Tuesday, August 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 317

பரீக்ஷித் கங்கைக் கரையில் ப்ராயோபவேசத்திற்காக வந்து அமர்ந்ததும், அவன் மீதிருந்த அன்பினால், அவனது மகன்களும், உறவினர்களும்‌ அங்கு வந்து அமர்ந்திருந்தனர். அவர்களைக் காட்டி ஸ்ரீ சுகர் கூறலானார்.

பரீக்ஷித், உன் எதிரே இருக்கும் ஜனமேஜயன், ச்ருதசேனன், பீமசேனன், உக்ரசேனன் ஆகிய நால்வரும் உன் புதல்வர்கள்.

நீ தக்ஷகன் கடித்து இறந்துபட்டதும், உன் மகன் ஜனமேஜயன் சினம் கொண்டு சர்ப்பயாகம் செய்யப்போகிறான். அனைத்துப் பாம்புகளையும் ஹோமம் செய்து அழிக்கப்போகிறான்.

பின்னர் கவஷாவின் மகனான துரன் என்பவனைக் கொண்டு அச்வமேத யாகம் செய்து, எண்டிசைகளையும் வெல்வான். பூமி முழுவதையும் தனதாக்கிக் கொண்டு, பற்பல வேள்விகளால் இறைவனை ஆராதிக்கப்போகிறான்.

ஜனமேஜயனின் மகன் சதானீகன். அவன் யாக்ஞவல்க்யரிடம் சென்று மூன்று வேதங்களையும், கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறநெறிகளைகளையும் ஐயம் திரிபறக் கற்பான். க்ருபாசார்யாரிடம் அஸ்த்ர வித்யையையும், சௌனகரிடம் ஆத்ம வித்யையையும் கற்றுத் தெளிந்து பகவானை அடைவான்.

சதானீகனின் மகன் ஸஹஸ்ரானீகன். இவனும் அச்வமேத யாகம் செய்வான்.
அவனது வம்சம் முறையே அஸீமக்ருஷ்ணன், நேமிசக்ரன் ஆகியோர். அஸ்தினாபுரம் நீரில் மூழ்கி அழிந்ததும் நேமிசக்ரன் கௌசாம்பி என்னும் நகரத்தில் வாழ்வான். அவனது வம்சம் முறையே சித்ரரதன், கவிரதன், வ்ருஷ்டிமான், ஸுஷேணன், ஸுநீதன், ந்ருசக்ஷு, ஸுகீநலன், பரிப்லவன், ஸுநயன், மேதாவி, ந்ருபஞ்ஜயன், தூர்வன், திமி, பிருஹத்ரன், ஸுதாசன், சதானீகன், துர்தமன், பஹீநரன், தண்டபாணி, நிமி, க்ஷேமகன். ஆகியோர்.
க்ஷேமகன்தான் கலியுகத்தில் சந்திர வம்சத்தின் கடைசி அரசன்.

இனி மகத தேசத்து மன்னர்கள் பற்றிக் கூறிகிறேன்.
ஜராஸந்தனின் மகன் சஹதேவனின் வம்சம் பின்வருமாறு.

மார்ஜாரி, சுருதசிரவா, அயுதா, நிரமித்ரன், ஸுநக்ஷத்ரன், ப்ருஹத்ஸேனன், கர்மஜித், ஸ்ருதஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேமன், ஸுவிரதன், தர்மசூத்ரன், சமன், த்யுமத்சேனன், ஸுமதி, ஸுபலன், ஸுநீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் ஆகியோர். பிருஹத்ரதனின் வழித்தோன்றல்களான இவர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகிறார்கள்.

அனு என்பவனின் வம்சம் முறையே.. ஸபாநரன், காலநரன், ஸ்ருஞ்ஜயன், ஜனமேஜயன், மகாசீலன், மஹாமனஸ்.

மஹாமனஸிற்கு உசீநரன், திதிக்ஷு ஆகிய இரு புதல்வர்கள்.

உசீநரனினின் மகன்கள் சிபி, வனன், சமி, தக்ஷன் ஆகியோர். சிபியின் புதல்வர்கள் விருஷதர்பன், ஸுவீரன், மத்ரன், கைகயன் ஆகியோர்.

திதிக்ஷுவின் வம்சம் முறையே.. ருசத்ரதன், ஹேமன், ஸுதபஸ், பலி. பலிக்கு தீர்கதமஸ் என்ற முனிவரின் அருளால் அங்கன், வங்கன், கலிங்கன், ஸுஹ்மன், புண்ட்ரன், ஆந்திரன் ஆகிய ஆறு புதல்வர்கள் பிறந்தனர்‌.

இவர்கள் தத்தம்‌பெயரிலேயே ஆறு தேசங்களைத் தோற்றுவித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Picture courtesy : Sri. Keerthivasan Rajamani

No comments:

Post a Comment