Sunday, August 4, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 309

குலகுருவான சுக்ராசார்யார் மகளுடன் ஊரை விட்டுச் செல்வதை அறிந்த அசுர அரசன் வ்ருஷபர்வா, அவர் பகைவர்க்கு அருளச் செல்வாரோ என்று அஞ்சினான். எனவே, ஓடிச்சென்று அவரது திருவடி பணிந்தான்.

உடனேயே மனங்கனிந்த சுக்ராசார்யார், அவனிடம்
என் மகளை என்னால் விட்டுக்கொடுக்க இயலாது. நீ அவளது சினம் தணியச் செய்தால் நகரம் திரும்புவேன் என்றார்.

வ்ருஷபர்வா தேவயானியிடம் கேட்க, அவளோ,
என் தந்தை என்னை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும், நான் எங்கெங்கு சென்றாலும், அங்கெல்லாம் சர்மிஷ்டையும் அவளது தோழிகளும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டு வரவேண்டும் என்றாள்.

குரு திரும்பி வராமல் போனால், நிகழும் சங்கடங்களையும், அவர் தம்முடன் இருப்பதால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகளையும் மனத்தில் கொண்டு தேவயானி இதற்கு சம்மதித்தாள்.

சுக்ராசார்யார் தேவயானியை யயாதிக்குத் திருமணம் செய்து கொடுத்தார். சர்மிஷ்டை அவர்களுடன் பணிப்பெண்ணாகச் சென்றாள்.
சுக்ராசார்யார் எக்காரணம் கொண்டு அவளை அந்தரங்கத்திற்கு அழைக்கக்கூடாது என்ற விதியுடன் சர்மிஷ்டையை யயாதி மற்றும் தேவயானியுடன் அனுப்பினார்.

சில நாள்களில், தேவயானிக்குக் குழந்தை பிறந்ததைக் கண்டு, சர்மிஷ்டை தன்னையும் மனைவியாக ஏற்கும்படி யயாதியிடம் தனிமையில் வேண்டினாள்.

மக்கட்பேற்றிற்காக தன்னை ஏற்கும்படி வேண்டும் சர்மிஷ்டையை மறுதலிப்பது அரசதர்மம் அன்று என்பதாலும், குருவின் வாக்கு நினைவிருந்ததாலும், தெய்வாதீனமாக ஏற்படும் சங்கடத்தை சமாளிக்க எண்ணி சர்மிஷ்டையின் வேண்டுகோளை ஏற்றான்.

தேவயானி, யது, துர்வஸு ஆகிய புதல்வர்களைப் பெற்றாள். சர்மிஷ்டை த்ருஹ்யு, அனு, பூரு ஆகிய மூன்று பிள்ளைகளைப் பெற்றாள்.

தன் கணவன் மூலமாக சர்மிஷ்டைக்கு குழந்தை பிறந்ததை அறிந்த தேவயானி கடுஞ்சினம் கொண்டு தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டாள். யயாதி எவ்வளவு சமாதானப் படுத்தியும், அவள் கேட்டாளில்லை.

மகளின் நிலையைப் பார்த்து மனம் கலங்கிய சுக்ராசார்யார், யயாதியை வயோதிகம் ஆட்கொள்ளட்டும் என்று சபித்தார்.

அதைக் கேட்டு யயாதி,
அந்தணோத்தமரே! உலக இன்பங்களிலிருந்து என் மனம் விடுபடாத நிலையில் இந்தச் சாபம் அளித்துவிட்டீர். உங்கள் மகளுக்கும் இதனால் துன்பம்தானே. தயவு கூர்ந்து விமோசனம் அருளுங்கள் என்றான்.

அவனது பணிவைக் கண்ட சுக்ராசார்யார் மனமிரங்கி,
யாராவது மகிழ்ச்சியுடன் தம் இளமையை உனக்குத்தந்து உன் முதுமையை வாங்கிக் கொள்வாராயின் நீ மாற்றிக்கொண்டு இளமையை அடையலாம் என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment