Thursday, August 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 306

ஒளிரும் அக்னியைப் போன்ற தேஜஸுடன் விஸ்வாமித்திரர் காதியின் மகனாகப் பிறந்தார். இவர் க்ஷத்ரியராகப் பிறந்திருந்தபோதும், அத்தன்மையை விட்டு பின்னாளில் ப்ரும்மதேஜஸைப் பெற்றார்.

விஸ்வாமித்ரருக்கு நூற்றியொரு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மதுசந்தஸ் என்றழைக்கப்பட்டனர்.

அஜீகர்த்தர் என்ற ப்ருகு வம்சத்து மஹரிஷியின் புதல்வன் சுனச்சேபன். அவனை தேவராதன் என்றும் அழைப்பர். அவனைத் தன் மகனாக ஸ்வீகாரம் செய்துகொண்டார். தன் மகன்கள் நூற்றுவரையும் அழைத்து சுனச்சேபனை மூத்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி கூறினார்.

இந்த சுனச்சேபனைத் தான் அரிச்சந்திரன் தன் வேள்விக்காக நரபசுவாக விலைக்கு வாங்கி வந்தான். அவன் விஸ்வாமித்ரரின் அருளால் வருணன் மற்றும் பிரஜாபதிகளைப் ப்ரார்த்தனை செய்து தன்னைப் பிணைத்திருந்த வேள்விக்கான யூபஸ்தம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். தேவர்களின் அருளால் காப்பாற்றப்பட்டதால் தேவராதன் என்றும் அழைக்கப்பட்டான்.

அவனை தேவர்கள் விஸ்வாமித்ரருக்கே அளித்துவிட்டனர்.
விஸ்வாமித்திரரின் முதல் ஐம்பது புதல்வர்கள் அவனைத் தங்கள் சகோதரனாக ஏற்க இசையவில்லை. தன் சொல்லை மீறியதால் அவர்கள் அனைவரையும் மிலேச்சர்களாகப் போகும்படி சபித்துவிட்டார் விஸ்வாமித்ரர்.

அவரது நடுப்பிள்ளையான மதுசந்தஸ் தன் இளையவர்கள் ஐம்பது பேருடன் சுனச்சேபனைத் தமையனாக ஏற்க இசைந்தனர்.

அவனிடம் சென்று அண்ணா! நாங்கள் அனைவரும் உங்கள் தம்பிகள். தாங்கள்தான் எங்களை நல்வழியில் அழைத்துச் செல்லவேண்டும் என்றனர். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த விஸ்வாமித்ரர் அவர்களைப் பலவாறு ஆசீர்வதித்தார்.

சாஷ்டகன், ஹாரீதன், ஜயன், க்ரதுமதன் ஆகியோரும் விஸ்வாமித்ரரின் புதல்வர்கள் ஆவர்.
இதனால் விஸ்வாமித்ரரின் கோத்ரமான கௌசிக கோத்ரம் பலவாறாகப் பிரிந்தது.

தேவராதனை மூத்த புதல்வனாக ஏற்றதால் அவனது ப்ரவரம் தேவராதப் பிரவரம் என்றாயிற்று.
ஸ்ரீ சுகர் தொடர்ந்து அரசர்களின் வம்சாவளியைக் கூறலானார்.

சந்திர வம்சத்து அரசனான புரூரவஸின் மகன் ஆயு. அவனுக்கு நகுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரஜீ, ரம்பன், அநேனஸ் என்ற ஐந்து மகன்கள். க்ஷத்ரவ்ருத்ரனின் மகன் ஸுஹோத்ரன். அவனது மகன்கள் காச்யன், குசன், க்ருத்ஸமதன் என்று மூவன். க்ருதமத்ஸமதனுக்கு சுனகன் பிறந்தான். இந்த சுனகனின் மகன்தான் சௌனக முனிவர்.

காச்யனின் மகன் காசி. இவனது மகன் ராஷ்டிரன். அவனது புலவன் தீர்கதமஸ். தீர்கதமஸின் மகன்தான் ஆயுர்வேதத்தைத் தோற்றுவித்த தன்வந்திரி ஆவார்.

இவர் பகவான் வாசுதேவனின் அம்சமாகப் பிறந்தவர். வேள்விகளில் அவியை ஏற்பவரும் இவரே. இவரை நினைத்த மாத்திரத்திலேயே எல்லா நோய்களும் அழியும். இவரது புதல்வன் கேதுமான். கேதுமானின் மகன் பீமரதன்.

பீமரதனின் மகன் திவோதஸன். அவனது மகன் த்யுமான். த்யுமான் பிரதர்தனன், சத்ருஜித், ருதத்வஜன், குவலயாசுவன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறான்.

த்யுமானுக்கு அலர்க்கன் முதலான பல புத்ரர்கள் பிறந்தனர். அலர்க்கனைத் தவிர பூமியை ஒரே அரசனாகத் தொடர்ந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டவர், அதுவரை எவருமிலர்.

அலர்க்கனது வம்சத்தில் வந்தவர்கள் முறையே ஸந்ததி, ஸுநீதன், ஸுகேதன், தர்மகேது, ஸத்யகேது, த்ருஷ்டகேது, ஸுகுமாரன், வீதிஹோத்ரன், பர்க்கன், பார்க்கபூமி ஆகியோர்.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment