Tuesday, August 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 311

ஸ்ரீ சுகர் தொடர்ந்து பூருவின் வம்சத்தைக் கூறலானார்.

பரீக்ஷித்! நீ பிறந்த பூரு வம்சத்தின் பெருமையைக் கூறுகிறேன் கேள்.
பூருவின் மகன் ஜனமேஜயன். மேலும் அவனது வம்சாவளி முறையே ப்ரசின்வான், ப்ரவீரன், நமஸ்யு, சாருபதன்,ஸுத்யு, பஹுகவன், ஸம்யாதி, அஹம்யாதி, ரௌத்ராசுவன்.

ரௌத்ராசுவனுக்கு க்ருதாசீ என்ற அப்ஸரப் பெண்ணின் மூலம் ருதேயு, குக்ஷேயு, ஸ்தண்டிலேயு, க்ருதேயு, ஜலேயு, ஸந்ததேயு, தர்மேயு, ஸத்யதேயு, வ்ரதேயு, வனேயு ஆகிய பத்து புத்திரர்கள்.

இவர்களுள் ருதேயுவின் மகன் ரந்திபாரன். அவனுக்கு ஸுமதி, துருவன், அப்ரதிரதன் என்று மூன்று மகன்கள். அப்ரதிரதனின் மகன் கண்வன். அவனது மகன் மேதாதிதி. அவனுக்கு பிரஸ்கண்வன் முதலான அந்தணர்கள் பிறந்தனர்.

ஸுமதியின் மகன் ரைப்யன். இவனது மகன் மிகவும் புகழ் வாய்ந்த துஷ்யந்தன் பிறந்தான்.

ஒரு சமயம் வேட்டையாடச் சென்ற துஷ்யந்தன், கண்வ மஹரிஷியின் குடிலின் அருகில் வந்துவிட்டான். அங்கே திருமகளோ, தேவமகளோ என்னும்படியான பேரழகுடன் ஒரு பெண் தனிமையில் அமர்ந்திருந்தாள். கண்டதும் அவள்‌மேல் காதல் கொண்டான் துஷ்யந்தன்.

அவளிடம் இனிமையாகப் பேசத் துவங்கினான். நீ அரசகுமாரியாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் பூரு வம்சத்தவர்களின் மனம் அறநெறி பிறழ்வதில்லை. நீ யார் என்று சொல்வாயாக.
என்று கேட்டான்.

அவள், நீங்கள் சொல்வது உண்மைதான். என் தந்தை விஸ்வாமித்திரர். என் தாயான மேனகை என்னை வனத்தில் விட்டுச் சென்றுவிட்டாள். என் பெயர் சகுந்தலை. என்னை கண்வ முனிவர் எடுத்து வளர்த்தார். தாங்கள் யார்?

இங்கே அமருங்கள். எங்கள் பணிவிடைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். காட்டு நெல்லால் செய்யப்பட்ட அன்னம் இருக்கிறது. உணவு ஏற்கவேண்டும். விரும்பினால் தங்கி இளைப்பாறலாம்
என்றாள்.

துஷ்யந்தன் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான்.
குசிக வம்சத்தில் பிறந்த நீ இவ்வாறு விருந்தோம்புவது இயற்கையே. அரசகுமாரிகளுக்கு தங்கள் கணவரைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டே. நான் பூரு வம்சத்து அரசன் துஷ்யந்தன். என்னை ஏற்பாயா? என்றான்.

அவள் மனமும் துஷ்யந்தனைக் கண்டதும் நெகிழ்ந்திருந்த காரணத்தால், ஒப்புதல் தெரிவித்தாள். இடம், காலம் நெறிமுறைகளை நன்கறிந்த துஷ்யந்தன் அவளை காந்தர்வ முறைப்படி அப்போதே திருமணம் செய்துகொண்டான். அவ்விரவு அங்கேயே களித்திருந்த பின், மறுநாள் அரண்மனை சென்றான்.

கண்வர் அவ்வமயம் வெளியில் சென்றிருந்தபடியால், சில காலம் கழித்து அவர் திரும்பி வந்ததும் அவரிடம் கூறிவிட்டு முறையாக அழைத்துச் செல்லலாம் என்று அவளை விட்டுச் சென்றான்.

இதற்கிடையில் துர்வாச முனிவரின் சாபத்தாலும், விதிப்பயனாலும், நடந்தவை அனைத்தும் அவனது நினைவிலிருந்து நீங்கிற்று.

உரிய காலத்தில் சகுந்தலை ஓர் அழகிய ஆண்மகவைப் பெற்றாள். ஞானத்ருஷ்டியால் அனைத்தையும் உணர்ந்த கண்வர், அனைத்தும் இறைவன் திருவுளம் என்று கொண்டு, குழந்தைக்கு ஜாதகர்மா முதலிய கர்மாக்களைச் செய்து வைத்து, பரதன் என்று பெயரிட்டு அங்கேயே வளர்த்து வந்தார்.

அக்குழந்தையோ நடக்கும் பருவம் வந்தவுடனேயே, வலிமை பொருந்திய சிங்கங்களைப் பிடித்துக் கட்டி வைத்து அவைகளுடன் விளையாடலாயிற்று.

ஒரு நாள் சகுந்தலா கணவனை நாடி, குழந்தையுடன் துஷ்யந்தனின் அரண்மனைக்குச் செல்ல, அரசனுக்கோ அவளது நினைவு அறவே இல்லை.

அப்போது ஆகாசவாணியாக,
துஷ்யந்தா! இவள் உன் மனைவி. குழந்தையும் உன் பிள்ளை. அவர்களை ஒதுக்கலாகாது. உன் மனைவியையும் மகனையும் ஏற்றுக்கொள்
என்று உத்தரவு கேட்டது.

அறநெறி தவறாத அரசர்களுக்கு குழப்பம் வரும் சமயம், தெய்வம் உடனேயே உதவுவதைப் பல புராணங்களில் பார்க்கிறோம். ஆனாலும் இது பெரிய அதிசயமே.

தெய்வ வாக்கைக் கேட்டு துஷ்யந்தன் அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment