ன செய்ய முடியும்?

இன்னொருவன் ஆரம்பித்தான்.
தேவர்களின் பலம் விஷ்ணுதான். தர்மம் உள்ள இடத்தில் அவர் இருப்பார். எனவே, தவம் செய்பவர், வேதம் ஓதுபவர், ரிஷிகள், இவர்களை எல்லாம் கொன்றுவிடலாம்.
என்றான்.

கம்சனுக்கு அது நல்ல யோசனையாகப் பட்டது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment