Wednesday, August 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 312

துஷ்யந்தனுக்குப் பிறகு பரதன் சக்ரவர்த்தியானான். இறையம்சத்துடன் பிறந்த அவனது வலது கையில் சக்ர ரேகையும், தாமரை மொட்டுக்களின் ரேகையும் காணப்பட்டன.

அரசர்க்கரசனாக அரியணை ஏறிய பரதன், பற்பல வேள்விகளைச் செய்தான்.

மமதா என்பவரின் மகனான தீர்கதமஸ் அவனது புரோஹிதர். அவரைக் கொண்டு கங்கோத்ரியில் துவங்கி, கங்கை கடலில் கலக்கும் வரையிலுள்ள கங்கைக் கரையில் ஐம்பத்தைந்து அஸ்வமேத யாகங்களும், யமுனோத்ரியிலிருந்து பிரயாகை வரையிலுள்ள கரையில் எழுபத்தெட்டு அசுவமேத யாகங்களையும் செய்தான்.

ஏராளமான செல்வங்களை தானமாகக் கொடுத்தான். ஒவ்வொரு முறையும் வேள்வித்தீ துவக்கும் சமயத்தில் ஆயிரம் அந்தணர்களுக்கு, ஒவ்வொருவர்க்கும் பதிமூன்றாயிரத்து எண்பத்து நான்கு பசுக்களை தானமாகக் கொடுத்தான்.

அந்த வேள்விகளில் நூற்று‌முப்பத்து மூன்று குதிரைகளை யூதஸ்தம்பத்தில் கட்டி வைத்து, நூற்று முப்பத்து மூன்று அசுவமேதங்களைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான்.
இவைகளால் அவனது புகழ் உலகெங்கும் பரவியது.

பரதன் செய்ததைப் போல் வேள்விகளை அதற்குமுன் ஒருவரும் செய்ததே இல்லை. இனியும் எவரும் செய்யக்கூடுமா என்ன?

எண்டிசைகளை வெற்றிகொள்ள திக்விஜயம் சென்றபோது, அந்தணர்களிடமும், ஸாதுக்களிடமும் பகைமை கொண்டவர்களும், ஹிம்ஸிப்பவர்களுமான கிராதர்கள், ஹூணர்கள், யவனர்கள், கங்கர்கள், கசர்கள், சாகர்கள், மிலேச்சர்கள் ஆகியவர்களுள் தீய எண்ணம் கொண்டவர்களை அழித்தான்.

முன்பொரு சமயம் பலம் மிக்க அசுரர்கள் தேவப் பெண்களை வலுவில் இழுத்துக்கொண்டு ரஸாதலத்தில் வைத்தார்கள். பரதன் அவர்களை வென்று தேவப்பெண்களை மீட்டான்.

விண்ணிலும் மண்ணிலும் அனைத்துவிதமான தேவைகளும் பரதனால் பூர்த்தி செய்யப்பட்டன. இருபத்தேழாயிரம் வருட காலம் ஒரே குடையின் கீழ் எண்டிசைகளையும் ஆண்டு வந்தான் பரதன்.

அளப்பரிய செல்வம், ஒரே குடையின் கீழ் உலகனைத்தும் ஆளும் போகம், தடையற்ற செங்கோன்மை, இவ்வுடல் அனைத்தையும் ஒருநாள் பொய்யென்றுணர்ந்து உலகியலிலிருந்து ஒதுங்கித் துறவேற்றான்.

விதர்ப்ப மன்னனின் மகள்கள் மூவர் பரதனின் மனைவிகள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தேஜஸ்வியாகவும், பரதனை ஒத்த பராக்ரமம் இல்லாதவர்களாகவும், பலம்‌ குறைந்தவர்களாகவும் பிறந்தனர். அவர்கள் இளம் வயதிலேயே இறந்துபட்டனர். இது கண்டு பரதன் மிகவும் வருந்தினான்.

இவ்வளவு செல்வம் இருந்தும் மக்கட்செல்வம் இன்றி துயருற்றான் பரதன். பிள்ளைப்பேற்றிற்காக மருத்ஸோமம் என்ற வேள்வியைச் செய்தான். தேவர்கள் அவ்வேள்வியால் மகிழ்ந்து அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்தனர். அவனது பெயர் பரத்வாஜன் என்பதாம்.

அவன் தேவகுருவின் புதல்வன். அவனை தேவகுரு கைவிட்டுவிட, மருத்கணங்கள் அவனை எடுத்து வளர்த்தனர். பரதனது வம்சம் தொடர்ச்சியற்றுப் போகாமல் இருக்க அக்குழந்தையை பரதனிடம் கொண்டுவந்து கொடுத்து விட்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment