Monday, August 12, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 313

பரதனின் தத்துப் பிள்ளை பரத்வாஜன் எனப்படும் விததன். அவனது மகன் மன்யு. அவனது மகன்கள் ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன், மஹாவீர்யன், நரன், கர்க்கன். நரனது மகன் ஸங்க்ருதி.

ஸங்க்ருதியின் புதல்வர்கள் குருவும், ரந்திதேவனும். இவர்களுள் ரந்திதேவனின் புகழ் உலகளாவியது.

ஆகாயம் போல் செல்வம் பெற்று அதை இழந்தவர் ரந்திதேவன். எந்த ஒரு முயற்சியும் இன்றி கிடைத்ததைப் பெற்று மழையைப் பெய்விக்கிறது ஆகாயம்.
அதுபோல் ரந்திதேவனும் இறையருளால் ‌கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு பெறுபவர். கிடைத்ததையும் பிறருக்கு அளித்துவிட்டுப் பட்டினி கிடப்பவர்.

தமக்கென்று எதையும் சேமித்துவைத்துக்கொள்ளாதவர். என்னுடையது என்ற எண்ணம் அற்றவர். மிகுந்த தைரியம் படைத்தவர். எல்லா நற்குணங்களும் இருந்தபோதும், குடும்பத்துடன் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. குடிக்க நீர் கூட இன்றி நாற்பத்தெட்டு நாள்கள் கழிக்க நேரிட்டது. குடும்பமே துன்பத்தில் உழன்றது. பசிதாகத்தால் மிகவும் துயருற்றனர். அப்போது யதேச்சையாக கொஞ்சம்‌ நெய், கோதுமை, தீர்த்தம் ஆகியவை கிடைத்தன. மிகவும் மகிழ்ச்சியுடன் உண்ணப்போகும் நேரத்தில் ஒரு அந்தணர் விருந்தினராக வந்தார்.

எதிலும் ஸ்ரீமன் நாராயணனைக் கண்டு மகிழும் ரந்திதேவன், அவருக்கு மிகுந்த மரியாதையுடன் தன் பங்கு உணவை அளித்தான்.

மீதமுள்ள உணவைப் பகிர்ந்துண்ணத் துவங்கும் நேரத்தில் ஒரு வேளாளன் விருந்தாளியாக வந்தான். அவனை ரந்திதேவன் ஸாக்ஷாத் ஸ்ரீஹரியாகவே நினைத்து, தான் பகிர்ந்துண்ண வைத்திருந்த உணவை அவனுக்குக் கொடுத்தான்.

அவன் சென்றபின் மற்றொருவன் தன் நாய்கள் சூழ வந்தான்.
மன்னா! பசியில் துடிக்கும் என் நாய்களுக்கு ஏதேனும் உணவளியுங்கள் என்று கேட்டான்.

அவனையும், நாய்களையும் பகவத் ஸ்வரூபமாகப் பார்த்த ரந்திதேவன் தன்னிடம் மீதியிருந்த உணவை அவர்களுக்கு அளித்துவிட்டு வணங்கினான்.

அதன் பின் நீர் மட்டும் கொஞ்சம் மீதமிருந்தது. அதைப் பகிர்ந்து குடிக்கலாம் என்று எடுத்தபோது, பிணங்களை எரிக்கும் ஒருவன் வந்து தாகமாக இருக்கிறது நீர் கிடைக்குமா என்று வினவினான்.
அவனது பரிதாபமான குரலைக் கேட்ட ரந்திதேவன், மிகவும் மனம் கசிந்தான்.

எண்வகை சித்திகளையும் நான் விரும்பவில்லை. அனைத்து உயிர்களிலும் உள்ளிருந்து அவர்களின் துன்பத்தை நானே அனுபவிக்கவேண்டும். வேறெவரும் துன்பம் அனுபவிக்காமல் இருக்கவேண்டும் என்றான்.

என்று சொல்லி தன்னிடமிருந்த நீரை அவனுக்குக் கொடுத்தான்.
அழையா விருந்தாளிகளாக வந்த நால்வரும் உண்மையில் பகவானின் திருமேனிகளே. ரந்திதேவனின் கருணையைச் சோதித்தபின், ஸ்ரீமன் நாராயணன், ப்ரும்மதேவர், பரமேஸ்வரன் மூவரும் அவன் முன் தோன்றினர்.

பற்றற்று விளங்கிய ரந்திதேவன் அவர்களிடம் வரம் வேண்டவில்லை.
ரந்த்திதேவனின் சேர்க்கையால் அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே பகவானைச் சரண் புகுந்த அடியாராகவும், யோகியராகவும் விளங்கினர்.

தனக்கு மிஞ்சியது தானமும் தர்மமும் என்ற கூற்றின் விளக்கம் ரந்திதேவன் ஆவான். தான் அனுபவித்ததுபோக மிஞ்சியதை தானம் செய்யவேண்டும் என்று கொள்ளாமல், அனைத்து செல்வங்களும் நிலையற்றவை. நிலையற்ற இவ்வுலகில் உயிர் பிரியும் தருணத்தில் எதுவும் நம்முடன் வாரா. அவ்வமயம் நம்மோடு வருவதற்காக எஞ்சியிருப்பது நாம் செய்த தான தருமங்களால் வரும் புண்ணியங்களே.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment