Saturday, August 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 316

சந்தனுவுக்கு கங்காதேவியிடம் பீஷ்மர் பிறந்தார். அவர் இம்மை, மறுமைக்கான தர்மங்கள், ராஜதர்மம், ஆபத்தர்மம் ஆகியவற்றை மிக நன்றாக அறிந்தவர். பகவானிடம் அளவற்ற பக்தி கொண்டவர். ஞானி. மிகச் சிறந்த வீரர். தன் குருவான பரசுராமரைப் போரில் வென்று அவரை சந்தோஷப் படுத்தியவர்.

சந்தனு மீனின் கருவில் தோன்றி செம்படவர்களால் வளர்க்கப்பட்ட ஸத்யவதியை மணந்தான். அவர்களது மகன்கள் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் ஆகியோர்.

தன் பெயர் கொண்டவன் என்பதற்காக அவன் மேல் சினந்த கந்தர்வன் சித்ராங்கதனைப் போரில் கொன்றுவிட்டான்.

சந்தனுவைத் திருமணம் செய்வதற்கு முன்பாகவே ஸத்யவதி பராசரர் மூலமாக ரிஷி கர்பமாக (கர்பவாசமில்லாத அல்லது கண்டதும் குழந்தை) என் தந்தை வியாசரைப் பெற்றாள்.
அவர் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகப் பிறந்தவர்.

க்ருஷ்ணத்வைபாயனர் என்றழைக்கப்பட்ட அவர், அநாதியாகப் பரந்துபட்டிருந்த வேதங்களைத் தொகுத்து, நான்காகப் பிரித்தார்.

அவரிடமிருந்துதான் நான் இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்றுக்கொண்டேன். இலந்தை மரத்தடியில் வசித்ததால் அவருக்கு பாதராயணர் என்ற பெயரும் உண்டு.

பீஷ்மர் சுயம்வர மண்டபத்திலிருந்து காசி மன்னனின் மகள்களை வலுவில் அழைத்துவந்தார்.
அவர்களில் அம்பிகை, அம்பாலிகை என்ற இருவரை சந்தனுவின் இளைய மகன் விசித்ரவீர்யன் மணந்தான். ஆனால், அளவுக்கதிகமான காமவேட்கை கொண்டிருந்ததால் ராஜ்யக்ஷ்மா என்ற நோய் பாதிக்கப்பட்டு இளம்வயதிலேயே விசித்ரவீர்யன் இறந்துபோனான்.

குருவம்சம் சந்ததியற்றுப் போனது. எனவே, தாயான ஸத்யவதியின் வேண்டுகோளின்படி, வியாசர் அம்பிகை, அம்பாலிகை இருவரிடமும் தன் தவசக்தியால் கர்பத்தைத் தோற்றுவித்தார். அவர்கள் பாண்டுவும், த்ருதராஷ்ட்ரனும் ஆவர். அவ்வமயம் அங்கிருந்த தாதியிடமும் கர்பம் தோற்றுவித்தமையால், விதுரர் பிறந்தார்.

த்ருதராஷ்ட்ரனின் மனைவி காந்தாரி. அவளுக்கு நூறு குழந்தைகள்‌ பிறந்தன. அவர்களுள் மூத்தவன் துரியோதனன். கடைசியாக துச்சலை என்ற பெண் பிறந்தாள்.

காட்டில் ஏற்பட்ட ஒரு சாபத்தால் பாண்டுவுக்கு பெண் இன்பம் அனுபவிக்க முடியாமல் போயிற்று. அதனால் அவனது மனைவிகள் குந்தியும், மாத்ரியும், தேவர்களின் அருளால் குழந்தைகள் பெற்றனர். யமதர்மராஜனின் அருளால் தர்மபுத்ரரும், வாயுவின் அருளால் பீமனும், இந்திரனின் அருளால் அர்ஜுனனும், குந்திக்குப் பிறந்தனர்.

மாத்ரிக்கு அச்வினி தேவர்களின் அருளால் நகுலனும், சகதேவனும் பிறந்தார்கள்.

இந்த ஐந்துபேரும் பாண்டவர்கள்‌ என்றழைக்கப் பட்டனர். இவர்களின் மனைவி திரௌபதி. அவளுக்கு உபபாண்டவர்கள் எனப்படும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். தர்மபுத்ரருக்குப் பிறந்தவன் ப்ரதிவிந்தியன். பீமனின் மகன் ச்ருதஸேனன். அர்ஜுனனின் மகன் ச்ருதகீர்த்தி. நகுலனுக்கு சதானீகன் என்பவனும் சகதேவனுக்கு ச்ருதகர்மா என்பவனும் பிறந்தனர்.

இவர்களைத் தவிர, தர்மபுத்ரரின் இன்னொரு‌ மனைவியான பௌரவி என்பவளிடம் தேவகன் பிறந்தான். பீமனுக்கு ஹிடிம்பியிடம் கடோத்கஜனும், காளி என்பவளிடம் ஸர்வகதனும் பிறந்தனர். சகதேவனுக்கு விஜயா என்பவளிடம் சுஹோத்ரன் பிறந்தான்.

நகுலனின் இன்னொரு மனைவியான கரேணுமதியிடம் நிரமித்ரன் என்பவன் பிறந்தான். அர்ஜுனன் நாககன்னிகையான உலூபியிடம் இராவனைப் பெற்றான். மணிபூரக மன்னனின் மகளிடம் பப்ருவாஹனன் பிறந்தான். ஆனால் அவன் மணிபூரக மன்னனுக்கு ஆண்வாரிசு இல்லாததால் பப்ருவாஹனன் அவனது மகனாகக் கருதப்பட்டான்.

ஹே! பரீக்ஷித்!
எல்லா எதிரிகளையும் வெற்றி கொள்ளும்‌ உன் தந்தை அபிமன்யு அர்ஜுனனுக்கும் சுபத்ராவுக்கும் பிறந்தவன். அவன் உத்தரையை மணந்து உன்னைப் பெற்றான்.

குலமே அழிந்துபோகும் நிலையில் அச்வாத்தாமாவின் ப்ரும்மாஸ்திரம் கருவிலிருந்த உன்னை அழிக்க முயன்றபோது, நீ கண்ணனால் காப்பாற்றப்பட்டாய்.

என்று சொன்ன ஸ்ரீ சுகர் தொடர்ந்து இனி வரப்போகும் பரீக்ஷித்தின் வம்சத்தை அவனுக்கே கூறலானார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment