Friday, November 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 342

குழந்தையைக் கூடையில் வைத்துகோண்டு நடக்கத் துவங்கினார் வசுதேவர்.

மாயையினால் உண்டான பிரபஞ்சம் மாயையிலேயே மூழ்கியது. உயிருள்ளவை அனைத்தும் செயலற்றுப்போயின. உயிரற்றவை அனைத்திற்கும் உணர்வு வந்தது. சங்கிலிகள் தாமாக இடுபட்டன. பூட்டுகள் தாமாகத் திறந்தன. நடக்க நடக்க, ஒளியைக் கண்ட இருள் விலகிக்கொண்டே போவதுபோல் பிரபஞ்சம் வழி விட்டது.

காவலாளிகள் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
ஒவ்வொரு அரசாங்கத்திலும் தனியாக பசுக்களைப் பராமரிக்க இடைச்சேரி இருக்கும். பசுக்களே உண்மையான செல்வங்கள். ஒரு அரசனைப் போருக்கு அழைக்கவேண்டுமெனில் இடைச்சேரியில் புகுந்து, ஆநிறைகளைக் கவர்ந்து செல்லும் நடைமுறையைப் பார்க்கிறோம்.

மதுராவிற்கும் இடைச்சேரிக்கும் கிட்டத்தட்ட 14 கிமீ தூரம். வழியில் யமுனை பாய்ந்தோடுகிறது.
ஆவணி மாதத்துத் தேய்பிறை. அஷ்டமி தினம். க்ருஷ்ண சந்திரனின் அழகைக் கண்டு வெட்கி வானத்துச் சந்திரன் ஒளிந்துகொண்டாற்போல் எங்கும் இருள். அடைமழை கொட்டத் துவங்கியது.

மழையில் தலையில் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி நடப்பது என்று யோசிக்காமல், சாவி கொடுத்த பொம்மைபோல வசுதேவர் நடந்துகொண்டே இருந்தார். அவர் மனத்தில் ஆயிரம்‌ உணர்ச்சிகள்.

இறைவன் தன் நாடகத்தில் வசுதேவருக்கும் ஒரு முக்கியமான கைங்கர்யம் கொடுத்திருக்கிறான்.

ஆனால், மழையில் இறைவன் நனைவதை ஒருவரால் பொறுக்க முடியவில்லை. யார் அவர்? எப்போதும் உடனிருப்பவர். கைங்கர்யம் என்றாலே முதல் ஆளாக நிற்பவர். அமர்ந்தால் ஆசனமாவார். துயில் கொண்டால் படுக்கையாவார். இப்போது வசுதேவ வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. மழைக்குக் குடையானார்.

யமுனைக் கரைக்கு வந்துவிட்டார். துள்ளிக் குதித்தாள் யமுனை.

இவ்வளவு நாள்களாக கங்கைக்கும் யமுனைக்கும் ஒரு சின்ன பிணக்கு இருந்து வந்ததாம்.

திரிவிக்ரம அவதாரத்தில் மூவுலகையும் அளக்க இறைவன் முற்பட்டான். அப்போது விண்ணுலகை அளக்கத் தூக்கிய பாதம் ஸத்யலோகம் வரை சென்றது. தன் உலகத்திற்கு எழுந்தருளிய இறைவனின் திருப்பாதத்திற்கு ப்ரும்மா பூஜை செய்தார். அப்போது அவரது கமண்டலத்திலிருந்து இறைவனின் திருப்பாதத்தில் பட்டு பிரவஹித்தவளே கங்கா நதியாவாள். இறைவனின் திருப்பாத சம்பந்தம் பெற்றுத் தோன்றியதால், நதிகள் அனைத்திற்கும் தலைவியாகப் போற்றப்பட்டாள். என்னதான் ஸப்தநதிகளுள் ஒருத்தி என்ற அந்தஸ்து கிடைத்திருந்தபோதும், கங்கையைப்போல் இறைவனின் திருப்பாத சம்பந்தம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த யமுனையின் ஏக்கமெல்லாம் தீர யமுனைத் துறைவனாகவே இறைவன் வந்திருக்கும் காலம் இது. அவளது மகிழ்ச்சிக்கு எல்லையேது?

குழந்தைக்குக் கால்‌முளைத்த பின்பு யமுனையிலேயேதான் குடியிருக்கப்போகிறான் என்றாலும்‌ இப்போது தரிசனமாவது பெற்றுவிடவேண்டும் என்று துடித்தாள்.

வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்க வசுதேவர் தொடர்ந்து நடந்தார். வெள்ளம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment