Saturday, August 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 308

யயாதி அரசனானதும், தன் நான்கு தம்பிகளையும் நாற்றிசை நாடுகளுக்கு அரசர்களாக்கினான். சுக்ராசார்யாரின் மகளான தேவயானியையும், அசுர மன்னன் வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்துகொண்டான்.

இவ்வாறு ஸ்ரீ சுகர் கூறியதும்,
பரீக்ஷித் இடை மறித்தான்.
முனிச்ரேஷ்டரே! சுக்ராசார்யர் அந்தணர். யயாதியோ க்ஷத்ரியன். இவர்களது திருமணம் எவ்வாறு நடைபெற்றது? வழக்கிற்கு மாறாக உள்ளதே
என்றான்.

அசுர மன்னனான வ்ருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டை ஒரு பேரழகி. அவளது தோழிகளுள் ஒருத்தி, அசுரகுல குருவான சுக்ராசார்யாரின் மகள் தேவயானி.

சர்மிஷ்டை ஒரு சமயம் தேவயானியுடனும், மற்றும் பல தோழிகளுடனும் நகரிலுள்ள அழகிய நந்தவனங்களில்‌ உலவிக்கொண்டிருந்தாள்.
அவ்வனங்களில் பூத்துக் குலுங்கும் மரங்களும், செடிகளும், தாமரைகள் பூத்த தடாகங்களும் இருந்தன.

பேரழகிகளான அவர்கள் ஒரு நந்தவனத்திலிருந்த தடாகத்தின் கரையில் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டு நீர்விளையாட்டு ஆடினார்கள்.

அவ்வமயம் பரமேஸ்வரன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலேறி அவ்வழியே வந்து கொண்டிருந்தார்.


உடனே அப்பெண்கள் அனைவரும் ஓடிச்சென்று தத்தம் ஆடைகளை அவசரம் அவசரமாக அணிந்துகொண்டனர். பரபரப்பினால் சர்மிஷ்டை தேவயானியின் ஆடையைத் தன்னுடையதென்று எண்ணி தவறாக அணிந்துகொண்டுவிட்டாள்.

அதைக் கண்ட தேவயானிக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. அவளைப் பார்த்துச் சுடுசொல் கூறி ஏசினாள்.

அடியே! வேள்விக்கான அவியுணவை நாய் கவ்வியதுபோல், என் ஆடையை இவள் உடுத்திக்கொண்டாளே. ஸ்ரீமன் நாராயணனே கொண்டாடும் ப்ருகு வம்சத்தவர் நாங்கள். இவள் தந்தையோ அசுர வேந்தன். என் தந்தையின் சீடன். அவரது திருவடி தொழுபவன். இவள் எப்படி என் ஆடையை உடுக்கலாம்? இதென்ன அநியாயம்?

இதைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்ட சர்மிஷ்டை,
நீ ஒரு பிச்சைக்காரி. காக்கையும் நாயும் பிறர் வீட்டு வாசலில் உணவுக்காகக் காத்து நிற்பதுபோல் நீ எங்கள் வீட்டைப் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாய். உனக்கு இவ்வளவு ஆணவமா?
என்று கத்திவிட்டு, தேவயானியின் ஆடைகள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டுப் போய்விட்டாள்.

வேட்டையாடிவிட்டு அவ்வழியே வந்த யயாதி மன்னன், தாகத்திற்காக நீர் இறைக்கக் கிணற்றின் அருகில் சென்றான். கிணற்றினுள் ஆடையின்றித் தவிக்கும் தேவயானியின் மேல் பரிதாபப்பட்டுத் தன் மேலாடையைக் கொடுத்தான். அவளைக் கிணற்றிலிருந்து மேலேற்றிவிட்டான்.

வெளியில் வந்த தேவயானி, யயாதியைப் பார்த்து,
தாங்கள் பற்றிய இக்கரத்தை வேறெவரும் பற்றலாகாது. கிணற்றில் விழுந்த எனக்கு இறையருளால் தங்கள் தொடர்பு கிடைத்தது. முன்பொரு சமயம் ப்ருஹஸ்பதியின் புதல்வனான கசனை நான் சபித்தேன். அதற்கு பிரதி சாபமாக எனக்கு அந்தணனுடன் திருமணம் நடக்காது. என்னை மணந்துகொள்ளுங்கள் என்றாள்.

இந்த சம்பந்தம் அறநெறிக்குப் புறம்பானதால், யயாதி இதை விரும்பவில்லை தான். ஆனாலும் இத்தொடர்பு தெய்வாதீனமாக எதிர்பாராமல் நிகழ்ந்ததாலும், தேவயானியை அவனுக்குப் பிடித்திருந்ததாலும் அவளது சொல்லை ஏற்றான்.

யயாதி சென்றதும், தேவயானி அழுதுகொண்டே தன் தந்தையிடம் நடந்ததனைத்தையும்‌ கூறினாள்.
தன் மகள் கூறியதைக் கேட்டு மனம் வருந்திய சுக்ராசார்யார், அசுர‌மன்னனுக்கு புரோஹிதனாக இருப்பதை விட உஞ்சவ்ருத்தி வாழ்க்கையே மேல் என்று நினைத்து பெண்ணையும் அழைத்துக்கொண்டு அந்நகரத்தை விட்டுச் சொல்லாமல் வெளியேறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment