Friday, August 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 319

மன்னா! யது வம்ச சரித்ரம் மிகவும் பவித்ரமானது. அனைத்து பாவங்களையும் போக்கக்கூடியது. இந்த வம்சத்தில்தான் பகவான் ஸ்ரீமன் நாராயணன் கண்ணனாக அவதாரம் செய்தார்.

யதுவின் மகன்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டா, நளன், ரிபு ஆகிய நான்கு மகன்கள். ஸஹஸ்ரஜித்தின் மகன் சதஜித். அவனுக்கு மஹாஹயன், வேணுஹயன், ஹைஹயன் என்ற மூன்று புதல்வர்கள்.

ஹைஹயனின் வம்சாவளி முறையே. தர்மன், நேத்திரன், குந்தி, ஸோஹஞ்ஜி, மஹிஷ்மான், பத்ரஸேனன் ஆகியோர்.

பத்ரஸேனனின் மகன்கள் துர்மதன், தனகன். தனகனின் மகன்கள் க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருதவர்மா, க்ருதௌஜஸன் ஆகிய நான்கு மகன்கள்.

க்ருதவீர்யனின் மகன் கார்த்தவீர்யார்ஜுனன். இவனது கதையை முன்பே பார்த்தோம். இவன் ஏழு தீவுகளுக்கும் ஒரே அரசனாக விளங்கினான். தத்தாத்ரேயரிடமிருந்து யோக வித்தைகளைக் கற்று எண்வகை ஸித்திகளையும்‌ பெற்றிருந்தான்.

ஆயிரம் கரங்கள் கொண்ட இவன் எண்பத்தையாயிரம் வருடங்கள் மிகவும் சக்தி படைத்தவனாக வாழ்ந்தான். இவனது உடல்வலியோ, செல்வமோ குறையவில்லை. மேலும் இவன் பெயரை நினைத்தாலே தொலைந்த பொருள் திரும்பக் கிடைத்துவிடும் என்னும்போது அவனுக்கென்ன குறை வரப்போகிறது?

இவனது ஆயிரக்கணக்கான புதல்வர்களில் பரசுராமரால் கொல்லப்பட்டவர்கள் போக ஜயத்வஜன், சூரஸேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் ஆகிய ஐவரே மீதமிருந்தனர்.

ஜயத்வஜனின் மகன் தாலஜங்கன். அவனுக்கு நூறு புதல்வர்கள். அவர்கள் அனைவருக் தாலஜங்கர்கள் எனப் பெயர் பெற்றனர். ஸகர மன்னன் ஔர்வ முனிவரின் அருளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.

அந்த நூற்றுவரில் மூத்தவன் வீதிஹோத்ரன். அவனது மகன் மது. மதுவின் மகன் வ்ருஷ்ணி.
மது, யது, வ்ருஷ்ணி ஆகியோரின் பெயரால் இவ்வம்சம் மாதவர்கள், வ்ருஷ்ணிகள், யாதவர்கள் என்றழைக்கப்பட்டது.

க்ரோஷ்டாவின் வம்சம் முறையே வ்ருஜினவான், சுவாஹி, ருசேகு, சித்ரரதன், சசபிந்து.

சசபிந்து பெரும் யோகி, பெருஞ்செல்வம் படைத்தவன், மகாவீரனும் கூட. அவன்
தோல்வியே காணாமல் பூமண்டலம்‌ முழுவதையும் ஆண்டான். அவனுக்குப் பதினாயிரம்‌ மனைவிகள். ஒவ்வொருத்திக்கும் ஒரு லட்சம்‌ புதல்வர்கள். இவ்வாறு நூறு கோடிப் பேர் அவன் மக்களே.

அவர்களுள் அறுவர் முக்கியமானவர்கள். மூத்தவன் பிருதுசிரவா. அவனது வம்சம் முறையே தர்மன், உசனஸ், ருசகன். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் புருஜித், ருக்மன், ருக்மேஷு, பிருது, ஜ்யாமகன் ஆகியோர்.

ஜ்யாமகனின் மகன் சைப்யை. அவன் மனைவிக்கு பயந்தவன். மக்கட்பேறில்லாததால் ஒரு சமயம்‌ பகைவன் வீட்டிலிருந்து போஜ்யா என்ற ஒரு சிறு பெண்குழந்தையை எடுத்துவந்தான்.

சைப்யை சினத்துடன் அவள் யாரென்று வினவ, இவள் உன் மருமகள் என்றான்.
எனக்கு குழந்தையே இல்லையே. எப்படி இவள் மருமகளாவாள்
என்று சைப்யை கேட்டாள்.

ஜ்யாமகனோ, இனி பிறக்கப்போகும் மகனை இவளுக்கு மணம் முடிக்கலாம் என்று கூறி சமாளித்து வைத்தான்.

அவ்வமயம் அவனால் ஆராதிக்கப்பட்ட விஸ்வேதேவர்கள் 'ததாஸ்து' என்று ஆமோதிக்க விரைவிலேயே சைப்யை கருத்தரித்து அழகிய ஆண் மகவைப் பெற்றாள். அவன் பெயர் விதர்ப்பன் என்பதாம். அவன் போஜ்யாவை மணம் முடித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment